திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு ‘உள்ளடி வேலை’ பார்க்கிறதா? என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே அமைந்துள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை நவம்பர் 17-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு, விசாரணையை இன்று ஒத்திவைத்தது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் விஜய் அரசு முன்வைத்த வாதங்கள் குறித்து திருப்பரங்குன்றம் வழக்கில் அர்ச்சகர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் சார்பாக ஆஜராகி வரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எழுப்பி உள்ள கேள்விகள்:
- மதுரை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் முன் இந்து சமய அறநிலையத்துறையின் எழுத்துப்பூர்வ நிலைப்பாட்டின்படி, தர்கா அருகில் இருக்கக்கூடிய கிரானைட் தூண் கோயிலுக்கு சொந்தமானது என்ற நிலைப்பாடு எடுக்கப்படவில்லை. தவெக அரசு இசுலாமியர்களின் சொத்தை அபகரிக்க முயற்சிப்பது ஏன்?
- உச்சநீதிமன்றத்தில் புதிய நிலைப்பாட்டை எடுக்க யார் நிர்பந்தம் தந்தது?
- நேற்று சிக்கந்தர் தர்காவுக்கும், தர்கா அருகிலுள்ள கல்தூணுக்குமிடையிலான தூரத்தையும் அதிகரித்து சொல்கிறது தவெக அரசு- ஏன்?
- கார்த்திகை தீபம் ஏற்றும் இடமும் மோட்ச தீபம் ஏற்றும் இடமும் அருகருகே அமைந்திருக்க, இரண்டும் ஒன்றுதான் என்ற வாதத்தை இந்து சமய அறநிலையத்துறை உச்சநீதிமன்றத்தில் தவறாக முன்வைத்தது ஏன்?
- சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் உரிய முறையில் வாதிடாமல் கோட்டை விட்ட, மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா மற்றும் சேகர் நாப்டேவை இந்து சமய அறநிலையத்துறைக்கு மூத்த வழக்கறிஞர்களாக அமர்த்தியது ஏன்?
- TVK – வின் கரூர் வழக்கு, ஆதவின் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு, TVK- ன் மற்ற வழக்குகளில் மூத்த வழக்கறிஞர்கள், இந்தியாவின், உச்ச நீதிமன்றத்தின் மிக முக்கியமான வழக்கறிஞர்களான அபிஷேக் மனுசிங்வி, கோபால் சுப்ரமணியம், அரியமா சுந்தரம் உள்ளிட்டோர் ஆஜரானபோது, தமிழ்நாட்டின் மிக முக்கியமான வழக்கான திருப்பரங்குன்றம் வழக்கில், நீதிபதிகள் கேட்கும் வகையிலான வாதங்களை முன்வைக்கக்கூடிய, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களை நியமிக்காதது ஏன்?
- நேற்றைய திருப்பரங்குன்றம் வழக்கின் வாதத்தில், இந்து சமய அறநிலை துறைக்காக வாதிட்ட, மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே சில நிமிடங்கள் மட்டும் பேசியது ஏன்?
- இன்று நடக்க இருக்கும் நீதிமன்ற வாதங்கள் முறையாக முன் வைக்கப்படுமா?
இவ்வாறு வாஞ்சிநாதன் கேள்வி எழுப்பி உள்ளார்.









