தமிழ்நாட்டில் மிக மோசமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; விரைவில் திமுக ஆட்சி அமையும் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் – சங்கரி ரவிச்சந்திரன் ஆகியோரின் புதல்வர் விஷால் நாராயண் – பெங்களூரு ஜெகதீஷ் பாட்டில் – அனுபமா ஜெகதீஷ் பாட்டில் ஆகியோரின் புதல்வி ரிஷா பாட்டில் ஆகியோரின் திருமணத்தை சென்னை சென்னை நீலாங்கரை கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 16) நடத்தி வைத்தார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது: மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றியிருக்கக்கூடிய திராவிடர் கழகத்தினுடைய தலைவர் ஐயா ஆசிரியர் அவர்களே, கழகத்தினுடைய பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த தலைவர் தோழர் முத்தரசன் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியினுடைய தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே, மனிதநேய ஜனநாயக கட்சியினுடைய தலைவர் அன்புக்குரிய சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்களே, எஸ்டிபிஐ தமிழ் மாநில முன்னாள் தலைவர் அருமைச் சகோதரர் முபாரக் அவர்களே!
தொடக்கத்திலே வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய இளைஞரணிச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் தம்பி உதயநிதி அவர்களே, கழகத்தினுடைய துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி அவர்களே, என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி கருணாநிதி அவர்களே, ஆ.ராசா அவர்களே மற்றும் தலைமைக் கழகத்தினுடைய நிர்வாகிகளே!
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் எ.வ.வேலு அவர்களே, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களே, தங்கம் தென்னரசு அவர்களே, சக்கரபாணி அவர்களே, இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, கழகத்தினுடைய முன்னோடிகளே!
இங்கு எனக்கு முன்னால் நெகிழ்ச்சியோடு, உணர்ச்சியோடு, ஒரு உறுதியோடு நன்றியுரை ஆற்றியிருக்கக்கூடிய நம்முடைய அன்புக்குரிய சகோதரர் கே.என்.நேரு அவர்களே, மணக்கோலம் பூண்டிருக்கக் கூடிய மணமக்களே, மணமக்களுடைய பெற்றோர்களே, உற்றார் உறவினர்களே, நண்பர்களே!
என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய வீட்டுத் திருமணம்
திருச்சியினுடைய தீரர்கள் வாழக்கூடிய அந்த மாவட்டத்தினுடைய ஒரு செயல்வீரனாக, ஒரு ஆற்றல்மிக்க தொண்டனாக, திருச்சி என்ற வரலாற்றுச் சிறப்புக்குரிய அந்த மாவட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக உருவாக்கித் தருவதற்குப் பாடுபட்டு, தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய அன்புக்குரிய சகோதரர் நேரு அவர்களுடைய இல்லத்தில், அவருடைய தம்பியினுடைய அருமை மகன், நம்முடைய சகோதரர் ரவிச்சந்திரன், சங்கரி ஆகியோருடைய அருமை மகன் விஷால் நாராயணன் அவர்களுக்கும், மணமகள் ரிஷா பாட்டீல் அவர்களுக்கும் மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.
இங்கு எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். இது நேரு இல்லத்தினுடைய திருமணம். நேரு இல்லத்தினுடைய திருமணமாக இருந்தாலும், அவருடைய தம்பி ரவியினுடைய மகனுடைய திருமணமாக இருந்தாலும், இந்தத் திருமணத்தைப் பொறுத்தவரையில் நான் பெருமையோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், இது என்னுடைய வீட்டுத் திருமணமாகக் கருதி நான் இந்த விழாவிலே கலந்து கொண்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல, வந்திருக்கக்கூடிய அனைவரும், ஒவ்வொருவரும் நம்முடைய வீட்டுத் திருமணமாகக் கருதித்தான் இந்த விழாவிலே பங்கேற்று மணமக்களை வாழ்த்திக்கொண்டிருக்கிறோம்.

விரைவில் திமுக ஆட்சி
நேருவினுடைய பணிகளைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். அதுவும் குறிப்பாக, அவர் அமைச்சராக இல்லை என்று சொன்னாலும், இன்றைக்கும் அவர் அமைச்சராகத்தான் அந்த மாவட்டத்தில் இருக்கிறார் என்று சொன்னார்கள்.
அதேபோல என்னைப் பற்றிச் சொல்லுகிறபோது சொன்னார்கள். ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் நீங்கள்தான் எங்களுக்கு முதல்வர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது இருக்கக் கூடிய சூழ்நிலையிலே, இப்பொழுதும் நேருதான் அமைச்சராக இருக்கிறார் என்று சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. ஏனென்றால், ஆட்சி ஒரு கொடுமையான ஆட்சியாக இருக்கிற காரணத்தால், அதேபோல இப்பொழுதும் நான்தான் முதலமைச்சராக இருக்கிறேன் என்று சொல்வதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம். அதை இனிமேல் சொல்லாதீர்கள். ஏனென்றால், ஒரு மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் நம்முடைய ஆட்சி உதயமாகத்தான் போகிறது. எனவே, அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
என்னையும் நேருவையும் யாராலும் பிரிக்க முடியாது
நம்முடைய நேரு அவர்களும், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும் பிரிக்க முடியாத அளவிற்கு உறவோடு இருந்திருக்கிறார்கள். அதேபோல நான் பெருமையோடு சொல்ல வேண்டுமானால், என்னையும் நேருவையும் கூட யாராலும் பிரிக்க முடியாது.
இன்னொன்றையும் நான் பெருமையோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், தலைவர் கலைஞருடைய மறைவுக்குப் பிறகு இந்தக் கழகம் இருக்குமா, இந்தக் கட்சியை நிலைநிறுத்த முடியுமா என்றுதான் சிலர் நினைத்துக்கொண்டிருந்தார்கள், கனவு கண்டுகொண்டிருந்தார்கள்.
ஆனால், அதெல்லாம் முறியடிக்கப்பட்டு, இன்றைக்கு என்னுடைய தலைமையிலே இந்த கழகம் காக்கப்பட்டிருக்கிறது; கழகம் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது என்று பெருமையோடு சொல்லுகிறோம் என்று சொன்னால், அதற்குத் தனிப்பட்ட இந்த ஸ்டாலின் மட்டும் காரணம் அல்ல. ஸ்டாலினுக்குத் துணையாக இருந்த நேரு போன்றவர்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
எனவே, அப்படிப்பட்ட நிலையில் இன்றைக்கு நேரு அவர்கள் இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். மாவட்டச் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றி, மண்டலத்தினுடைய பொறுப்பாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி, அதைத் தொடர்ந்து தலைமைக் கழகத்திலே முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்று, இன்றைக்குக் கம்பீரமாக அவர் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
மாநாடு என்றால் நேரு.. நேரு என்றால் மாநாடு
கழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய மாநாடுகளை நடத்திக் காட்டிய பெருமை நம்முடைய நேரு அவர்களுக்கு உண்டு. எல்லோரும் சொன்னார்கள். மாநாடு என்றால் நேருதான் நினைவுக்கு வரும். நேரு என்றாலே மாநாடுதான் நமக்கு நினைப்புக்கு வரும். அதுதான் உண்மை.
அதைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். நான் அடிக்கடி அதைத்தான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். நேரு என்பது… வெறும் இதையெல்லாம் நான் புகழ்ச்சிக்காகச் சொல்லுகிறேன் என்று யாரும் கருதிவிடக் கூடாது.
மாநாட்டை வரலாறாக மாற்றும் கே.என். நேரு
நேருவினுடைய உழைப்புக்கு இலக்கணமாக, நேருவினுடைய உழைப்புக்கு அடையாளமாக இன்றைக்குப் பல பணிகளை நான் எடுத்துச் சொல்ல முடியும். ஒரு மாநாட்டை நடத்துவதற்கும், அதை வரலாறாக மாற்றுவதற்கும் நேருவிற்குத்தான் அதிகமான அளவிற்குப் பங்கு இருக்கிறது என்பதையும் நான் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒரு விவசாயக் குடும்பத்திலே பிறந்து, திமுகதான் தன் உயிர்மூச்சு, கலைஞர்தான், அவர் சொல்தான் எனக்கு வேதவாக்கு என்ற நிலையிலே பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடியவர். ஒன்றியச் செயலாளராக, ஒன்றியத்தினுடைய பெருந்தலைவராக, மாவட்டச் செயலாளராக, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, முதன்மைச் செயலாளராக, இப்படி 40 ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கக் கூடியவர் நம்முடைய நேரு அவர்கள். பதவிகளை என்றைக்கும் தேடிப் போனது கிடையாது. அவரைத் தேடித்தான் பதவிகள் வந்திருக்கின்றன. அதுதான் உண்மை.
கே.என்.நேருவின் கோபத்திலும் அன்பு இருக்கும்
இன்னொன்றும் சொல்ல வேண்டும். அவர் கோபக்காரர், கொஞ்சம் வேகமாகப் பேசக்கூடியவர் என்றெல்லாம் எல்லோரும் சொன்னார்கள். உண்மைதான். ஆனால், அந்தக் கோபத்திலே கூட குணம் இருக்கும், அன்பு இருக்கும், பாசம் இருக்கும், நேசம் இருக்கும். அதுதான் உண்மை.
இன்னொன்றை நான் சொல்ல வேண்டும். எந்தப் பணியாக இருந்தாலும் வேகமாகத்தான் இருக்கும். யாராவது சொன்னால் அதை முழுசாகக்கூடக் கேட்க மாட்டார்.. சொல்லிக் கொண்டிருக்கும்போதே முடிச்சுட்டு வந்துடுகிறேன்னு போய்விடுவார்..
இதைப் பற்றி நாம் சொல்லுகிறபோது நம்முடைய திருச்சி செல்வேந்திரன் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். வேகத்தைப் பற்றி நேருவினிடத்திலே பேசுகிறபோது அவர் பலமுறை சொல்லியிருக்கிறார். நான்கூட அதை ஒரு கூட்டத்திலே சொல்லியிருக்கிறேன். என்னவென்றால், மனைவியிடத்தில்கூட வேகத்தைத்தான் காட்டுவார்; மனைவியைக் கொஞ்சுவதிலே கூட, மனைவியிடத்தில் செல்லமாகப் பேசுவதிலேகூட வேகத்தைக் காட்டுவார் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு வேகம் இருக்கும். ஆனால், அதேநேரத்தில் விவேகமும் இருக்கும் என்பதை நான் இந்த நேரத்தில் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தலைவர் கலைஞருடைய ஆட்சிக் காலத்திலே மின்சாரத்துறை, அதேபோல பால்வளத்துறை, தொழிலாளர் நலன், செய்தித்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை, போக்குவரத்துத்துறை போன்ற பணிகளையெல்லாம் அவர் பொறுப்பேற்றுப் பணியாற்றியிருக்கிறார்.
தம்பி ராமஜெயம் மறைவு.. நேரு சந்திக்கும் சோதனைகள்
இப்படிப் பல சாதனைகளை நான் சொல்லுகிறபோது, அதேநேரத்தில் பல வேதனைகளையும் அவர் சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். ஆருயிர் சகோதரர் நம்முடைய ராமஜெயம் அவர்கள் மறைந்தபோது அவருடைய குடும்பம் எந்த அளவிற்குக் கஷ்டப்பட்டது, அதேபோல கழகக் குடும்பமே கஷ்டப்பட்டது, திராவிட முன்னேற்றக் கழகமே எந்த அளவிற்கு வேதனைப்பட்டது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.
அந்த நேரத்தில்கூட அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல், கழகப் பணிதான் எனக்கு முக்கியம் என்ற நிலையிலே அவர் ஆற்றிக்கொண்டிருக்கிற பணியைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கும் நேருவை நோக்கி வரக்கூடிய அந்தச் சோதனைகள், வேதனைகள் எல்லாம் உங்களுக்குப் புரியும். அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சட்டப்படி நீதிமன்றத்திற்குச் சென்று நான் வென்று காட்டுவேன் என்ற அந்தப் பிடிவாதத்தோடு, அந்த உள்ள உறுதியோடு பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடியவர்.
திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல்- தமிழகத்தில் ஒரு காட்சி
விரைவில் திருச்சியிலே, திருச்சி கிழக்கிலே இடைத்தேர்தல் வரப்போகிறது. ஆறு மாத காலமாகத் தமிழ்நாட்டிலே ஓர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. மன்னிக்கவும், ஆட்சி என்று சொல்லக் கூடாது. அது ஒரு காட்சியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது.
அது சும்மா வெத்து வேட்டாகத்தான் ஒரு சீன் காட்டிக்கொண்டிருப்பதைப் போல ஓர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மாற்றம், மாற்றம் என்று சொன்னார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையிலே மிகப்பெரிய ஏமாற்றம்தான் உருவாகியிருக்கிறது.
நிஜத்தில் வில்லன் விஜய்
திரையிலே கதாநாயகனாக நடித்து, இன்றைக்கு நிஜத்திலே ஒரு வில்லனாக உலா வந்து கொண்டிருப்பவர்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டுடைய முதலமைச்சராக இருக்கிறார்.
தவெக அல்ல.. பாலியல் சுரண்டல் கழகம்
எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள், வன்கொடுமைகள்தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வன்கொடுமைகளுக்கு ஆளாக்கக்கூடியவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட மக்கள் என்று உங்களுக்குத் தெரியும். அந்தப் பாலியல் கொடுமைகளுக்கெல்லாம் காரணமாக இருக்கக் கூடியவர்கள் யார் என்பதைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும். அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக இருந்துகொண்டிருக்கிறார்கள். அண்மையில்கூட செய்திகளில் பார்த்திருக்கலாம். காரமடை பகுதியிலே ஒன்றியச் செயலாளர் தலைமறைவாகியிருக்கிறார்.
ஆக, இன்றைக்கு இருக்கக்கூடிய தவெக கட்சிக்குப் பெயரை மாற்றிக்கூட அவர்களுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னால், அந்தக் கட்சிக்கு ‘பாலியல் சுரண்டல் கழகம்’ என்றுதான் பெயரை வைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகும்.
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு என்ன நடந்தது?
தூய சக்தி, தூய சக்தி என்று சொல்லி இன்றைக்கு ஒரு கொடுமையான ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. மனு கொடுக்க வந்தவரை, மனு கொடுக்க வந்த தோழரையே, ஒரு மக்கள் பிரதிநிதியே- துணை சபாநாயகர் தாக்கியிருக்கிறார் என்ற வீடியோ காட்சிகளையெல்லாம் பார்த்தீங்க.
அதுமட்டுமல்ல, ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, அதுவும் பெண்ணாக இருக்கக்கூடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், அந்தச் செய்தியை முதன்முதலில் வெளிப்படுத்தி அதை மக்களுக்கு அறிவித்தவர் இங்கே அமர்ந்திருக்கக் கூடிய என்னுடைய சகோதரி கனிமொழிதான். முதன்முதலில் மக்களிடத்தில் எடுத்துச் சொன்னார். அதற்குப் பிறகுதான் அது தெரியவந்தது. ஆக, அதைப் பற்றிக்கூடக் கேட்டால் முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார். ஆனால், சட்டத்துறை அமைச்சர் என்ன சொல்லுகிறார்? அதெல்லாம் இல்லை, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சொல்லுகிறார்.
விரைவில் நல்ல சூழல் அமைய இருக்கிறது..
ஆனால், இன்னும் சில அமைச்சர்கள் என்ன சொல்லுகிறார்கள்? புகார் முறையாகக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லுகிறார்கள். ஆக, இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவுகட்ட விரைவில் நல்ல சூழல் அமையும். இதற்கெல்லாம் முடிவுகட்ட விரைவில் ஒரு நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நாம் இப்பொழுதே தயாராக இருக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.
இங்கே மணக்கோலம் கொண்டிருக்கக்கூடிய மணமக்கள் எல்லா வகையிலும் சிறப்புகளைப் பெற வேண்டும். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய ‘வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டராய்’ இருந்து பாடுபடுங்கள், பணியாற்றுங்கள், பணியாற்றுங்கள் என்று கேட்டு, வாழ்க மணமக்கள், வாழ்க மணமக்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.









