தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை போல் இனி மதுபானக் காப்பீடும் கொண்டு வருவார்கள் போல. இது மருத்துவப் பணிகள் கழகமா… இல்லை மதுபானப் பணிகள் கழகமா? என தவெக அரசின் நடவடிக்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரித்து பழுது நீக்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை மருத்துவப் பணிகள் கழகம் கோரியிருந்ததற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், டிஎன்எம்எஸ்சி எனப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் டாஸ்மாக் ஆகிய இரண்டுமே மாநில அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களாகும். ஒரு பொதுத் துறை நிறுவனம் மற்றொரு பொதுத் துறை நிறுவனத்திடம் தொழில்நுட்ப உதவி கோரியதன் அடிப்படையில், இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாஸ்மாக் கிடங்குகளை மருத்துவப் பணிகள் கழகம் பராமரிப்பதில் தவறேதும் இல்லை என தெரிவித்தாா்.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக ஆட்சியில் நிர்வாகத் திறன் எவ்வளவு தூரம் ‘புரட்சிகரமாக’ மாறிவிட்டதற்கு சாட்சி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வது!.
அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவக் கருவிகளைக் கொள்முதல் செய்து விநியோகிக்கும் உன்னத பணியைச் செய்யும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம், அம்பத்தூர், திருமழிசை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைக்கும் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டிருப்பது வெட்ககேடு.
தரமான மருந்துகளைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்வது, அவற்றைச் சேமிப்பது, தரத்தைப் பரிசோதிப்பது, அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பதுஆகிய பணிகளுக்காகதான் மருத்துவ பணிகள் கழகம் உருவாக்கப்பட்டது. டாஸ்மாக் கிடங்குகளின் மேற்கூரை கசிவு சரிசெய்தல், தரை ஓடுகள் மாற்றுதல், மழைநீர் வடிகால் சீரமைப்பு போன்ற பணிகள் செய்வது என்பது மருத்துவ பணிகள் கழகத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது.
பாராசிட்டமால் மாத்திரைகளையும், இன்சுலின் மருந்துகளையும், அறுவை சிகிச்சை உபகரணங்களையும் இதுவரை பாதுகாத்து வந்த மருத்துவப் பணிகள் கழகம், இனி டாஸ்மாக் கிடங்குகளின் மேற்கூரை ஒழுகுகிறதா? ஷட்டர்கள் சரியாக மூடுகிறதா? என்பதைப் பரிசோதிக்கும் ‘உன்னதப்’ பணியை செய்ய போகிறது!
‘சரக்கு’ பாதுகாப்பாக இருந்தால்தான், மருத்துவமனைகளுக்கு ‘வேலை’ இருக்கும் என்ற பொருளாதாரச் சுழற்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை முதல்வர் விஜய் எடுத்திருக்கிறாரா? அரசின் புதிய சுகாதாரக் கொள்கையில், உடல்நலத்தைக் காப்பதற்கான மருந்துகளுடன் உற்சாகத்தைக் காப்பதற்கான மதுபானங்களின் சேமிப்புக் கிடங்குகளும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன.
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காகத் தங்கத்தை கொள்முதல் செய்து நகைக்கடை அனுபவம் பெற்ற மருத்துவப் பணிகள் கழகம், இப்போது டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைப்பதன் மூலம் கட்டுமானத் துறையிலும் கால்பதிக்கிறது. உண்மையை சொல்வது என்றால், ‘மருத்துவம் – நகைக்கடை – மதுபானக் கிடங்கு’ எனத் தன்னை ஒரு ஆல்-ரவுண்டர் நிறுவனமாக மாற்றிக் கொண்டிருக்கிறது மருத்துவப் பணிகள் கழகம். ஒரு மருத்துவ நிறுவனத்தின் நிபுணத்துவத்தை வேறு துறைக்குப் பயன்படுத்துவதுதான் நிர்வாக நடவடிக்கையா?
தடுப்பூசி மற்றும் இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளைத் தட்பவெப்ப நிலை மாறாமல் பாதுகாக்கும் கிடங்குகளைப் பராமரித்த அனுபவத்தால், மதுபானங்களை பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கலாம் போல! உயிர் காக்கும் தடுப்பூசிகளுக்கும், ‘உற்சாகம்’ தரும் மதுபானங்களுக்கும் ஒரே மாதிரியான தொழில்நுட்பப் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பதை கண்டறிந்த அறிவாளிகள் நிரம்பிய அரசு அல்லவா விஜய் ஆட்சி!
முதல்வர் விஜய் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள 108 அவசர உதவி மையத்தில் ஆய்வு செய்திருக்கிறார். மறுபக்கம் மருந்துகளை வாங்க உருவான மருத்துவப் பணிகள் கழகம், டாஸ்மாக் கிடங்குகளின் கூரைகளை சரி செய்யப் போகிறது. இதுதான் தவெக அரசின் சுகாதார வரைபடமா? ஆம்புலன்ஸ்களை அழைக்கும் இடத்தில் முதல்வர் ஆய்வு. அதே நேரத்தில் டாஸ்மாக் கிடங்குக்கு அவசர சீரமைப்பு! மருத்துவத்தையும் மதுவையும் ஒரே நிர்வாகத்தின் இரு கண்களாக பாதுகாக்கிறார் முதல்வர்.
தேனியில் அமரர் ஊர்தி கிடைக்காததால், ஆதரவற்ற மூதாட்டி சீதாலட்சுமி உடல் தள்ளுவண்டியில் வைத்து 2 கி.மீ தூரம் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவலம் 10 நாட்களுக்கு முன்புதான் நடந்தது. இறுதியாக உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல ஒரு அமரர் ஊர்தியைக் கொடுக்க வக்கில்லாத அரசுதான், டாஸ்மாக் கிடங்குகளில் மழைநீர் ஒழுகாமல் பார்த்துக்கொள்வது பெரிய நகைமுரண்!
அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை; நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைக்கவில்லை; மருத்துவ உபகரணங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை; மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை; படுக்கைகள் இல்லை; ஒழுகும் மருத்துவமனை கூரைகள்; பழுதான ஸ்கேன் இயந்திரம் என எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்னைகள் பற்றி புகார்கள் வருகின்றன. அதையெல்லாம் சரி செய்யாமல் டாஸ்மாக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கிற அவலத்தை என்ன சொல்ல?
மருந்துக் கிடங்குகளைக் காப்பாற்ற உருவான கழகம், மதுக் கிடங்குகளையும் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இனி மதுபானக் காப்பீடும் கொண்டு வருவார்கள் போல!
மருத்துவப் பணிகள் கழகமா… இல்லை மதுபானப் பணிகள் கழகமா? என்பதை தெளிவுபடுத்திவிடுங்கள்! ஏன் என்றால் பாராசிட்டமாலும் குவார்ட்டரும் ஒரே கூரையில் இருக்க முடியாது. ‘மருந்து’ம் ‘மது’வும் வேறு வேறு!” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.









