மௌனத்தைக் கலைப்போம்; குழந்தைகளின் உரிமைகளைக் காப்போம்!

By Minnambalam Desk

|

Published on 18 Nov 2026, 8:00 AM

வழக்கறிஞர் கா.கணேசன்

(குழந்தைகள் நாள் – நவம்பர் 14, குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதற்குமான உலக நாள் – நவம்பர் 18, உலக குழந்தைகள் நாள் – நவம்பர் 20)

ADVERTISEMENT

“ஒரு குழந்தையின் மௌனம், அதன் மீதான வன்முறைக்கு ஒப்புதல் அல்ல. 

அது உதவி கேட்க முடியாத வலியின் வெளிப்பாடு!”

ADVERTISEMENT

குழந்தைகளின் பாதுகாப்பு என்பது ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல; அது அரசின் சட்டப்பூர்வக் கடமை, சமூகத்தின் தார்மீகப் பொறுப்பு, ஒவ்வொரு தனி மனிதரின் அறம் சார்ந்த பொறுப்புமாகும். அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் நிறைந்து மலர வேண்டிய குழந்தைப் பருவம், பாலியல் வன்முறையால் அச்சத்திலும் அவமானத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் சிதைந்து போவது மனித நேயத்தின் மிகப்பெரிய தோல்வியாகும். இத்தகைய வன்முறை குழந்தையின் உடலை மட்டுமல்ல; அவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் எதிர்காலத்தையும் ஆழமாகக் காயப்படுத்துகிறது. குழந்தைகளின் குரல்களுக்குச் செவி சாய்த்து, அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி, இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒட்டு மொத்த சமூகத்திற்கும் உள்ளது.

குழந்தைகள் தினம்: வரலாறும் முக்கியத்துவமும்

ADVERTISEMENT

இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதி, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் நவம்பர் 20ஆம் தேதி உலகக் குழந்தைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கான அடித்தளத்தை 1954ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபை அமைத்தது. குழந்தைகளிடையே சகோதரத்துவத்தையும் புரிந்துணர்வையும் வளர்த்து, அவர்களின் நலன் மற்றும் உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் உலகளாவிய குழந்தைகள் தினத்தைக் கடைப்பிடிக்க அனைத்து நாடுகளுக்கும் பரிந்துரைத்தது. மேலும், 1959 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தைகளின் உரிமைகள் குறித்த பிரகடனத்தையும், 1989-ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தை உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கையையும் (UNCRC) ஐ.நா. ஏற்றுக்கொண்டது. குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, சமத்துவம், வளர்ச்சி மற்றும் கருத்துரிமையை வலியுறுத்தும் இந்நாள், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசுகள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்பதை நினைவூட்டுகிறது.

நவம்பர் 18: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான உலக நாள்

குழந்தைகளின் உரிமைகளை அங்கீகரிப்பதும் பாதுகாப்பதும் சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டு வந்தாலும், உலகெங்கிலும் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலும் வன்முறையும் தொடர்ந்து நிகழ்ந்து வருவது பெரும் கவலையளிக்கிறது. இந்தப் பிரச்சினையின் தீவிரத்தையும், அதைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்குமான அவசரத் தேவையையும் உணர்த்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2022-ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று ஒரு சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது. 

இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 18ஆம் தேதியை “குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதற்குமான உலக நாள்” என அறிவித்தது. இது வெறும் நினைவு நாளாக மட்டுமின்றி, குழந்தைகளின் மௌனத்தைக் கலைக்கவும், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மாண்பையும் உரிமைகளையும் மீட்டெடுக்கவும், அவர்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட ஓர் அவசர அழைப்பாகும்.

உலகையே உலுக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நாடு, மதம், இனம், பொருளாதார நிலை என்ற வேறுபாடின்றி உலகம் முழுவதும் நிகழ்கிறது. ஐ.நா. மற்றும் யுனிசெஃப் தகவல்களின்படி, உலகில் 20 வயதிற்குட்பட்ட சுமார் 12 கோடி சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். 24 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, 18 வயதுக்கு முன்பே 8 முதல் 31 விழுக்காடு சிறுமிகளும், 3 முதல் 17 விழுக்காடு சிறுவர்களும் பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும், 2026ஆம் ஆண்டு Nature Human Behaviour ஆய்விதழில் வெளியான, 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 70 இலட்சம் பேரின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வின்படி, 2024ஆம் ஆண்டில் உலகளவில் 7.26 கோடி சிறுமிகளும், 6.09 கோடி சிறுவர்களும் ஏதாவது ஒரு வகையான பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். இவர்களில் 4.33 கோடி சிறுமிகளும், 3.48 கோடி சிறுவர்களும் பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பாதிப்புகள் குழந்தைப் பருவத்துடன் முடிவதில்லை. உலகளவில், ஐந்து வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளில் ஒருவர், குடும்ப வன்முறை நிலவும் வீட்டில் வாழ்கிறார். அந்தக் குடும்பங்களில், குழந்தையின் தாயார் தனது கணவர் அல்லது நெருங்கிய துணையால் வன்முறைக்கு ஆளாகிறார். மேலும், குழந்தைப் பருவத்தில் உடல், பாலியல் அல்லது உணர்வுரீதியான துன்புறுத்தல்களை நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை எதிர்கொண்டவர்களுக்கு, வளர்ந்த பிறகு வன்முறையால் பாதிக்கப்படவோ அல்லது வன்முறையில் ஈடுபடவோ ஏழு மடங்கு அதிக வாய்ப்புள்ளது; தற்கொலைக்கு முயற்சிக்கும் வாய்ப்பு 30 மடங்கு அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தப் புள்ளி விவரங்கள் வெவ்வேறு ஆய்வுகள் மற்றும் காலகட்டங்களைச் சார்ந்தவை என்பதால், அவற்றை நேரடியாக ஒப்பிட முடியாது. இருப்பினும், சிறுமிகள் மட்டுமின்றி சிறுவர்களும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும், அவமானம் மற்றும் சமூக அச்சத்தால் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படுத்தாமல் மௌனமாக இருப்பதையும் இவை உணர்த்துகின்றன. இதனால் பல குற்றங்கள் வெளிச்சத்திற்கு வராமலேயே மறைக்கப்படுகின்றன.

பாதுகாப்பான இடங்களில்கூட பாதுகாப்பற்ற குழந்தைகள்!

வீடு, பள்ளி, விடுதிகள், குழந்தைகள் இல்லங்கள் எனக் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடங்களில்கூட பாலியல் வன்முறை நிகழ்கிறது. அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், பல நேரங்களில் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்களே இத்தகைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர். உறவினர்கள், குடும்ப நண்பர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் என நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்தும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. சிலர் குழந்தைகளை மிரட்டியும், சிலர் பணம், பரிசுகள் மற்றும் சலுகைகளைக் கொடுத்தும் ஏமாற்றுகின்றனர். இதனால் பயத்திலும் குழப்பத்திலும் இருக்கும் குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லத் தயங்குகின்றனர்.

இணைய உலகில் விரியும் புதிய ஆபத்துகள்

இன்றைய குழந்தைகளின் வாழ்க்கையில் இணையமும் கைப்பேசியும் முக்கிய இடம் பிடித்துள்ளன. கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, நட்பு எனப் பல தேவைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதே இணையம் குழந்தைகளைக் குறிவைக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் போலி அடையாளங்களுடன் குழந்தைகளிடம் பழகுவது, பரிசுகள் அல்லது வேலைவாய்ப்புகள் தருவதாகக் கூறி நம்பிக்கையைப் பெறுவது, தனிப்பட்ட புகைப்படங்களைக் கேட்பது, பின்னர் அவற்றைக் கொண்டு மிரட்டுவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய செயல்கள் இணையவழிக் கவர்தல் (Online Grooming) எனப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் புதிய ஆபத்துகளை உருவாக்கியுள்ளது. குழந்தைகளின் உண்மையான புகைப்படங்களைப் பயன்படுத்தி, அவர்கள் பாலியல் செயல்களில் ஈடுபடுவது போன்ற போலிப் படங்களையும் காணொளிகளையும் உருவாக்க முடிகிறது. இவை Deepfake Child Sexual Abuse Material (Deepfake CSAM) எனப்படுகின்றன.

குழந்தையின் புகைப்படம் ஒருமுறை இணையத்தில் தவறாகப் பகிரப்பட்டுவிட்டால், அதை முழுமையாக நீக்குவது கடினம். எனவே, இணையப் பாதுகாப்பு என்பது தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; குழந்தைகளின் உரிமையையும் பாதுகாப்பையும் சார்ந்த முக்கியப் பிரச்சினையாகும்.

தெற்காசியாவில் தொடரும் குழந்தைப் பாதுகாப்புச் சவால்கள்

இந்தியா மட்டுமின்றி, வங்கதேசம், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலும் வன்முறையும் தொடர்கின்றன. குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், பாலியல் சுரண்டல், வழக்கு விசாரணைகளில் தாமதம், பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பின்மை ஆகியவை முக்கியச் சவால்களாக உள்ளன. பூடான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் புகார் அளிப்பதில் தயக்கம், சமூகக் கட்டுப்பாடுகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் குற்றம் சாட்டும் மனப்பான்மை ஆகியவையும் தடைகளாக உள்ளன. நாடுகளின் சூழல்கள் மாறுபட்டாலும், குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு நீதி வழங்குவது அனைத்து அரசுகளின் கடமையாகும்.

இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க 2012ஆம் ஆண்டு போக்சோ (POCSO) சட்டம் இயற்றப்பட்டது. இது 18 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் பாலின வேறுபாடின்றிப் பாதுகாப்பு வழங்குகிறது. 2019ஆம் ஆண்டு திருத்தத்தின் மூலம் சில குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. இருப்பினும், சட்டங்களும் தண்டனைகளும் மட்டுமே போதாது; விரைவான விசாரணை, குற்றத்தடுப்பு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உளவியல் மற்றும் சட்ட உதவி ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் நம்மை உலுக்கும் சம்பவங்கள்

2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வெளியான பல்வேறு சம்பவங்கள், குழந்தைகள் வீடு, பள்ளி, சமூகம், இணையம் எனப் பல இடங்களிலும் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்வதை வெளிப்படுத்துகின்றன. செங்கல்பட்டில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் சிறுமிக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கைது செய்யப்பட்டார். மதுராந்தகம் அருகே மாற்றுத்திறனாளிச் சிறுமி மீதான பாலியல் தாக்குதல் குறித்துப் புகார் எழுந்தது. தூத்துக்குடியில் மாணவர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாரில் ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இணையவழி அறிமுகத்தைப் பயன்படுத்தி பள்ளி மாணவியைப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் ஆர். வீரமணி தொடர்பாகவும் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைப் புகார்களை அளித்தனர்.

இவை தனித்தனி சம்பவங்கள் மட்டுமல்ல; குழந்தைகள் பாதுகாப்பை குடும்பம், பள்ளி, சமூகம், இணையம் என அனைத்துத் தளங்களிலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. பாதுகாப்பாக இருக்க வேண்டிய வீடும், நம்பிக்கையுடன் செல்ல வேண்டிய பள்ளியும், நட்புக்கான இணையவெளியும் அச்சுறுத்தலாக மாறினால், குழந்தைகள் எங்கே பாதுகாப்பாக இருப்பார்கள்? இது ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி.

குழந்தையின் குரலுக்குச் செவிசாய்ப்பதே முதல் பாதுகாப்பு!

பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள் பயம், அவமானம், குழப்பம் அல்லது குற்றவாளியின் மீதான அச்சம் காரணமாகத் தங்களுக்கு நேர்ந்ததை உடனடியாக வெளிப்படுத்தாமல் மௌனமாக இருக்கலாம். சிலர் தங்களையே குற்றம் சாட்டிக்கொள்வதும் உண்டு. இத்தகைய சூழலில், பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தையின் அனுபவத்தைக் கவனமாகக் கேட்டு, அதன் கூற்றை நம்பி, நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் அளிக்க வேண்டும். “நீ எந்தத் தவறும் செய்யவில்லை; நாங்கள் உனக்குத் துணையாக இருக்கிறோம்” என்ற உறுதியை வழங்க வேண்டும். குழந்தையைக் குற்றம் சாட்டுவதையோ, மீண்டும் மீண்டும் விசாரித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதையோ தவிர்த்து, அதன் அடையாளத்தையும் தனியுரிமையையும் பாதுகாப்பதுடன், தேவையான மருத்துவம், உளவியல் ஆலோசனை மற்றும் சட்ட உதவிகளை ஒருங்கிணைந்து வழங்க வேண்டும்.

தடுப்பதே சிறந்த பாதுகாப்பு!

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம், மனநல ஆலோசனை, சட்ட உதவி மற்றும் கல்வி உள்ளிட்ட முழுமையான மறுவாழ்வு அவசியம். அதேவேளையில், வன்முறை நிகழ்ந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, அது நிகழாமல் தடுப்பதே முதன்மையான கடமையாகும்.

பெற்றோர்கள் குழந்தைகளுடன் மனம்விட்டுப் பேசி, அவர்களின் அச்சங்களையும் அனுபவங்களையும் கவனமாகக் கேட்க வேண்டும். உடலின் தனிப்பட்ட உறுப்புகள், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல், வரையறுக்கப்பட்ட எல்லைகள் குறித்து வயதுக்கேற்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகள் உள்ளிட்ட குழந்தைகள் தொடர்புடைய நிறுவனங்களில் பாதுகாப்புக் கொள்கைகளைச் செயல்படுத்தி, பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். புகார் அளிப்பதற்கான எளிய வழிமுறைகளையும் உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், குழந்தைகள் உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வையும் பரப்ப வேண்டும். இணையவழி அச்சுறுத்தல்களை அடையாளம் காணவும், தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். குழந்தைகள் அச்சமின்றி வாழக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில்தான் உண்மையான குழந்தைகள் பாதுகாப்பு தொடங்குகிறது.

சட்டங்கள் மட்டும் போதாது; சமூக மாற்றமும் அவசியம்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க அரசு, காவல்துறை, நீதித்துறை, கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக அமைப்புகள், பெற்றோர்கள் என அனைவரும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும். சட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்துதல், விசாரணைகளில் அலட்சியத்தைக் களைதல், சிறப்பு நீதிமன்றங்களையும் குழந்தைகளுக்கான உளவியல் ஆதரவு வசதிகளையும் வலுப்படுத்துதல் ஆகியவை அரசின் முக்கியக் கடமைகளாகும்.

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஊடகங்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தையும் தனியுரிமையையும் பாதுகாத்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக அமைப்புகளும் கல்வி நிறுவனங்களும் குழந்தைகளுக்கு அவர்களின் உரிமைகள், உடல் உரிமை, பாலின சமத்துவம், தனிமனித மாண்பு ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும்.

குழந்தைகளின் உரிமைகளைப் பற்றிப் பேசுவதோடு நமது கடமை முடிந்துவிடுவதில்லை. ஒரு குழந்தை தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லத் துணியும்போது, குழந்தையை குற்றம் சாட்டாமல், பாதுகாப்பாகத் துணைநிற்கும் சமூகமாக நாம் இருக்கிறோமா? குழந்தைகள் பாதுகாப்பு என்பது சட்டத்தின் கடமையாக மட்டுமல்ல, சமூகத்தின் மனசாட்சியாகவும் மாற வேண்டும்.

குழந்தைப் பருவம் காயங்களின் நினைவாக மாறிவிடக் கூடாது!

நவம்பர் 18ஆம் நாளில் நாம் சில உறுதிமொழிகளை ஏற்க வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்தமாட்டோம்; பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் குற்றம்சாட்டமாட்டோம்; அவர்களின் குரலுக்குச் செவிசாய்த்து, நம்பிக்கையுடன் துணை நிற்போம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவோம். குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைத் திருமணம், குழந்தைக் கடத்தல், பாலியல் மற்றும் சாதிய வன்முறைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், பள்ளிகளில் உடல் தண்டனையையும் பாகுபாடுகளையும் ஒழிக்கவும், ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியையும் பாதுகாப்பான வாழ்வுச் சூழலையும் உறுதிப்படுத்தவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

கொண்டாட்டத்தைத் தாண்டி, குழந்தைகள் உரிமைகளுக்கான உறுதிமொழி!

குழந்தைகள் தினம் என்பது கேக்குகளையும் வாழ்த்து அட்டைகளையும் வழங்கிக் கொண்டாடும் ஒரு நாளாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது. குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான உறுதிமொழியை ஏற்று, அதைச் செயல்படுத்தும் நாளாக அமைய வேண்டும். இத்தகைய உறுதிமொழிகள் அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளிலும், சமூகத்தின் அன்றாட நடைமுறைகளிலும் பிரதிபலிக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வன்முறையின் காயங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடும். எனவே, அத்தகைய பாதிப்புகளைத் தடுப்பதும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்கான ஆதரவை வழங்குவதும் நமது கூட்டுப் பொறுப்பாகும். குழந்தைகள் தினத்தின் உண்மையான சிறப்பு, ஒருநாள் மகிழ்ச்சியை வழங்குவதில் அல்ல; ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழந்தையும் அச்சமின்றி, சம உரிமைகளுடனும் மாண்புடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவதில்தான் உள்ளது.

குழந்தைகளைக் காப்போம்!
வன்முறைகளையும் பாகுபாடுகளையும் ஒழிப்போம்!
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவோம்!
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான குழந்தைப் பருவத்தை உறுதிப்படுத்துவோம்!

வழக்கறிஞர் கா.கணேசன், எழுத்தாளர், குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர். பேச: 9994368503

கட்டுரையாளர் குறிப்பு:

கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகள், குழந்தை உரிமைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறைகளில் களப்பணியாற்றி வருபவர். மக்கள் கண்காணிப்பகம் அமைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி, நூற்றுக்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணப்படுத்தி, தலையீடுகளை மேற்கொண்டுள்ளார். கனடா, நெதர்லாந்து, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சர்வதேசப் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளார். தமிழக அரசின் மாநிலத் தத்தெடுப்பு வள ஆதார அமைப்பில் மாநிலத் திட்ட மேலாளராகவும், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மனித உரிமைகள் மற்றும் குழந்தை உரிமைகள் தொடர்பான பயிற்சியாளரும் எழுத்தாளருமான இவர், ‘நாமும் நாடும்’ நூலின் ஆசிரியர். தற்போது வான்முகில் அமைப்புடன் இணைந்து குழந்தைகளிடையே அரசமைப்பு உரிமைக் கல்வியை முன்னெடுத்து வருகிறார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel