கோவா சர்வதேச திரைப்பட விழா: ராதிகாவின் ‘தாய் கிழவி’, ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ முதல் பழங்குடி மக்களின் கதைகள் வரை!

By Mathi

|

Published on 18 Nov 2026, 7:54 AM

Goa IFFI 2026

இந்திய சினிமா என்றாலே தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகும் பிரம்மாண்டமான திரைப்படங்களும் முன்னணி நடிகர்களும்தான் பெரும்பாலும் நினைவுக்கு வருகின்றனர். ஆனால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகம் அறியப்படாத மொழிகளிலும் தனித்துவமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

பழங்குடி மக்களின் வாழ்க்கை, பாரம்பரிய நம்பிக்கைகள், குடும்ப உறவுகள், சமூக அநீதிகள், பெண்களின் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல்வேறு பிரச்சினைகளை இந்தப் படங்கள் பேசுகின்றன. இத்தகைய பிராந்திய மொழித் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கோவாவில் நவம்பர் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India – IFFI) நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்த விழாவின் இந்தியன் பனோரமா உள்ளிட்ட பிரிவுகளில் தமிழ், கன்னடம், துளு மற்றும் வடகிழக்கு இந்திய மொழிகளில் உருவான பல்வேறு திரைப்படங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, ராதிகா சரத்குமார் நடித்துள்ள ‘தாய் கிழவி’, ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’, அருணாச்சலப் பிரதேசத்தின் நியிஷி மொழியில் உருவான ‘உரும்’ உள்ளிட்ட 14 படங்கள் தனித்துவமான கதைக்களங்களுடன் தேர்வாகியுள்ளன.

ADVERTISEMENT

ராதிகாவின் ‘தாய் கிழவி’ – குடும்ப உறவுகளின் கதை

தமிழில் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ (Thaai Kizhavi) திரைப்படம், 70 வயது மூதாட்டியான பவுனுத்தாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. ராதிகா சரத்குமார் நடித்துள்ள இந்தப் படத்தில், பவுனுத்தாயின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த மகன்கள் மீண்டும் வீட்டுக்குத் திரும்புகின்றனர். பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகச் சந்திக்கும்போது, பழைய மனக்கசப்புகளும் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் வெளிப்படுகின்றன. குடும்பத்திற்குள் மறைக்கப்பட்டிருந்த ரகசியம் ஒன்றும் இந்தச் சந்திப்பின் மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது. ஒரு தாயின் வாழ்க்கையையும் அவரைச் சுற்றியுள்ள குடும்ப உறவுகளையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

ஸ்மார்ட்போன் சவால்களில் சிக்கும் இளைஞர் – ‘ஸ்க்ரோல்’

இயக்குநர் கண்ணன் எஸ். இயக்கியுள்ள ‘ஸ்க்ரோல்’ (Scroll) திரைப்படம், இன்றைய இளைஞர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை மையமாகக் கொண்ட த்ரில்லர் கதையாகும். ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு அடிமையாகியுள்ள இளைஞர் ஒருவர், அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறார். ஆனால், ஒரு செயலியின் மூலம் அவர் எதிர்கொள்ளும் ஆபத்தான சவால்கள், அவரது வாழ்க்கையை எதிர்பாராத திசைக்குக் கொண்டு செல்கின்றன. டிஜிட்டல் உலகின் ஈர்ப்பு, தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல், அதன் விளைவுகள் ஆகியவற்றை இந்தப் படம் பேசுகிறது.

பழங்குடிப் பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடும் ஆசிரியர்

சத்யசிவா இயக்கியுள்ள ‘அறிவு’ (Arivu) திரைப்படம், 1996-ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பழங்குடி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டது. அந்தக் கிராமத்தில் பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. இந்தச் சூழலில் அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், பெண் குழந்தைகளுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரகசியமாக வகுப்புகளை நடத்துகிறார். பழங்குடி மக்களின் வாழ்க்கை, பெண்களின் கல்வி உரிமை, சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் ஆசிரியரின் முயற்சி ஆகியவற்றை இந்தப் படம் மையமாகக் கொண்டுள்ளது.

பழங்குடி மக்களின் மருத்துவ அறிவைப் பேசும் ‘அட்டப்பாடி’

இயக்குநர் விஜீஷ் மணி இயக்கியுள்ள ‘அட்டப்பாடி’ (Attappadi) என்ற தமிழ் ஆவணப்படமும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறுகிறது. கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது. குறிப்பாக, அவர்கள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வரும் பாரம்பரிய மூலிகை மருத்துவ அறிவு, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை, வனப்பகுதியுடனான உறவு ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. நவீன வாழ்க்கைச் சூழலில் பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் இந்த ஆவணப்படம் வலியுறுத்துகிறது.

சிட்டுக்குருவிகளுக்காக 35 நாட்கள் மின்சாரத்தைத் துறந்த கிராமம்

இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ள ‘கூடு’ (Koodu – Nest) திரைப்படம், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் இடையிலான உறவையும் மையமாகக் கொண்டது. வாச்சாத்தி கிராமத்தில் உள்ள மின்மாற்றி ஒன்றில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுகின்றன. அந்தக் கூட்டில் உள்ள பறவைகளையும் குஞ்சுகளையும் பாதுகாப்பதற்காக, கிராம மக்கள் 35 நாட்கள் மின்சாரம் இல்லாமல் வாழ முடிவு செய்கின்றனர். சிறிய உயிரினங்களின் பாதுகாப்புக்காக ஒரு கிராமமே மேற்கொள்ளும் முயற்சியை இந்தப் படம் பதிவு செய்கிறது. மனிதர்களின் அன்றாடத் தேவைகளுக்கும் இயற்கையைப் பாதுகாப்பதற்கான பொறுப்புக்கும் இடையிலான தொடர்பை இந்தப் படம் எடுத்துரைக்கிறது.

இரண்டு பிரிவுகளில் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’

கன்னட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: எ லெஜண்ட் – சாப்டர் 1’ (Kantara: A Legend – Chapter 1) திரைப்படம், இந்த விழாவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியன் பனோரமாவின் மெயின்ஸ்ட்ரீம் சினிமா பிரிவு மட்டுமின்றி, சர்வதேசப் போட்டிப் பிரிவிலும் இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடம்ப மன்னர்கள் ஆட்சிக் காலத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரம் பெர்மே என்ற இளம் வனவாசி. அண்டை நாடான பங்க்ராவுக்குச் செல்லும் பெர்மே, அங்குள்ள ஆட்சியாளர்கள் வனப்பகுதி மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதைக் காண்கிறார். இளவரசர் குலசேகரன் பழங்குடி மக்களைத் தாக்கி, பலரைக் கொன்றதைத் தொடர்ந்து, அவர்களுடன் இணைந்து நீதிக்காகவும் தர்மத்துக்காகவும் போராடுகிறார். நாட்டுப்புற நம்பிக்கைகள், தெய்வ வழிபாட்டு மரபுகள், வனப்பகுதி மக்களின் வாழ்க்கை, அவர்களது உரிமைகளுக்கான போராட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் கதையாக ‘காந்தாரா: சாப்டர் 1’ உருவாகியுள்ளது.

மூன்று தலைமுறை குடும்ப உறவுகளின் கதை

கன்னட இயக்குநர் பி. சேஷாத்ரி இயக்கியுள்ள ‘ரூபி கியூப்’ (Ruby-Cube), மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்ட திரைப்படம். மனநல ஆலோசகரான ரோகிணியும் அவரது கணவர் மூர்த்தியும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகள் சித்ராவும் தனது திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். இந்தச் சூழலில், மலைவாசஸ்தலத்துக்கு விடுமுறையைக் கழிக்கச் செல்லும் குடும்பத்தினர் மீண்டும் ஒன்றாகச் சந்திக்கின்றனர். அப்போது கடந்தகால மனக்கசப்புகள், தீர்க்கப்படாத பிரச்சினைகள், வெளிப்படுத்தப்படாத உணர்வுகள் ஆகியவை வெளிப்படுகின்றன. ரூபிக்ஸ் கியூப் புதிரில் ஒவ்வொரு பகுதியையும் சரியான இடத்துக்குக் கொண்டுவரப் பொறுமை தேவைப்படுவதைப் போலவே, மனித உறவுகளையும் பொறுமையுடனும் புரிதலுடனும் அணுக வேண்டும் என்ற கருத்தைப் படம் முன்வைக்கிறது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடும் மனிதர்

டாக்டர் பிரதீப் கெஞ்சனூரு இயக்கியுள்ள ‘தி ஹக் ஆஃப் எம்ப்டினஸ்’ (The Hug of Emptiness) என்ற கன்னட ஆவணப்படம், சந்திரசேகர் என்பவரின் நீண்டகால சட்டப் போராட்டத்தைப் பதிவு செய்கிறது. 2003-ஆம் ஆண்டு வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், சுள்ளியா கூட்டுறவு வங்கி அவரது சொத்தைக் கையகப்படுத்தியது. இந்த நடவடிக்கை அநீதியானது என்று கருதிய சந்திரசேகர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கின் மூலம் நீதியைப் பெறுவதற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார். நிரந்தரமாகத் தங்குவதற்கு வீடு இல்லாத நிலையில், தனது காரிலேயே வசித்து வரும் அவரது வாழ்க்கை, இந்த ஆவணப்படத்தின் மையமாக அமைந்துள்ளது. ஒரு தனிமனிதரின் நீதிக்கான போராட்டம், அதனால் ஏற்பட்ட தனிமை, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை ஆகியவற்றை இந்தப் படம் பேசுகிறது.

மறைந்த காதலியின் நினைவுகளுடன் ஒரு பயணம்

அபிஷேக் இயக்கியுள்ள ‘உளிதித்து சம்பிகே மாத்ரா’ (Ulididdu Sampige Maatra – Only the Flower Remained) என்ற கன்னடக் குறும்படம், காதல் இழப்பையும் நினைவுகளையும் மையமாகக் கொண்டது. மஞ்சண்ணா என்ற மனிதர், தான் காதலித்து இழந்த பெண்ணின் நினைவுகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அந்தப் பெண்ணின் புகைப்படம் சேதமடைந்துவிடுகிறது. இதனால் ஓவியர் ஒருவரை அணுகும் மஞ்சண்ணா, தனது நினைவுகளில் உள்ள காதலியின் முகத்தை ஓவியமாக வரைந்து தருமாறு கேட்கிறார். ஓவியம் கிடைத்த பிறகு அவர் சந்திக்கும் மர்மமான நபர், கடந்தகாலத்தைப் பற்றிய அவரது பார்வையையே மாற்றுகிறார். இழப்பு, நினைவுகள், மனித மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை இந்தக் குறும்படம் ஆராய்கிறது.

பாரம்பரிய மருத்துவ அறிவைப் பாதுகாக்கப் போராடும் பழங்குடிப் பெண்

துளு மொழியில் உருவாகியுள்ள ‘பிலி சன்னே’ (Pili Channe) திரைப்படத்தை அனுபமா ஷாரதி இயக்கியுள்ளார். தனது பாட்டியிடம் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தைக் கற்றுக்கொள்ளும் பழங்குடிப் பெண்ணின் வாழ்க்கையே இந்தப் படத்தின் மையக்கதை. இறப்பதற்கு முன்பு பாட்டி, காட்டின் மருத்துவ அறிவைத் தன்னகத்தே கொண்டிருப்பதாக நம்பப்படும் புனிதக் கல் ஒன்றை அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்கிறார். அந்தப் பெண் தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி கிராம மக்களுக்கு உதவுகிறார். இதனால் அவர்மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால், பேராசை கொண்ட கிராம மருத்துவரும் கிராமத் தலைவரும் அந்தப் புனிதக் கல்லைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். அதை ஒப்படைக்க மறுக்கும் அந்தப் பெண், தனது மூதாதையர்களின் மருத்துவ அறிவைப் பாதுகாக்கப் போராடுகிறார். பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவு, இயற்கையுடன் அவர்களுக்கு உள்ள உறவு, மரபுகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் ஆகியவற்றை இந்தப் படம் எடுத்துரைக்கிறது. இந்தத் திரைப்படத்தின் உலக அளவிலான முதல் திரையிடல் கோவா திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது.

முதல்முறையாக நியிஷி மொழித் திரைப்படம்

வடகிழக்கு இந்திய மாநிலங்களிலிருந்து தேர்வாகியுள்ள படங்களில் முக்கியமானது ‘உரும்’ (Urum – Spirit). அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இயக்குநர் டுயு தாப்யோ (Duyu Tabyo) இயக்கியுள்ள இந்தப் படம், நியிஷி பழங்குடி மக்களின் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் நியிஷி மொழித் திரைப்படம் ஒன்று தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறை. உளவியல் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படம், அருணாச்சலப் பிரதேசத்தின் தொலைதூர மலைக் கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டது. தனது இளம் மகளை இழந்த தந்தை ஒருவர், அந்த இழப்பால் ஏற்படும் குற்ற உணர்வாலும் அச்சமூட்டும் காட்சிகளாலும் பாதிக்கப்படுகிறார். அவரது வாழ்க்கையின் வழியாகப் பழங்குடி மக்களின் நினைவுகள், மன அதிர்ச்சிகள், மறைக்கப்பட்ட உண்மைகள் ஆகியவற்றைப் படம் ஆராய்கிறது. இந்தப் படத்தின் உலக அளவிலான முதல் திரையிடலும் கோவா திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது.

பணப்பையால் மாறும் காதல் வாழ்க்கை

அசாமிய மொழியில் உருவாகியுள்ள ‘சூர்யமுகி’ (Surjyamukhi – Sunflower) திரைப்படத்தை நடிகையும் இயக்குநருமான அந்தரா ஜி.ஜி. சவுத்ரி இயக்கியுள்ளார். நகர்ப்புற வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தில் புஷ்பல், பிரார்த்தனா ஆகிய இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே போட்டியும் மோதலும் ஏற்படுகின்றன. பின்னர் அது நட்பாகவும் காதலாகவும் மாறுகிறது. இந்த நிலையில், காணாமல் போன பணப்பை ஒன்று அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்தப் பணப்பையால் ஏற்படும் எதிர்பாராத சூழ்நிலைகள், இருவரது வாழ்க்கையிலும் தார்மீகச் சிக்கல்களை உருவாக்குகின்றன. பணம், மனிதர்களின் முடிவுகள், காதல் உறவில் ஏற்படும் சோதனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தப் படமும் கோவா விழாவில் உலக அளவில் முதன்முறையாகத் திரையிடப்பட உள்ளது.

அசாம் கிராமத்திலிருந்து கேன்ஸ் சிவப்புக் கம்பளம் வரை

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த விருது பெற்ற இயக்குநர் ஐமி பருவா (Aimee Baruah) இயக்கியுள்ள ‘ரெட் கார்பெட்’ (Red Carpet), 30 நிமிட ஆவணப்படமாகும். அசாமின் கர்பி ஆங்லாங் மலைப்பகுதியில் உள்ள டோன்காமோகாம் கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய நெசவாளர் ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தை இந்தப் படம் பதிவு செய்கிறது. கிராமத்தில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர், பிரான்சில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பளம் வரை சென்ற பயணமே இந்த ஆவணப்படத்தின் மையக்கரு. கர்பி பழங்குடி மக்களின் நெசவுப் பாரம்பரியம், கைவினைக் கலைஞர்களின் வாழ்க்கைப் போராட்டம், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் கலை அறிவு ஆகியவற்றை இந்தப் படம் எடுத்துரைக்கிறது. பாரம்பரிய கைத்தறிக் கலைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் இந்த ஆவணப்படம் வலியுறுத்துகிறது.

மிசோரம் பெண்களின் சாதனைகளைப் பேசும் ஆவணப்படம்

இயக்குநர் ராஜ்தீப் சவுத்ரி இயக்கியுள்ள ‘சலோ இந்தியா வித் எரிக் ஜி – மிசோரம்’ (Chalo India With Eric Ji – Mizoram) என்ற 48 நிமிட ஆங்கில ஆவணப்படமும் தேர்வாகியுள்ளது. பிரிட்டனின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வரலாற்று ஆசிரியருமான எரிக் ஒல்லரென்ஷா (Eric Ollerenshaw OBE), மிசோரம் மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்க்கை, சமூக அமைப்பு, கலாச்சாரம் ஆகியவற்றை அறிந்துகொள்வதை இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது. மிசோரம் மாநிலத்தின் உயர்ந்த கல்வியறிவு, சமூக ஒழுக்கம், கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வம் ஆகியவற்றுடன், தொழில், கல்வி, சமூகத் தலைமைத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்களின் பங்களிப்பும் இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. குறிப்பாக, மிசோ பெண்கள் தொழில் முனைவோராகவும் சமூகத் தலைவர்களாகவும் செயல்படும் விதத்தை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது.

கிரீஷ் காசரவல்லியின் 50 ஆண்டுகால திரைப்பயணம்

இந்திய மாற்றுச் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கிரீஷ் காசரவல்லியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தைக் கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சியும் கோவா திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது. நவம்பர் 21-ந் தேதி ‘The Moral Universe of Parallel Cinema: 50 Years of Girish Kasaravalli’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை நமன் ராமச்சந்திரன் நெறிப்படுத்துகிறார். காசரவல்லியின் முதல் திரைப்படமான ‘கடஷ்ரத்தா’ (Ghatashraddha) முதல் ‘தபரன கதெ’ (Tabarana Kathe), ‘தாயி சாஹேபா’ (Thaayi Saheba), ‘த்வீபா’ (Dweepa) உள்ளிட்ட படங்கள் வரை அவரது திரைப்பயணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சமூக அநீதிகள், தார்மீகச் சிக்கல்கள், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை ஆகியவற்றைத் தனது திரைப்படங்களின் மூலம் பதிவு செய்துள்ள காசரவல்லி, இந்திய மாற்றுச் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். சினிமாவுக்கும் சமூக மனசாட்சிக்கும் இடையிலான தொடர்பு, திரைப்படங்கள் மூலம் சமூகப் பிரச்சினைகளை அணுகும் விதம் ஆகியவை இந்தக் கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

பாரதிராஜா, பாக்யராஜுக்கு கோவா திரைப்பட விழாவில் சிறப்பு அஞ்சலி

தமிழ் சினிமாவில் தனித்துவமான முத்திரை பதித்த இயக்குநர்கள் பாரதிராஜா, கே. பாக்யராஜ் ஆகியோருக்கு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. கடந்த ஜூன் மாதம் இருவரும் அடுத்தடுத்து மறைந்த நிலையில், அவர்களது புகழ்பெற்ற திரைப்படங்களை மீண்டும் திரையிட்டு கௌரவிக்க விழா ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பாரதிராஜாவின் நினைவாக, சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் 1985-ஆம் ஆண்டு வெளியான ‘முதல் மரியாதை’ திரைப்படம் திரையிடப்படுகிறது. கிராமப்புற வாழ்க்கையையும் மனித உறவுகளையும் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்த இந்தப் படம், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதேபோல, கே. பாக்யராஜின் நினைவாக, அவர் இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் திரையிடப்படுகிறது. 1983-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், குடும்ப உறவுகளையும் நகைச்சுவையையும் மையமாகக் கொண்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

பிராந்திய மொழி சினிமாவுக்கு சர்வதேச மேடை

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறும் இந்த 14 படங்களும் வெவ்வேறு மொழிகளிலும் கலாச்சாரப் பின்னணிகளிலும் உருவாகியிருந்தாலும், மனிதர்களின் வாழ்க்கையையும் சமூகப் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டுள்ளன. தமிழில் ‘தாய் கிழவி’ குடும்ப உறவுகளைப் பேசுகிறது. ‘அறிவு’ பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை மையமாகக் கொண்டுள்ளது. ‘கூடு’ சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

ஒருபுறம் ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான திரைப்படம் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளையும் போராட்டங்களையும் பேசுகிறது. மறுபுறம் ‘உரும்’ போன்ற திரைப்படங்கள் அதிகம் அறியப்படாத பழங்குடி மொழிகளின் கதைகளை உலக அரங்குக்குக் கொண்டு செல்கின்றன. ‘ரெட் கார்பெட்’ பாரம்பரிய நெசவாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. ‘தி ஹக் ஆஃப் எம்ப்டினஸ்’ தனிமனிதரின் நீதிக்கான நீண்ட போராட்டத்தைப் பேசுகிறது. ‘ரூபி கியூப்’, ‘சூர்யமுகி’ போன்ற படங்கள் மனித உறவுகளின் சிக்கல்களை எடுத்துரைக்கின்றன.

இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை என்பது பெரிய திரைப்படத் தொழில்கள் மற்றும் நட்சத்திரங்களை மட்டுமே சார்ந்ததல்ல. சிறிய மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், பழங்குடி மக்களின் கதைகள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவையும் அதன் முக்கியமான அடையாளங்களாக உள்ளன. 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, இத்தகைய பிராந்திய மொழிப் படைப்புகள் சர்வதேசத் திரைப்பட ரசிகர்களைச் சென்றடைவதற்கான முக்கியமான மேடையாக அமைய உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel