திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த சூரசம்ஹார விழாவின் போது முதலமைச்சரைப் பாராட்டிப் பாடியதாக இயல், இசை நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் விளக்கம் அளித்து அளித்துள்ளார்.
அதில், “திருச்செந்தூரில் நடந்த இசைக் கச்சேரியில் நான் பாடிய பாடலைக் குறை சொல்லி பலரும் என்னைத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் திட்டும் அளவிற்கு நான் எதுவும் பாடவில்லை. திட்டுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு; பாராட்டும் நீங்கள்தானே திட்டுகிறீர்கள்! ஆனால், எதற்காகத் திட்டுகிறோம் என்று தெரிந்து திட்ட வேண்டும்.
நான் பாடிய பாடலில் எந்தக் குறையும் இல்லை. நான் பாடியது இதுதான்: “நம் தமிழக முதல்வர் போல் அங்கு கமா (,) இருக்கிறது… நம் தமிழக முதல்வர் போல் வேலெடுத்துப் பகை முடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு.
இப்போது புரிகிறதா? யாருக்கு வெற்றி நிச்சயம் உண்டு? நம் தமிழக முதல்வர் வேண்டிக் கொண்டது போல் நாம் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு என்று சொல்லியிருக்கிறேன். “முருகனிடம் வேண்டும் வரம் கேளுங்கள், வெற்றி உண்டு பாருங்கள்” என்றுதான் பாடினேன். இப்போது புரிகிறதா? நான் முதல்வர் விஜய்யைச் சாட்சியாகச் சொல்லியிருக்கிறேன். வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு சாட்சி வேண்டும்; நீங்களும் முருகனிடம் வேண்டும் வரம் கேட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டு என்று சொல்லியிருக்கிறேன். இதில் என்ன குறை இருக்கிறது? எல்லோரும் சேர்ந்து என்னைத் திட்டுகிறீர்கள்.
முருகனுக்கு ஏராளமான பாடல்களை நான் பாடியிருக்கிறேன். தமிழ் அறிந்த நான் இதில் பிழை செய்வேனா? முருகனை ஒப்பிட்டுப் பாடியிருக்கிறேன் என்று சொல்கிறார்கள். எங்கே ஒப்பீடு இருக்கிறது? சாட்சியாகத்தான் நான் அவரை வைத்திருக்கிறேன்; முருகனோடு நான் ஒப்பிடவில்லை. ஆகவே, முருகப்பெருமானின் பேரருளுக்கு நிகர் எதுவும் இல்லை, அவருக்கு நிகர் யாருமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நான் யாரையும் ஒப்பிடவோ, குறை சொல்லவோ இல்லை; முருகப்பெருமானைத்தான் பாடியிருக்கிறேன். இதை அறிந்து கொண்டு, மேற்கொண்டு திட்டுவதை விட்டுவிடுங்கள். திட்டுவது என்றால் எப்படி? ‘தெருக்கூத்தாடிகளை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் இப்படித்தான் இருக்கும்’ என்று சேகர்பாபு ஐயா பேசியிருக்கிறார். வயதில் முதிர்ந்த அவர் இப்படிப் பேசலாமா? எங்களுடைய மனது புண்பட்டுவிட்டது. என் மனது மட்டுமல்ல, மொத்த கிராமிய இசைக் கலைஞர்கள் அத்தனை பேரையும் இழிவுபடுத்திவிட்டீர்கள்.
சென்ற ஆண்டில் இதே இசைக் கலைஞர்களை வைத்துதானே நீங்கள் நிகழ்ச்சி நடத்தினீர்கள்? சென்ற உங்கள் ஆட்சியில் இதே தெருக்கூத்தாடிகள் பாடிய பாட்டைத்தானே எல்லாக் கலைஞர்களும் மேடையில் பாடினார்கள்? நீங்களும் கேட்டு ரசித்தீர்கள். இப்பொழுது நாங்கள் தெருக்கூத்தாடிகளாக ஆகிவிட்டோமா? தெருக்கூத்தாடிகள் என்றால் அவ்வளவு இளப்பமா?
சிவபெருமானே கூத்தன்தான்; சிவபெருமானே ஆனந்த தாண்டவம் ஆடிய கூத்தன்தான். கூத்து என்றால் இழிவு இல்லை ஐயா! தயவுசெய்து கோபத்தில் கூட இப்படிப்பட்ட வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தாதீர்கள்; மொத்த கலைஞர்களையும் புண்படுத்தாதீர்கள்.
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அன்பர்களே, முருகன் அன்பர்களே, உங்களுக்குச் சொல்லிக் கொள்கின்றேன்; நான் யாரையும் புண்படுத்தவோ, உயர்த்திப் பேசவோ, ஒப்பிடவோ இல்லை. எங்களிடம் எந்தக் குறையும் இல்லை. நீங்கள் எதுவாக இருந்தாலும் அன்பாகச் சொல்லுங்கள்; நாங்கள் அதைக் கேட்டுக்கொள்கிறோம், அதன்படி நடக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால், எங்களைத் திட்டுவதை விட்டுவிட்டு, எங்கள் மொத்த கலைஞர்களையும் இழிவுபடுத்துவதை விட்டுவிட்டு நல்லதைச் சொல்லுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.









