திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த சூரசம்ஹார விழாவின் போது முதலமைச்சருக்கு அரோஹரா என்று பாடியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் இயல் இசை நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில், “நம் தமிழக முதல்வர் வேண்டிக் கொண்டது போல் நாம் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு என்று சொல்லியிருக்கிறேன். “முருகனிடம் வேண்டும் வரம் கேளுங்கள், வெற்றி உண்டு பாருங்கள்” என்றுதான் பாடினேன். இப்போது புரிகிறதா? நான் முதல்வர் விஜய்யைச் சாட்சியாகச் சொல்லியிருக்கிறேன். வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு சாட்சி வேண்டும்; நீங்களும் முருகனிடம் வேண்டும் வரம் கேட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டு என்று சொல்லியிருக்கிறேன். இதில் என்ன குறை இருக்கிறது? எல்லோரும் சேர்ந்து என்னைத் திட்டுகிறீர்கள்.முருகனுக்கு ஏராளமான பாடல்களை நான் பாடியிருக்கிறேன். தமிழ் அறிந்த நான் இதில் பிழை செய்வேனா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் ‘தெருக்கூத்தாடிகளை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் இப்படித்தான் இருக்கும்’ என்று சேகர்பாபு ஐயா பேசியிருக்கிறார். வயதில் முதிர்ந்த அவர் இப்படிப் பேசலாமா? எங்களுடைய மனது புண்பட்டுவிட்டது. என் மனது மட்டுமல்ல, மொத்த கிராமிய இசைக் கலைஞர்கள் அத்தனை பேரையும் இழிவுபடுத்திவிட்டீர்கள்” என்று குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் இன்று (நவம்பர்18) அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “திருச்செந்தூர் மேடையில் “முதல்வருக்கு அரோஹரா” என்று நான் பாடவில்லை. வேறொருவர் பாடிவிட்டார்.
முதல்வரைப் போல் முருகனிடம் வேண்டிக் கொண்டால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று மட்டுமே நான் பாடினேன். இது உங்களைப் பாதித்திருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். இனி கவனமாக இருப்பேன் “என தெரிவித்துள்ளார்.
தமிழ் அறிந்த நான் பிழை செய்வேனா என நேற்று கேள்வி எழுப்பிய புஷ்பவனம் குப்புசாமி இன்று வருத்தம் தெரிவித்துள்ளார்.










