சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதற்காக ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த அழைப்பைத் தவிர்த்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக சகோதரர்களைப் போல நெருக்கமாகப் பழகியவர்கள் ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின். ஸ்டாலினை தவிர நான் வேறு எந்த அரசியல்வாதியையும் அண்ணன் என்று கூறியதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரிவித்து கொள்ளும் பிறந்தநாள் வாழ்த்துகள் இணையத்தில் வைரலாகும்.
ஆனால் இவர்களுக்கிடையேயான உறவில் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் விரிசல் விட தொடங்கியது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கோரி கடுமையான நிபந்தனைகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்தது இந்த விரிசலை மேலும் அதிகரித்தது.

இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து 6 மாதங்களுக்கு பிறகு தனது தாயாரின் சுயசரிதை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்காக முன்னாள் முதல்வர் ஸ்டாலினை அழைக்க காங்கிரஸ் தலைமை விரும்பியிருக்கிறது.
இதனால் ராகுல் காந்தி அலுவலகத்தில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது.
அப்போது, மற்ற நிகழ்ச்சிகளில் தான் பிஸியாக இருப்பதாக கூறி மு.க.ஸ்டாலின் பேச மறுத்ததாகவும் அதேநேரத்தில், சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
முன்னதாக, சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக திமுக தரப்பில் ஐந்து முறை அழைப்பு விடுக்கப்பட்ட போது ராகுல் காந்தி அதை ஏற்கவில்லை என திமுக மூத்த தலைவர்கள் கூறியதாக தி இந்து ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், ”அழைப்பை ஏற்பதும் ஏற்காததும் எங்களுடைய விருப்பம். ஏற்குமாறு யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அழைப்பு வந்திருக்கலாம். ஏனென்றால் சோனியா காந்தி எங்கள் தலைவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அதுபோலத்தான் எங்களது தலைவரும். நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்பது வசதி, சூழ்நிலைக்கு ஏற்ப அமையும். ஆகவே இதுஒரு பிரச்சினையல்ல” என்று கூறினார்.
இதற்கிடையே, சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.









