‘அடிக்கப் பாய்ந்தார்கள்’ ஈரோடு தவெகவில் வெடித்த கோஷ்டி பூசல்.. மாவட்டச் செயலாளர் பகீர் பதிவு

By Pandeeswari Gurusamy

|

Published on 18 Nov 2026, 9:45 AM

“மாவட்டச் செயலாளர் என்று பாராமல் என்னைத் தாக்க வந்த நபருடன் கூடப் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. அனைத்தையும் தளபதிக்காகப் பொறுத்துக் கொண்டு செல்கிறோம். பொருளாதார ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் ரசிகர் மன்றத்திலிருந்து பயணிக்கும் நிர்வாகிகளைத் தவிர்க்க வேண்டாம்” எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூல் பதிவில்,”கோபி வெள்ளாங்கோவில் ஊராட்சியில் தொடர்ந்து ரசிகர் மன்றத்திலிருந்து 15 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்து வரும் பழைய நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு, கட்சிச் செயல்பாடுகளை அண்ணன் ஞானசேகர், பாலு, மைக் பேச்சாளர் உட்படப் பலர் செய்கிறார்கள். நான் கேட்டதற்கு என்னிடமே ‘அப்படித்தான்’ என்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து மக்களிடத்தில் பழைய நிர்வாகிகளின் முகம் தெரியக் கூடாது என்பதற்காகத் தவிர்க்கிறீர்கள் என்பதை அனைவரும் அறிவோம். இது போன்ற செயல்கள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இனி இது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

மாவட்டச் செயலாளர் என்கிற முறையில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய கடமை உள்ளது என்பதால் கேட்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே நேரத்தில் ரசிகர் மன்றத்திலிருந்து பயணிக்கும் நிர்வாகிகளிடமும் இதைத் தெளிவாகக் கூறியுள்ளேன். இதன் மூலம் பழைய நிர்வாகிகளிடம் மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்; அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.

பொருளாதார ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் ரசிகர் மன்றத்திலிருந்து பயணிக்கும் நிர்வாகிகளைத் தவிர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது மேற்கண்ட பகுதியில் மட்டுமல்ல, மேற்கண்ட நபர்கள் மட்டுமல்ல; அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு நபர்களால் நடைபெறுகிறது. தேர்தலில் தமிழக வெற்றிக் கழகமும், தளபதி விஜய் அவர்களும், நம் இரு தொகுதிகளின் கழக வேட்பாளர்களும் தோற்க வேண்டும் என்று மாற்றுக் கட்சியில் இருந்து வேலை செய்தவர்கள், தேர்தல் வெற்றிக்குப் பிறகு நம்முடன் இணைந்து அவர்களை முன்னிலைப்படுத்திப் பழைய நிர்வாகிகளை ஒதுக்குகிறார்கள். இதையும் ஏற்றுக்கொண்டு பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ADVERTISEMENT

உதாரணத்திற்கு, பவானிசாகர் தொகுதியில் நம் வேட்பாளருக்கு எதிராக மாற்றுக் கட்சியில் வேலை செய்த தாளவாடி சிக்கன் பாபு (நம் வெற்றிக்குப் பின் சில நாட்கள் கழித்து வந்தவர்), கடம்பூர் நாச்சிமுத்து (வெற்றி அறிவித்த அன்று மாலை 7 மணிக்கு வந்தவர்; இவர் நம் நிர்வாகிகளிடம் பிரச்சாரத்தில் நமது சின்னமான விசிலைப் பிடுங்கி வீசியவர்) உள்ளிட்ட பலர், உண்மையாகத் தளபதி அறிமுகம் செய்த வேட்பாளரை வெற்றி பெற உழைத்த நிர்வாகிகளை அதிகாரம் செய்கிறார்கள்; அவர்களைத் தவறாகச் சித்தரிக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டால் அப்படியே ரசிகர் மன்ற நிர்வாகிகள் பக்கம் திறமையாகத் திருப்பி விடுகின்றனர். இதைப் பார்க்கும்போது நீங்கள் வயதில் சிறியவர்களா அல்லது நாங்களா என்று தோன்றுகிறது. சிறியவர்கள் போல் நடந்தால் பரவாயில்லை, மிகவும் கேவலமாக ஒரு சிலர் நடந்து கொள்வது மிகுந்த வருத்தம் தருகிறது.

பழைய நிர்வாகிகளுக்கு அரசு அலுவலகங்களில் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது கூடத் தெரியாது என்றும், அவர்கள் அதிகாரம் செய்கிறார்கள் என்றும் பொய்களை அவர்கள் மேல் திணித்து உள்ளாட்சியில் நீங்கள் மட்டும் பலன் பெறும் முயற்சியை விடுங்கள்.

ADVERTISEMENT

கட்சித் தலைமை, அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர், நாங்கள், நான் உட்பட அனைவரும் ஒற்றுமையாக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் நோக்கில் உள்ளோம் என்பதைத் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன். அதே நேரத்தில் புதிதாக இணைந்தவர்களையும், இனி இணைபவர்களையும் வரவேற்க வேண்டியது நம் கடமை என்பதை நான் நன்கு அறிவேன். ரசிகர் மன்றத்திலிருந்து பயணிப்பவர்களைப் பொருளாதாரம், சாதி உள்ளிட்டவைகளுக்காக ஒதுக்க வேண்டாம் என்று இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பிட்டவர் பெயரை மட்டும் மேலே கூறியிருப்பது, கடந்த வாரம் கடைசியாக நடைபெற்ற செயல்பாடுகளை வைத்து மட்டுமே. மற்றபடி இரு தொகுதிகளிலும் கோபி, நம்பியூர், சத்தி, தாளவாடி உட்பட அனைத்து நகரம், ஒன்றியம், பேரூர், ஊராட்சி முதல் மாவட்டப் பதவிகள் வரை இது போன்ற தொந்தரவுகள் ஒரு சிலரால் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. ரசிகர் மன்றத்திலிருந்து பயணிக்கும் பழைய நிர்வாகிகளுக்கும் கண்டிப்புடன் கூறிக்கொள்கிறேன்; தவறு உங்கள் மீது இருந்தால் உறுதியாக நானே உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

25 வருடமாக போஸ்டர் ஒட்டி, பேனர் கட்டி, எந்த எதிர்பார்ப்பும் இன்றி ‘தளபதியின் முகமே கடவுள்’ என்று உழைத்த எங்களைப் பார்த்தால் பைத்தியக்காரர்கள் போல் தெரிகிறது போல ஒரு குறிப்பிட்ட சிலருக்கு. பலர் மற்ற கட்சிகளைப் போல் நினைத்து தவெகவிலும் சாதி, பொருளாதாரம் பார்த்து உழைப்பவனையும் கட்சிக்கு உண்மையாக இருப்பவனையும் ஒதுக்கி ஒரு சிலர் மட்டும் சுயலாபம் அடையும் எண்ணத்தில் வந்துள்ளீர்கள். அது தவெகவில் நடக்காது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். (இது நம்மை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியாகக் கூட இருக்கலாம், கவனமாக இருங்கள் என நிர்வாகிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்).

இது மற்ற கட்சிகள் போல் இல்லை. தவெக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சொல்லைத் தாரக மந்திரமாகக் கொண்ட இயக்கம். சாதி வைத்துப் பலர் அரசியல் செய்ய நினைப்பது நடக்காது. தவெக எங்கள் கோவில்; தயவுசெய்து சாதிக்காகப் பழைய நிர்வாகிகளை ஒதுக்கி, கட்சியையும் எங்களையும் அசிங்கப்படுத்தாதீர்கள் என்று எனது இரு கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு மேல் இது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். புதிதாக இணைந்தவர்கள், ரசிகர் மன்றத்திலிருந்து பயணிப்பவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ரசிகர் மன்றத்திலிருந்து பயணிக்கும் நிர்வாகிகள், புதிதாக இணைந்தவர்களையும், இணையும் நிர்வாகிகளையும் உரிய மரியாதையுடன் அணுக வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.

நான் உட்படத் தளபதி முதல்வராக வருவார் என்று தெரியாமலேயே போஸ்டர், ஃபிளெக்ஸ் கட்டியவர்கள், இன்று அவர் முதல்வராகத் தொடர வேண்டும் என்பதற்காகவும் மூன்று அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முகத்திற்காகவும்… இன்னும் சொன்னால் மாவட்டச் செயலாளர் என்று பாராமல் என்னைத் தாக்க வந்த நபருடன் கூடப் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. அனைத்தையும் தளபதிக்காகப் பொறுத்துக் கொண்டு செல்கிறோம்.

இதே நிலை தொடர்ந்தால் இரு தொகுதிகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் இணைந்து தலைமைக்குச் சென்று அமைதியான முறையில் அனைத்தையும் கூறிவிட்டு நாங்கள் ஒதுங்கிக் கொள்கிறோம்.

முக்கியமான ஒன்று, குறிப்பிட்ட சிலர் மட்டுமே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு நம் கட்சிக்கும் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர். தவிர, புதிதாக இணைந்தவர்களில் பலர் இளைஞர்கள் வளரட்டும் என்ற எண்ணத்தில் அதீத விருப்பத்துடன் அனைத்து உதவிகளையும் அளித்துச் செயல்படுகிறார்கள்; அவர்களுக்கு என்னுடைய நன்றியையும் இதில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலை நீடித்தால் உள்ளாட்சித் தேர்தலில் நமது கழகத்திற்குப் பாதிப்பு ஏற்படும். அதைத் தடுக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். எனவே சுயலாபத்திற்காகவும், சாதி அடிப்படையிலும் அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ளவும் என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.

இதற்குத் தலைமையிடம் கூறி நடவடிக்கை எடுக்க முடியாமல் இல்லை; கீழ்வரும் மூன்று வரிக்காக அமைதியாக இருக்கிறோம்:

மாண்புமிகு முதல்வர் அவர்கள்

மாண்புமிகு அமைச்சர்கள் பெருமக்கள்

மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் (107)

இவர்களுக்காக அமைதி காக்கிறோம். மாவட்டச் செயலாளர் என்பதைப் பதவியாகக் கருதவில்லை, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பாகவே கருதுகிறேன். எனது வேலை உண்மையாக உழைப்பவர்களைக் கண்டறிந்து தலைமையிடம் தெரிவிப்பது. ஆகவே ரசிகர் மன்றத்திலிருந்து உண்மையாகப் பயணிப்பவர்கள் மற்றும் புதிதாகக் கட்சியில் இணைந்தவர்களில் தளபதியை மனதார ஏற்றுக்கொண்டு அவருக்காக உண்மையாக இருப்பவர்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கிடைக்க எனது முயற்சியை மேற்கொண்டு, அவர்களை மக்கள் பணியில் அமர்த்தித் தளபதி வழியில் சேவை செய்ய வைப்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

இந்த அறிக்கையினால் வரும் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராகித்தான் இதை பதிவிடுகிறேன். மாவட்டச் செயலாளராக இருந்தும் இதை பதிவு செய்கிறேன் என்றால் எவ்வளவு மன உளைச்சலில் உள்ளேன் என்று பாருங்கள். ஆனால் ஒன்று, அனைத்தும் ஒரு அளவுதான். இதை இப்படியே பொறுத்துக் கொண்டே செல்ல மாட்டேன்; ஏனென்றால் எனக்குத் தளபதி விஜய் அவர்கள் முதல்வராக இருப்பது முக்கியம். அதற்காக எதையும் துணிந்து செய்யத் தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த முகநூல் பதிவு வைரலாகத் தொடங்கிய சூழலில் பிரதீப்குமார் தனது முகநூல் பதிவை ‘லாக்’ (பூட்டி) செய்து வைத்துள்ளார்.

அதே சமயம் மாவட்டச் செயலாளர் பிரதீப்குமார் யாருடைய பெயரையும் குறிப்பிடாத நிலையில், இந்தப் பகிரங்கப் பதிவுக்குப் பின்னணியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்களுடன் மோதல் இருப்பதாகக் கூறப்படுகிறது. தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து பயணித்து வந்த பிரதீப்குமாரைத் திட்டமிட்டு ஓரங்கட்டிவிட்டு, தனது ஆதரவாளரை மாவட்டச் செயலாளராக நியமிக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

செங்கோட்டையன் ஆதரவாளர் ஒருவர் பிரதீப்குமாரைத் தாக்க முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இது குறித்துப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் கவனத்திற்குச் சென்றபோது அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் விஜய் பாலாஜியுடன் சேர்ந்து சுமூகமாகச் செல்ல அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் பிரதீப்குமார் கடும் மன உளைச்சலில் இருப்பதால் உட்கட்சிப் பூசல் குறித்துப் பகிரங்கமாகப் பதிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel