கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகள் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தில் ஏரிக்கரையோரம் வசித்து வருபவர் சந்திரன். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு தேவதர்ஷினி (4), தேவஜனனி (2) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
நேற்று (நவம்பர் 17) இரவு புஷ்பா தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு, தூங்கிக்கொண்டிருந்த மூவரையும் கடித்ததாக தகவல்கள் வருகின்றன.
பாம்பு கடித்த வலியால் புஷ்பா அலறியுள்ளார். அவரது சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 4 வயது தேவதர்ஷினி, 2 வயது தேவஜனனி ஆகிய இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாய் புஷ்பாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிஞ்சு குழந்தைகள் பாம்பு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் மூக்கனூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.









