தாராபுரம்: 81,100 ஓட்டுகளை சுற்றும் தவெக, திமுக, அதிமுக கணக்கு… களம் எப்படி இருக்கிறது? மின்னம்பலம் குழுவின் நேரடி ரிப்போர்ட்!

Published On:

| By Minnambalam Desk

Dharapuram- By Election-Article

அதிமுகவுக்கு இங்கே வேலை செய்யவே ஆட்கள் இல்லை” என்கிறது தவெக.

“எங்கள் 81,000 ஓட்டில் 4,000 கூட போகாது” என்கிறது அதிமுக.

ADVERTISEMENT

“தவெக அதிகபட்சம் 60,000-த்தை தாண்டவே முடியாது… நாங்கள்தான் ஜெயிப்போம்” என்கிறது திமுக.

தாராபுரம் களத்தில் மூன்று கட்சிகளும் போடும் கணக்குகள் இவை.

ADVERTISEMENT

இந்த கணக்குகளுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை நேரில் அறிய தாராபுரம் தொகுதிக்குள் பயணித்தது மின்னம்பலம் குழு.

தாராபுரம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

தவெக வேட்பாளராக சத்யபாமா, திமுக வேட்பாளராக சுகன்யா, அதிமுக வேட்பாளராக பானுமதி, சிபிஐ வேட்பாளராக லெட்சுமணன், நாதக வேட்பாளராக கார்த்திகா களம் காண்கின்றனர்.

கடந்த தேர்தலில் முதலிடம் பிடித்த அதிமுக, 2-வது இடம் பிடித்த திமுக, 3-வது இடம் பிடித்த தவெக என மூன்று கட்சிகளுமே இப்போது தனித்தனி கணக்குகளுடன் களத்தில் நிற்கின்றன.

தாராபுரத்தில் தேர்தல் பணியாற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வாக்காளர்களுடன் மின்னம்பலம் குழு நேரடியாக கலந்துரையாடியது. களத்தில் நடக்கும் தேர்தல் பணிகளையும் நேரில் கவனித்தோம்.

நம்மிடம் பேசிய தவெக நிர்வாகிகள், ”தாராபுரத்தில் தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் நேரடி போட்டி. கடந்த தேர்தலில் அதிமுக முதலிடம் பிடித்திருந்தாலும், இந்த முறை அந்தக் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும்.

நம்பிக்கையில் தவெக

சத்யபாமா அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்து சேர்ந்ந்த பின்னர் அடுத்தடுத்து அந்த கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெகவுக்கு வந்து கொண்டே இருக்கின்றனர். அதனால் உள்ளூரில் தேர்தல் வேலை செய்வதற்கே அதிமுகவுக்கு ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரிகட்ட, ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், கரூர், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருந்து அதிமுகவினர் முகாமிட்டு தேர்தல் பணி செய்கின்றனர். இது எந்த அளவுக்கு அதிமுக வாக்குகளை தக்க வைத்துவிட போகிறது?

எங்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளும் களமிறங்கி பணியாற்றி வருகின்றன. காங்கிரசுக்கும் தாராபுரத்தில் கணிசமான வாக்குகள் இருக்கிறது; அந்த வாக்குகளை முழுமையாக கூட்டணிக்கு கொண்டு வருவதற்காக அமைச்சர் ராஜேஷ்குமார் தொகுதியிலேயே முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகிறார். ராஜ்யசபா எம்.பி. கிறிஸ்டோபர் திலக் கிறிஸ்தவ வாக்குகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்” என்றனர்.

இன்னொரு பக்கம் உள்ளூர் தவெக நிர்வாகிகள் வேறொரு சமூக பிரச்சனையையும் நம்மிடம் சுட்டிக்காட்டினர். அதாவது, “எங்கள் கட்சியில் பெரும்பாலானோர் தலித் நிர்வாகிகள்தான். அதனால் கவுண்டர் வாக்காளர் பகுதிகளுக்கு சென்று வாக்கு கேட்பதில் தயக்கம் காட்டி வந்தனர். ஏனெனில் இந்த தொகுதியின் அடிப்படையே கவுண்டர் ஜாதியினர் கை ஓங்கியதாக இருக்கிறது. தலித்துகளும் இந்த ஜாதி ஆதிக்கத்தை எதிர்க்க முடியாதவர்களாகவே இருந்து வருகின்றனர். இதுதான் அந்த தயக்கத்துக்கு இதுவும் காரணம். ஒருவேளை எங்களுக்கு கடந்த தேர்தலில் வாக்குகள் வராமல் போனதற்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.

இந்த தேக்கநிலையை பொறுப்பு அமைச்சர் அருண்ராஜ், சீனியர் அமைச்சர் செங்கோட்டையன் நேரடியாக களத்தில் இறங்கி உடைத்திருக்கிறார்கள். அதோட அதிமுகவில் இருந்து வந்த உடுமலை ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் மகேந்திரன் உள்ளிட்ட பலருடன் கவுண்டர் பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தோம். இப்ப கூட இதனால கவுண்டர் வாக்காளர்களிடம் இப்ப நல்ல மாற்றம் தெரிகிறது என்கின்றனர்.

தேர்தலுக்கு முன்னர் எங்கள் மீது இருந்த நம்பிக்கை இப்போது பல மடங்கு அதிகமாகி இருக்கிறது. இப்ப கூட விஜய் பிரசாரத்துக்கு வந்த கூட்டத்தைப் பார்த்திருப்பீங்க.. அப்படி ஒரு மக்கள் கூட்டம். இந்த தேர்தலில் போனமுறை திமுகவுக்கு வாக்களித்த பெண்கள் எங்களுக்கு வாக்களிக்க போகிறார்கள்; அதிமுகவினர் ஓட்டும் எங்களுக்கு வரும். சிறுபான்மையினர் ஓட்டும் எங்களுக்கு வரும். போன தேர்தலில் 3-வது இடம் பெற்றிருந்தாலும் முதல்வர் விஜய்க்கான ஆதரவு அலை முன்னைவிட அதிகமாக வீசுகிறது.. அதுவும் தாராபுரத்தில் நிச்சயம் எங்கள் வேட்பாளருக்கு மிக சாதகமான சூழ்நிலைதான் இருக்கிறது. நாங்கள் வெல்வது உறுதி” என நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.

அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 64,373 வாக்குகளை பெற்று 2-வது இடம் பெற்ற திமுகவினர் இம்முறை அந்த வாக்குகளைவிட கூடுதலான வாக்குகளைப் பெற்று வெல்வதில் முனைப்பாக உள்ளனர்.

திமுகவின் ‘ஓட்டு’ கணக்கு

இந்த தொகுதியில் திமுகவின் சீனியர்களான கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, வெள்ளகோவில் சாமிநாதன், சக்கரபாணி, முத்துசாமி, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி, மதுரை மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதா ஜீவன், தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி.., ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, இவர்களுடன் திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என பலரும் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். திமுக இளைஞரணியும் முழு வீச்சில் களமிறக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

போன தேர்தலில் தாராபுரம் நகர் பகுதியில் திமுக அதிகமான ஓட்டுகளை வாங்கியது.. ஆனால் குண்டடம், மூலனூர் ஒன்றியங்களில் அதிமுகதான் லீடு அடிச்சது.. இதில் குண்டடம் ஒன்றியத்தில்தான் இப்போது செந்தில் பாலாஜி முகாமிட்டு இருக்கிறார். அவர் தன்னோட “கரூர் டீமை” புல் ஃபார்மில் இறக்கிவிட்டு களப் பணி செய்து கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு திமுக ‘தலை’களுக்கும் எம்.ல்.ஏ.க்களுக்கும் 40, 45 வார்டுகள் ஒதுக்கப்பட்டு அவர்களது படைபரிவாரங்கள் காலை முதல் மாலை வரை வாக்கு சேகரிப்பதை பார்க்க முடிகிறது.

முல்லை ரிசார்ட்டில் தங்கியிருக்கும் மாஜி அமைச்சர் கே.என்.நேரு, அவருடைய ஸ்டைலில் செயல்படுவதால் திமுகவின் களப் பணி களைகட்டி இருக்கிறது.

முல்லை ரிசார்ட்டுக்கு நாம் சென்ற போது, காலை- மதியம்- இரவு என 3 நேரங்களிலும் கமகம விருந்தை பார்க்க முடிந்தது. சுமார் 1,500-க்கும் அதிகமானோருக்கு ஜெகஜோராக விருந்துதான்.. அதிலும் சுவாரசியம் என்னவெனில், இந்த ரிசார்ட்டில் தங்கி இருந்த தவெக நிர்வாகிகள், தொண்டர்களும் கூட திமுகவினருடன் இணைந்து இந்த விருந்தில் சாப்பிட்டுவிட்டு பிரசாரத்துக்கு போனதுதான்.

நமது மின்னம்பலம் குழுவிடம் பேசிய திமுகவினர், “இந்த தொகுதியில் ஆளும் கட்சி தவெக என்பதால் பிரதானமாக பேசப்படுகிறது. கள நிலவரம் என்னவெனில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டியே. கடந்த தேர்தலில் அதிமுக 81,100 ஓட்டுகளை வாங்கியது; நாங்கள் 64,373 ஓட்டுகளை வாங்கினோம்; தவெக 46,438 வாக்குகளை வாங்கியது. இந்த முறை அதிமுகவின் வேட்பாளர் தவெகவின் வேட்பாளராகி இருக்கிறார். அதுதான் மாற்றம்.

இந்த முறை திமுக, அதிமுக, தவெக 3 கட்சிகளின் வேட்பாளர்களும் தேவேந்திரகுல வேளாளர்கள். திமுகவுக்கான தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் இங்கே சாலிடாகவே இருக்கிறது.

போனமுறை தவெகவுக்கு அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஓட்டுகள் கிடைச்சது.. ஆனால் இந்த முறையும் தவெகவுக்கே அவர்கள் வாக்கு கிடைக்கிறதா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 4 மாத ஆட்சியில் விஜய்யிடம் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டம் கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த டேப்ஸ் திட்டத்தைதான் விஜய் ஆட்சியும் தொடருகிறது. இது ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2 நாட்களுக்கு முன்னர் கூட எங்கள் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர் அந்த முன்னாள் அமைச்சரை பார்த்ததும் டூ வீலரை திருப்பிக் கொண்டு வந்து நின்றார். அப்போது, “சார்.. சாரி.. போன டைம் நாங்க அரசு ஊழியர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில விசிலுக்கு ஓட்டுப் போட்டுட்டோம்.. அதை தப்புன்னு நல்லாவே புரிஞ்சுகிட்டோம். இந்த தொகுதியில 1,236 தபால் ஓட்டுகள் இருக்கு.. எனக்கு தெரிஞ்சு 900-க்கும் மேல் நம்ம கட்சிக்குதான் தபால் ஓட்டுகள் வந்திருக்கு”ன்னு பெருமிதத்துடன் சொல்கிறார்.

அதாவது கடந்த தேர்தலில் தவெகவுக்கு ஓட்டுப் போட்டவர்களே கூட இந்த முறை அந்த கட்சிக்கு ஓட்டுப் போட தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. அதிகபட்சம் அதிமுகவில் இருந்து சிதறும் ஓட்டுகள், காங்கிரஸ் ஓட்டுகள், தவெக ஓட்டுகள் என எப்படி நீங்கள் கணக்குப் போட்டாலும் போன முறை வாங்கிய 46,000-த்தை விட மிக உச்சபட்சமாக 60,000 வரைக்கும்தானே தவெகவால் போக முடியும். இதுவே அதிகம்.. அதைவிட தவெகவால் ஓட்டு வாங்க முடியாது..

ஆனால் எங்களைப் பொறுத்தவரை எங்களது 64,373 வாக்குகளில் எந்த மாற்றமும் வரப் போவது இல்லை. எங்களுக்கு கூடுதலாக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஓட்டும் சிறுபான்மையினர் ஓட்டும் பலம். அதிமுக போன முறை வாங்கிய 81,000 ஓட்டுகளில் தவெக இந்த முறை எவ்வளவு ஓட்டை கைப்பற்றப் போகிறதோ அந்த அதிமுகவின் இழப்பு என்பது எங்களுக்கு நல்ல லீடிங்கை கொடுக்கும்.. எங்களுக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கும். அதனால இந்த முறை இயல்பாகவே தாராபுரத்தில் திமுக வேட்பாளர்தான் வெல்லப் போகிறார். 2-வது இடத்துக்குதான் அதிமுகவும் தவெகவும் போட்டி போட முடியும்” என்கின்றனர்.

தவெகவால் ஜெயிக்கவே முடியாது ஏன் தெரியுமா? அதிமுக நம்பிக்கை

களத்தில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கும் அதிமுகவினரிடம் பேசிய போது, ”எங்களுக்கும் திமுகவுக்கும்தான் இங்கே போட்டி. எங்களைப் பொறுத்தவரை இங்கே தவெகவுக்கு 3-வது இடம்தான் கிடைக்கும். இது அதிமுகவின் தொகுதி. இங்கே அதிமுகவுக்கு அதிகமான வாக்கு வங்கி உள்ளது. ஒரு சத்யபாமா போவதாலே ஒன்றிரண்டு நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கவுன்சிலர்கள் போய்விடுவதாலே எங்களது 81,100 வாக்குகளில் கொஞ்சம் வாக்குகள்தான் வெளியேறும்.

நீங்க கிரவுண்ட்ல பார்த்தால், மதுராந்தகத்தை விட தாராபுரத்தில்தான் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு போகிற இடம் எல்லாம் பொதுமக்களே எதிர்ப்பு தெரிவிப்பதையும் விரட்டியடிப்பதையும் தமிழ்நாடே பார்த்து கொண்டிருக்கிறது. அதிமுகவினர் என்றுதான் இல்லை.. சாமானிய வாக்காளர்கள் கூட, “நாங்க எல்லாம் நம்பிதானே அந்த அம்மாவுக்காக இரட்டை இலையில ஓட்டு போட்டோம்.. இப்ப துரோகம் செய்துவிட்டு சினிமா நடிகர் கட்சிக்கு ஓடிப் போயிருச்சு.. அந்த அம்மாவை நம்பி எப்படி திரும்பவும் ஓட்டு போடுவோம்? அதெல்லாம் நடக்குமா?” என்கிற கொந்தளிப்பு எல்லா இடத்திலும் இருக்குது..

அதனாலதான் தவெகவின் சத்யபாமாவுக்கு அதிமுகவின் ஓட்டுகள் அப்படியே போகப் போவது இல்லைன்னு சொல்றோம்.. சத்யபாமாவுடன் தவெகவுக்கு போன சிலரால் கொஞ்சம் ஓட்டுகள் கிடைக்கும் அவ்வளவுதான்.

இன்னொன்று தவெக போன முறை 46,438 ஓட்டு வாங்கியது.. இந்த டைம் அப்படி இப்படின்னு தேற்றினாலும் கூட எங்க ஓட்டுக பிரிச்சா கூட அவர்களால் 50,000-த்தை தாண்ட முடியாது.. நாங்க ஏற்கனவே 81,100 ஓட்டு வாங்கி இருக்கிறோம்.. அதனால நாங்க 70,000-க்கும் அதிகமாக ஓட்டு வாங்குவோம்.. போன டைம் திமுகவுக்கும் எங்களுக்கும் 16,727 வாக்கு வித்தியாசம் இருந்தது.. அதுல வேணும்னா மாற்றம் வரும்.. எப்படியாக இருந்தாலும் அதிமுக நிச்சயம் திமுகவைவிட சுமார் 5,000 முதல் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பது என்னவோ உறுதி.. இதுதான் இங்கே கள நிலவரம்” என ஆணித்தரமாக சொல்கின்றனர்’அதிமுகவினர்.

தாராபுரத்தைப் பொறுத்தவரை…

போன முறை வாங்கிய ஓட்டுகள் கொஞ்சம் குறையாலும்.. ஆனாலும் குறைவான வாக்கு வித்தியாசத்திலாவது நாங்களே வெல்வோம் என்கிறது அதிமுக

போனமுறை வாங்கிய ஓட்டுகளை விட நிச்சயம் கூடுதல் வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்; அதிமுகவின் ஓட்டுகளை தவெக இழுப்பதால் இயல்பாகவே நாங்கள் வெல்வோம் என்கிறது திமுக.

தேர்தல் வெற்றி, விஜய் நல்லாட்சி மூலமாக அதிமுக- திமுகவுக்கான பொதுமக்களின் வாக்குகள் எங்களுக்குதான் திரும்பும்.. அதிமுக வாக்குகளும் பெருமளவு எங்களுக்கு வரும்.. நாங்கள்தான் ஜெயிப்போம் என்கிறது தவெக.

3 கட்சிகளின் கணக்குகளிலும் பொதுவாக இருக்கும் ஒரே எண், கடந்த தேர்தலில் அதிமுக பெற்ற 81,100 வாக்குகள்தான். அந்த 81 ஆயிரம் வாக்குகள் இம்முறை எப்படி பிரிகின்றன, எங்கே செல்கின்றன என்பதற்கான பதிலில்தான் தாராபுரத்தின் முடிவு காத்திருக்கிறது.

அதே நேரத்தில், ஓட்டுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என ஆளும் தவெக முடிவு செய்திருந்தது. அதனால், ”தவெக பணம் கொடுத்தால் நாமும் பணம் கொடுப்போம்” என திமுகவும் அதிமுகவும் காத்திருந்தன.

இந்த தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு அன்றாட செலவுக்கு தலா ரூ.300ஐ தவெக, திமுக, அதிமுக கட்சிகள் கொடுத்து வருகின்றன. இது இல்லாமல் பூத் செலவுகளுக்கு பூத் வாரியாகவும் பணத்தை 3 கட்சிகளுமே ரெடி செய்து வைத்திருக்கின்றன.

திடீர் பரபரப்பு

இந்த நிலையில், திடீரென இன்று காலை முதலே தாராபுரம் தொகுதியில் தவெக, ஓட்டுக்கு பணம் தரப் போகிறது என்கிற தகவல் காட்டு தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. முதல்வர் விஜய் பிரசாரம் செய்துவிட்டு போன பிறகும் தொகுதி நிலவரம் சரியாக இல்லை என்பதால் இந்த முடிவை தவெகவினர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தவெகவினர் பணம் கொடுக்க தயாராகிவிட்டதால் அவர்கள் கொடுத்து முடித்த பின்னர் திமுகவும் அதிமுகவும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் என்கின்றன கள நிலவரங்கள்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share