வங்க கடலில் உருவான அக்வான் புயல் (Cyclone Akvan) ஆந்திராவின் நெல்லூர் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அதன் பாதை மாறி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள அக்வான் தீவிர புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இன்று (நவம்பர் 18) காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே 570 கி.மீ. தொலைவில் அக்வான் தீவிர புயல் மையம் கொண்டுள்ளது.
மேலும், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு – தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது.
அக்வான் தீவிர புயல் தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20-ந் தேதி நண்பகலுக்குள் ஆந்திரா மாநிலத்தின் நரசாபுரம் முதல் ஒடிசாவின் பூரி வரையிலான கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறிப்பாக வடக்கு ஆந்திரா, ஏனாம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு இடையே தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 110 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.









