தவெக செங்கோட்டையன் தொடர்பான வாச்சாத்தி கேள்வியால் டென்ஷனான துரை வைகோ

By Pandeeswari Gurusamy

|

Published on 18 Nov 2026, 12:56 PM

வாச்சாத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் சூத்திரதாரி செங்கோட்டையன் இப்போது தவெகவில் இருக்கின்றாரே என்ற கேள்வியால், துரை வைகோ ஆவேசமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை விமான நிலையத்தில் இன்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் பரவும் தகவல் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் பரவும் செய்தி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர், அதிகாரிகள் என யார் தவறு செய்திருந்தாலும் ஆட்சியில் இருப்பவர்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சரைப் பொறுத்தவரை, தமிழக அரசைப் பொறுத்தவரை இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவோம்; கண்டிப்பாகத் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல் அவர்களது இயக்கத்திலும் சட்டமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும், அரசாங்கத்திற்கோ கட்சிக்கோ களங்கம் ஏற்படுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று கட்சித் தலைமை சொல்லியுள்ளது. அதற்கு உரிய அறிவுரையை முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அவர் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு” என்றார்.

உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த அரசு, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் காலம் தாழ்த்துவது ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியைப் பொறுத்தவரை வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டு பொதுக்கூட்டத்தில் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசினார். எல்லோருக்கும் தெரியும். அதன் அடிப்படையில் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர், ‘நான் அது போல் குறுஞ்செய்தி அனுப்பவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை. அப்படி அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உதயநிதியைப் பொறுத்தவரை பொது வெளியில் ஒரு முறை அல்ல, பலமுறை பெண்களை இழிவுபடுத்தும்படி பேசியிருக்கிறார். அதற்கு உரிய விசாரணை என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.

ADVERTISEMENT

மேலும் பேசிய அவர், “கடந்த 20, 30 ஆண்டுகளில் கொலை, கொள்ளை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. வருடாவருடம் இந்தக் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துத்தான் வருகின்றன. கடந்த காலத்தில் பழங்குடிப் பெண்கள் வாச்சாத்தியில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்; இது தமிழ்நாட்டிற்குத் தெரியும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை பட்டப்பகலில் காவல்துறை சுட்டது யாருடைய ஆட்சியில் என்று உங்களுக்குத் தெரியும். பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் பலாத்காரம் சம்பந்தப்பட்ட விவகாரம் கடந்த கால ஆட்சியில் நடந்தது.

ஜெம் வீரமணி சம்பந்தப்பட்ட வழக்கு 15 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பெண் இந்த விவகாரத்தில் தற்கொலை செய்திருக்கிறார்; அது குறித்து ஒரு வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். என்னுடைய அனுமானம், உலகத்திலேயே ‘எப்ஸ்டீன்’ (Epstein) என்ற விவகாரத்தை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தியாவின் எப்ஸ்டீன் கதைதான் இந்த வீரமணியின் கதை. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் இதில் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது எந்த ஆட்சியில் நடந்தது என்று நான் கேட்கிறேன்? கடந்த அதிமுக, திமுக என்ற இரண்டு ஆட்சிகளிலும் நடந்தது. 2024-லேயே இது குறித்துப் புகார் அளித்திருக்கிறார்கள்; அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2025-இல் மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மூன்று மாதத்தில் வழக்கை முடிக்கிறார்கள். இது எந்த ஆட்சியில் நடந்தது? தற்போது தவெக ஆட்சி அமைந்த பிறகு நேர்மையான விசாரணை நடைபெறுகிறது. என்னுடைய அனுமானம் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இது எந்த ஆட்சியில் நடந்தது? ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு எந்த ஆட்சியில் நடந்தது? வாச்சாத்தி பெண்கள் பலாத்காரம் எந்த ஆட்சியில் நடந்தது?” என்றார்.

ADVERTISEMENT

அப்போது, வாச்சாத்தி சூத்திரதாரி செங்கோட்டையன் இப்போது தவெகவில் இருக்கின்றாரே என்ற கேள்விற்கு, துரைவைகோ ஆவேசமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். செய்தியாளரை நோக்கி ‘திமுக ஏஜென்ட்’ என்று காட்டமாகப் பேசினார். “உங்கள் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். திமுக என்று சொன்னவுடன் உங்களுக்கு ஏன் எரிகிறது சார். நீங்கள் கேள்வி கேளுங்கள், பதில் சொல்கிறேன். ஆனால் பதில் சொல்லும்போது குறுக்கே பேசக்கூடாது. நீங்கள் திமுக ஏஜென்ட்; திமுகவிற்குப் பல்லக்கு தூக்காதீர்கள். உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும்போது குறுக்கே பேசக்கூடாது” என்று ஆவேசமா பேசியவர் செங்கோட்டையன் குறித்த கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்துச் சென்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel