தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரிடம் 4 ஆண்டுகளும், பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் இரண்டரை ஆண்டுகளும் பணியாற்றியபோது கற்றுக்கொண்ட தலைமைத்துவப் பாடங்களை மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி. சோமநாதன் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்.
டெல்லியில் நிதி ஆயோக் சார்பில் நேற்று நவம்பர் 17-ந் தேதி Leadership as a Mission என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மாநில மற்றும் மத்திய அரசுகளின் தலைவராகத் தொடர்ந்து 25 ஆண்டுகள் பதவி வகித்ததை முன்னிட்டு இந்தப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.

இதில் மத்திய அரசின் கேபினட் செயலாளர் டி.வி. சோமநாதன் பேசியதாவது: தலைமைத்துவத்தைப் பற்றிப் புத்தகங்களைப் படித்தும் ஆய்வுகள் மூலமும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், சிறந்த தலைவர்களுடன் நேரடியாகப் பணியாற்றி, அவர்களது அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது அதைவிட மதிப்புமிக்கது.
இந்தியா போன்ற கடுமையான ஜனநாயகப் போட்டி நிலவும் நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக நீண்டகாலம் பதவி வகிப்பதே சிறந்த தலைமைத்துவத் திறனுக்குச் சான்றாகும் என்று கருதுகிறேன்.

கலைஞரிடம் 4 ஆண்டுகள்.. மோடியிடம் இரண்டரை ஆண்டுகள்
அப்படிப்பட்ட இரண்டு தலைவர்களுடன் பணியாற்றவும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. முதலாவதாக, தமிழக முதலமைச்சராக இடைவெளிகளுடன் 19 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்த கலைஞர். அவரிடம் சுமார் 4 ஆண்டுகள் முதலமைச்சரின் செயலாளராகப் பணியாற்றினேன்.
இரண்டாவதாக, அரசின் தலைவராகத் தொடர்ந்து 25 ஆண்டுகள் பதவி வகித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி. அவரது அலுவலகத்தில் இரண்டரை ஆண்டுகள் இணைச் செயலாளராகவும் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன்.
அரசியல் தலைவர்கள் அரசியலையும் நிர்வாகத்தையும் ஒருசேர கவனிக்கின்றனர். ஆனால், அரசு அதிகாரிகள் அரசியலில் ஈடுபடக் கூடாது. அரசியல் நடுநிலையுடன் செயல்படுவது அவர்களது கடமை.
அதற்காக அரசியல் தலைவர்களிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ளக் கூடாது என்று அர்த்தமல்ல. அரசியலிலிருந்து விலகியிருந்தாலும், சிறந்த தலைவர்களின் நிர்வாகத் திறன்களை நாம் கற்றுக்கொள்ள முடியும்; கற்றுக்கொள்ளவும் வேண்டும்.

பிரதமர் மோடி நேரடியாகக் கவனித்த திட்டங்கள்
ஓர் அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அதற்குக் கீழ்நிலை அதிகாரிகளும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதற்குப் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை உதாரணமாகக் கூறலாம்.
ஜன் தன் யோஜனா, தூய்மை இந்தியா இயக்கம், உஜ்வாலா திட்டம், சௌபாக்யா மின்மயமாக்கல் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்ட முக்கிய அரசுத் திட்டங்களில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார். ஒவ்வொரு திட்டத்துக்கும் தெளிவான இலக்குகளையும் காலக்கெடுவையும் நிர்ணயித்தார். தூய்மை இந்தியா இயக்கத்தின் இலக்கை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளுடன் இணைத்தார். இந்த திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அவரே நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் கடினமான கேள்விகளையும் எழுப்பினார். பிரதமர் நேரடியாகக் கவனம் செலுத்தியதால், கீழ்நிலை அதிகாரிகளும் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தினர்.
பணம் செலவானதா? மக்களுக்குப் பலன் கிடைத்ததா?
அரசுத் திட்டங்களை ஆய்வு செய்யும்போது உயர் அதிகாரிகள் என்ன கேள்விகளைக் கேட்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். ஒரு திட்டத்துக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்று மட்டுமே கேட்டால், கீழ்நிலை அதிகாரிகளும் செலவுக் கணக்குகளிலேயே கவனம் செலுத்துவார்கள்.
அதற்குப் பதிலாக, அந்தத் திட்டத்தின் மூலம் எத்தனை குடும்பங்கள் பயனடைந்துள்ளன என்று கேட்டால், மக்களுக்கு உண்மையில் பலன் கிடைத்துள்ளதா என்பதை அறிய முயற்சி செய்வார்கள். எனவே, அரசு அதிகாரிகள் பணம் செலவிடப்பட்டுள்ளதா என்பதை மட்டும் பார்க்காமல், அந்தப் பணத்தால் மக்களுக்கு என்ன பயன் கிடைத்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேளுங்கள்
அரசு நிர்வாகத்தில் கீழ்நிலையிலிருந்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல்கள் வரும்போது, அவை பல நிலைகளில் சுருக்கப்படுகின்றன. இதனால் ஒட்டுமொத்தப் புள்ளிவிவரங்கள் சரியாக இருந்தாலும், தனிப்பட்ட ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினை உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் போய்விடலாம். எனவே, உயர் அதிகாரிகள் தங்களுக்கு வரும் அறிக்கைகளை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டும்.
கள ஆய்வுகளுக்குச் செல்லும்போது முதலில் மக்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வப்போது மக்களின் புகார்களை முழுமையாகப் படிக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு துறைச் செயலாளர்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில், தங்களைச் சந்திக்க வரும் நபர்களை முடிந்தவரை நேரில் சந்தித்து அவர்களது கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன். நமக்குப் பிடிக்காத நபர்களாக இருந்தாலும், அவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். மக்களிடம் நேரடியாகப் பேசும்போதுதான் அரசு அறிக்கைகளில் இடம்பெறாத பல உண்மையான பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியும்.

அரசு கோப்புகள் தடையல்ல
அரசு அலுவலகங்களில் கோப்புகளைக் கையாள்வது சில நேரங்களில் பணிகளுக்குத் தடையாக இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், எனது அனுபவத்தில் அது உண்மையல்ல. ஒரு முடிவை எடுக்கும்போது, அந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது, வேறு என்ன வழிகள் பரிசீலிக்கப்பட்டன, எந்தத் தகவல்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது என்பதைக் கோப்புகளில் தெளிவாகப் பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் அந்த முடிவு சரியானதா என்பதைப் பின்னர் ஆய்வு செய்ய முடியும். முடிவெடுத்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டாலும், அந்தப் பணியைத் தொடர்ந்து செயல்படுத்த முடியும். ஒரு நல்ல நோக்கத்துக்காகச் செயல்படுகிறோம் என்பதற்காக அரசு விதிமுறைகளைப் புறக்கணிக்கக் கூடாது. நல்ல நோக்கமும் முறையான நடைமுறைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். வழக்கமான நடைமுறையிலிருந்து மாறுபட்ட முடிவை எடுத்தாலும், அதற்கான காரணங்களைத் தெளிவாகப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி. சோமநாதன் பேசினார்.









