கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தொடர்ந்து அழுத்தம்.. கனிமொழி காட்டம்

By Pandeeswari Gurusamy

|

Published on 18 Nov 2026, 3:53 PM

kanimozhi

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. இன்று (நவம்பர் 18) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்யும் பட்சத்தில் திமுக ஆதரிக்குமா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “மத்திய அரசு மசோதாவைத் தாக்கல் செய்கிறார்களா என்று எங்களை அழைத்து இதுவரை பேசவில்லை. கடந்த முறை தாக்கல் செய்தபோதே நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்பதில் திமுக மிகத் தெளிவாக இருந்தது. மீண்டும் தாக்கல் ஆகும் மசோதாவில் என்ன திருத்தங்கள் உள்ளன என்பது குறித்த விவரங்கள் தெரியாத நிலையில், திமுகவின் நிலைப்பாட்டைச் சொல்ல வாய்ப்பே கிடையாது,” என்றார்.

ADVERTISEMENT

“கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியிருப்பது குறித்த கேள்விக்கு, “தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆட்சியரை அழைத்து நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அமைச்சர்கள், இன்று நம்மைப் பார்த்து ‘சமூக ஊடகங்களில் வந்த செய்தியை வைத்துக் கேள்வி கேட்க முடியுமா?’ என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர். அதே நேரத்தில், நடந்த சம்பவம் குறித்து வெளியில் பேச வேண்டாம் என்ற அழுத்தத்தை அவர்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மகளிர் ஆணையம் தற்போது இதை கையில் எடுத்திருக்கிறது. தமிழகத்தில் ‘பீப்புள்ஸ் வாட்ச்’ என்ற மனித உரிமை குறித்து தொடர்ந்து செயலாற்றி வரும் அமைப்பும் இதை கையில் எடுத்து, ஆட்சியருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் மற்ற பெண்களைப் பாதுகாக்கும் நிலையில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணிற்கே இப்படிப்பட்ட நிலை என்றால், இன்று யாரும் பதில் சொல்லாத கேள்வியாக இது உலவிக் கொண்டிருக்கும் சூழலில், நாங்கள் கேள்வி கேட்டால் தவறு என்கிறார்கள். தற்போது தேசிய மகளிர் ஆணையம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “எனக்குத் தெரிந்தவரை காவல்துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சரைத் தவிர வேறு யாரும் காவல் நிலையத்திற்குள் போவதற்கோ, அங்கு ஆய்வுகள் நடத்துவதற்கோ உரிமை கிடையாது. நீதிபதிகள் நினைத்தால் அங்கு நடக்கும் விஷயங்களைப் பார்க்கலாம். இல்லையென்றால் காவல்துறை அதிகாரிகள் மட்டும்தான் அங்கு சென்று ஆய்வுகளை நடத்த முடியும். அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ அங்கு சென்று ஆய்வு நடத்துவதற்கோ, வழக்கு குறித்த ஆவணங்களைப் பார்ப்பதற்கோ அவர்களுக்கு நிச்சயமாகச் சட்டத்தில் எந்த உரிமையும் கிடையாது. இதுவே மிகப்பெரிய சட்ட மீறல். தொடர்ந்து இந்த ஆட்சியில் பல்வேறு வகையில் சட்ட மீறல்கள், குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன. இப்போது காவல் நிலையத்திற்கு உள்ளேயே சென்று குற்றச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் மிக வருத்தமான ஒன்றாக உள்ளது. மேலும், பெண் காவலர்களின் மொபைல் போனை வாங்கி அவர்களுடைய தனிமனித உரிமையில் தலையிடுவது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது; இது அத்துமீறல்,” என்றார்.

ADVERTISEMENT

சூரசம்ஹார நிகழ்ச்சியில் ‘முதல்வருக்கு அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா’ என்று எழுந்துள்ள சர்ச்சை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “பல கோயில்களைக் கட்டியிருக்கும் சோழ அரசர்கள் கூடத் தங்களைக் கடவுளாக நினைத்துக்கொண்டு மற்றவர்கள் போற்றிப் பாட வேண்டும் என்று நினைத்தது கிடையாது. அதையும் தாண்டி, ‘கடவுள் நம்பிக்கை இல்லை, நான் நாத்திகன்’ என்று சொல்லும் கலைஞர் ஆட்சியில் கூட இப்படிக் கடவுளுக்கு நிகராக யாரையும் சொல்லிப் போற்றியது கிடையாது. முதன்முதலாகத் திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர். கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதே திருச்செந்தூர் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு மக்கள் வசதியாக, எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வந்து செல்ல வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதைத் தவிர, அங்கு இருக்கும் அமைச்சர்களையோ அல்லது முதலமைச்சரையோ பாராட்டக்கூடிய எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை. இது நிச்சயமாகக் கடவுள் மீது நம்பிக்கையும் பக்தியும் இருக்கக்கூடிய அத்தனை மக்களின் மனதையும் புண்படுத்தக்கூடிய ஒன்று. கடவுளுக்கு நிகராக ஒருவரை இணையாகக் காட்டுவதும் போற்றுவதும் நிச்சயமாக எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் மனதைப் புண்படுத்தக்கூடிய ஒன்று. இது மிகத் தவறான ஒன்று. எல்லாவற்றிற்கும் கேஸ் போடுகிறவர்கள் இதற்கு என்ன கேஸ் போடப் போகிறார்கள்? எல்லோருடைய மனதையும் புண்படுத்தியிருப்பவர்கள் மீது யார் என்ன கேஸ் போடப் போகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்,” என்றார்.

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறித்த கேள்விக்கு, “தவெகவை எதிர்த்து இன்று கேள்வி எழுப்பக் கூடிய தலைவர்களை லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து அச்சுறுத்தி வருகிறார்கள். நிச்சயமாக இதையெல்லாம் பார்த்து திமுக எந்த நிலையிலும் பின்வாங்காது” என்றார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel