”திமுக ஆட்சி”.. வைகோ பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி!

By Mathi

|

Published on 18 Nov 2026, 8:57 AM

DMk-Durai Murugan-Vaiko

”தமிழ்நாட்டில் இனி திமுக ஆட்சி அமையாது” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

காட்பாடியில் நேற்று (நவம்பர் 17) செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது: மேகதாது விவகாரத்தைத் தமிழ்நாடு ஏதோ சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இந்தப் பிரச்சினையின் தீவிரத்தையும், கர்நாடகா அரசு எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதையும் தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்சினையைத் தடுத்து நிறுத்தாவிட்டால், வளமான தஞ்சை டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும்.

ADVERTISEMENT

கர்நாடகா முதல்வர் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார். தமிழ்நாடு எதிர்த்தாலும், மத்திய அரசு எதிர்த்தாலும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று அவர் கூறுகிறார். கர்நாடகா முதலில் அணைத் திட்டத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு ஒப்புதல் பெற்ற பிறகு சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை எனப் பல்வேறு நிலைகளில் அனுமதி பெற வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தையும் கடந்தாலும் இறுதியாக நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட வேண்டியிருக்கும். நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்.

இத்தனை தடைகளையும் தாண்டி மேகதாது அணையைக் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கும் என்று நான் நினைக்கவில்லை. மேகதாது அணையைக் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் எந்த உத்தரவிலும் அனுமதி வழங்கவில்லை. இவ்வளவு சட்டச் சிக்கல்கள் இருக்கும்போது, அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடகா முதல்வர் பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல.

ADVERTISEMENT

கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானத்தைக் கீறி வைகுண்டம் காட்டப் போகிறேன் என்ற கதையாகத்தான் கர்நாடகா முதல்வரின் பேச்சு இருக்கிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட என்ன பிரச்சினை?

மேகதாது விவகாரத்தை முதல்வர் விஜய் அரசு, முக்கியமான பிரச்சினையாக கருத வேண்டும். இது ஆளும் கட்சி மட்டுமே தீர்க்கக்கூடிய பிரச்சினை அல்ல. முதலமைச்சர் தனியாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினையும் அல்ல. கர்நாடகாவில் இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் நிற்கின்றன. அதேபோல தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதில் முதலமைச்சருக்கு என்ன பிரச்சினை? இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் துரைமுருகன் அளித்த பதில்களும்:

கேள்வி: ”இனி எந்தத் தேர்தலிலும் திமுக ஜெயிக்காது, திமுகவை தூள் தூள் ஆக்குவோம், நான் நடைபயணமா போய் தவெகவுக்காக ஓட்டு கேட்பேன்”-ன்னு வைகோ பேசியிருக்காரு. அதை எப்படி பாக்குறீங்க சார்?

துரைமுருகன்: ”செத்துப்போன கேஸுக்கெல்லாம் போய் உயிர் கொடுக்கப் பாக்குறீங்களே நீங்க.. அவர் வந்து, எங்க கட்சியை விட்டுப் போனாரு.. அப்புறம் வந்தாரு, அப்புறம் மறுபடியும் நான் போறேன்னு போயிட்டாரு…மறுபடியும் வந்தாரு, மறுபடியும் போனாரு. இப்படிப் போய்ட்டு போய்ட்டு வரும் அரசியல்வாதி பேசுவதை, ஒரே கட்சியில இருக்குற என்கிட்ட கேட்கிறீங்களே நியாயமா?

கேள்வி: திமுக ஆட்சி அமையும் என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது “முட்டாள்தனமான” பேச்சுன்னு வைகோ சொல்லி இருக்கிறாரே?

துரைமுருகன்: நானும் அதையே திருப்பி சமர்ப்பிக்கிறேன்

கேள்வி: ஒரு மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. குறுஞ்செய்தி அனுப்பிய இருக்கிறார்.. ‘யாரு தவறு செய்தாலும் நான் கண்டிப்பா ஆக்ஷன் எடுப்பேன்’னு சொன்ன முதல்வர், தற்பொழுது வரை எதுவும் அவரைக் கண்டிக்கவும் இல்லை; தேசிய மகளிர் ஆணையம் முன்வந்து கையில் எடுத்துருக்கு…

துரைமுருகன்: அவங்க கையில் எடுத்துருக்காங்க. முதலமைச்சர் கையில் எடுக்கல, அவ்வளவுதான். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel