சோத்துப்பாறை அணையை திறந்துவிட்டு ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகிகள்- அதிர்ச்சியில் அதிகாரிகள்- இபிஎஸ், டிடிவி தினகரன் கண்டனம்!

By Mathi

|

Published on 18 Nov 2026, 3:58 PM

Sothuparai Dam- TVK

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையை அரசு அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்துவிட்டு, அதனை சோசியல் மீடியாவில் ரீல்ஸாகவும் தவெக நிர்வாகிகள் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. 126.28 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுவதுடன், விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

ADVERTISEMENT

சோத்துப்பாறை அணையின் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் மூலம் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், நேற்று நவம்பர் 17-ந் தேதி காலை சோத்துப்பாறை அணைக்குச் சென்ற தவெக நிர்வாகிகள், நீர்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் புதிய ஆயக்கட்டு வாய்க்காலில் தண்ணீரைத் திறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதை வீடியோவாகப் பதிவு செய்து சோசியல் மீடியாவில் ரீல்ஸாகவும் தவெக நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு நீர்வளத்துறை அதிகாரிகளின் அனுமதி தேவை. ஆனால், ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளே அதிகாரிகளுக்குத் தெரியாமல் அணையைத் திறந்துவிட்டு, அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதிகாரிகளின் அனுமதியின்றி அணையிலிருந்து தண்ணீரைத் திறந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல், தவெக கட்சியினர் தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

சோத்துப்பாறை அணையில் இருந்து ஆயக்கட்டு புது வாய்க்கால் வழியாக 1000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் திறந்துவிட 90 நாட்களுக்கான நீர் இருப்பு இருக்க வேண்டிய நிலையில், தேவையான நீர் இருப்பு இல்லாததால் அதிகாரிகள் அணை திறக்க அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது .

இதனால், தன்னிச்சையாக பெரியகுளம் தவெக MLA சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி என்பவர் தலைமையில் தவெக கட்சியினரே அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு, அந்த ரீலை எடிட் செய்து வெளியிட Late ஆகும் என்பதாலோ என்னமோ,
Raw footage உடன் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகள் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள். திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் “petromax” லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு, “இதுல எப்படி அண்ணே எரியும்?”
என்று கேட்பது போல, பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர் இன்றைய ஆளுங்கட்சியினர்.

இப்படி Design Design-ஆக பிரச்சினைகளை இழுத்துவிடும்
இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடம் இருந்து
மக்களைக் காப்பதா?
கலெக்டரைக் காப்பதா?
அணையைக் காப்பதா?
என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்தது தான் தவெக அரசின் மாபெரும் “வெற்றி”!

ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம்.

சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்

இச்சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து, எந்தவொரு அரசு அதிகாரியும் இல்லாத நிலையில், தவெக நிர்வாகிகளே பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டதோடு, அதனை ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களை மிரட்டும் வகையில் ஆய்வு என்ற பெயரில் வீடியோ எடுத்து, அதனை ரீல்ஸாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் ரீல்ஸ் வெறி, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும், பொதுமக்களின் பாதுகாப்போடும் நேரடியாகத் தொடர்புடைய சோத்துப்பாறை அணையை, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றித் தவெக நிர்வாகிகளே திறப்பதற்கும், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, ஆய்வு என்ற பெயரில் அங்குப் பணியிலிருந்த காவலர்களை மிரட்டி அமைச்சர் வீடியோ எடுப்பதற்கும் அனுமதி அளித்தது யார்? நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ் என ரீல்ஸ் மூலமாகவே ஆட்சிக்காலத்தை ஓட்டிவிடலாம் என்ற எண்ணத்திலிருக்கும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட தவெகவில் உள்ள நிர்வாகிகளின் இதுபோன்ற செயல்பாடுகள், ரீல்ஸ் மோகம் அக்கட்சியினரின் ரத்தத்திலேயே எந்த அளவிற்கு ஊறிப்போயிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உள்ளூர் பிரச்சினைகளுக்குக் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள் வரை அதிகார வரம்பை மீறிப் பங்கேற்கும் தவெக நிர்வாகிகளைக் கண்டிக்கத் தவறிய அக்கட்சித் தலைமையின் அலட்சியத்தால் தான் நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அணையிலிருந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முன்னறிவிப்புகளோ இன்றி, தண்ணீரைத் திறந்துவிடும் அளவிற்கான பொறுப்பற்ற செயல்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. எனவே, அரசு நிர்வாகம் என்பது அவரவர் நினைத்ததைச் செய்யும் சினிமா படப்பிடிப்புத் தளமல்ல என்பதையும், காவல் நிலையங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் சமூக வலைதளங்களில் புகழ் தேடுவதற்கான மேடைகள் அல்ல என்பதையும் உணர்ந்து, இதுபோன்ற தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தனது கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு. ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.


உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel