‘குதிரை பேரம்’ பற்றி ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம்? அருண்ராஜ் கேள்வி

By Mathi

|

Published on 16 Nov 2026, 5:58 PM

Arun Raj-Stalin

‘விரைவில் திமுக ஆட்சி அமையும்’ என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதே குதிரை பேரத்துக்கு சாட்சி என்று அமைச்சர் அருண்ராஜ் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் கூறியிருப்பதாவது: ”உங்கள் மீது ஊழல் வழக்கு பதியலாம்” என்று உச்ச நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நேரு இல்ல திருமணத்தை இன்று நடத்தி வைத்து பேசிய முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் தன்னையும் அறியாமல் தான் இப்போது திரை மறைவில் செய்து கொண்டிருக்கிற வேலைகளை பற்றிய ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை மைக் முன் மக்களிடம் அளித்திருக்கிறார்.

ADVERTISEMENT

“விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது. விரைவில் நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர்.

2026 ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் 35% வாக்குகளையும் 108 இடங்களையும் கொடுத்து மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்வு செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல… 2021- முதல் 2026 வரை சீன் ஆட்சி நடத்தி வந்த ஸ்டாலினை அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி மக்களே தோற்கடித்துவிட்டார்கள்.

ADVERTISEMENT

மக்களின் தீர்ப்பை மதித்து மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ள காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு இதுவரை கண்டிராத கூட்டணி ஆட்சியை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

அண்மையிலே தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் கூட மக்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வெற்றி பெற வைத்து, நமது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளனர்.

ADVERTISEMENT

ஆனாலும், கடந்த மே மாதத்தில் இருந்தே… இந்த ஆட்சி மூன்று மாதம் நீடிக்காது. ஆறு மாதம் நீடிக்காது என்றெல்லாம் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் உட்கார்ந்து பித்து பிடித்தது போல சோழி உருட்டிக் கொண்டிருந்த ஸ்டாலின் அவர்கள்… அதிகாரம் பறிபோன பதற்றத்திலும் பரிதவிப்பிலும் இந்த ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தார். அது தொடர்பான குதிரை பேர வழக்கு கூட இப்போது நீதிமன்றத்திலே நடந்து வருகிறது.

ஆனால் நம் மீது குதிரை பேரம் என்ற பொய்ப் புகாரை கடந்த ஆறு மாதமாக சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின்… உண்மையிலேயே தனது ஓய்வுக் காலத்தை குதிரை பேர முயற்சியில்தான் தீவிரமாக செய்துகொண்டிருக்கிறார் என்பதை இன்றைய அவரது திருமண விழா பேச்சு காட்டுகிறது.

விரைவில் நமது ஆட்சி உதயமாகத்தான் போகிறது என்றால் என்ன அர்த்தம்? 2026 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு 2031 வரை பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டமும் ஜனநாயகமும். ஆனால் ஆறுமாத முடிவிலேயே விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் என்று ஸ்டாலின் பேசுகிறார் என்றால், அவர் நடத்தும் குதிரை பேர முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அவர் திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் சொல்கிறாரா? குதிரை பேரம் நடத்துவது யார் என்பது இப்போது மக்களுக்கு தெரிந்துவிட்டது.

பள்ளிக் கல்வி, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை என்று எல்லா துறையிலும் உலக மகா ஊழல் செய்துவிட்டு… நூல்களில் கூட ஏ.ஐ. ஊழல் செய்துவிட்டு மக்கள் முன் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழலில் இருக்கும் ஸ்டாலின், அதற்கு மாறாக… “விரைவில் நமது ஆட்சி உதயமாகப் போகிறது” என்று பகிரங்கமாக பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்?

ஆளுங்கட்சியாக இருந்து ஊழல் செய்தது போக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஊழல் செய்துகொண்டிருக்கிறார், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே இது காட்டுகிறது. இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel