திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், அந்தத் தூண் கோயிலின் பகுதி என்று தமிழக அரசு தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்காவிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டார். இந்த உத்தரவை கடந்த ஜனவரி 6-ந் தேதி சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது.
தர்கா அருகே உள்ள தூண் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட நில அளவைக் கல் என்றும், அங்கு தீபம் ஏற்றும் பாரம்பரிய வழக்கம் இல்லை என்றும் தமிழக அரசு வாதிட்டிருந்தது. ஆனால், அந்தத் தூண் நில அளவைக் கல் என்ற வாதத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று நவம்பர் 17-ந் தேதி இந்த வழக்கை விசாரித்தது.
தூண் கோயிலின் பகுதியா? தர்காவின் பகுதியா?
இந்த விசாரணை குறித்து நேற்று நவம்பர் 17-ந் தேதி Supreme Court Observer வெளியிட்ட செய்தியில், “”இந்த மலையில் இரண்டு சிகரங்கள் உள்ளன. ஒரு சிகரத்தில் தூணுக்கு அருகே தர்கா அமைந்துள்ளது. மற்றொரு சிகரத்தில், 199.5 மீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. சொத்துகளின் எல்லைகள் 1923-ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பாணையின் மூலம் நிர்ணயிக்கப்பட்டன. குறிப்பாக, இடைக்காலத் தடை கோரிய தரப்பினரிடையே அந்தத் தூணின் உரிமை குறித்து கருத்து வேறுபாடு நிலவியது. அந்தத் தூண் கோயிலின் ஒரு பகுதி என்று தமிழக அரசு வாதிட்டது. ஆனால், மற்ற தரப்பினர் அது தர்காவின் ஒரு பகுதி என்று வாதிட்டனர்”” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தத் தூண் ஆங்கிலேயர் காலத்து நில அளவைக் கல் என்று தமிழக அரசு வாதிட்டிருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற விசாரணையில் அந்தத் தூண் கோயிலின் பகுதி என்று தமிழக அரசு தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த முரண்பாட்டை சுட்டிக்காட்டியுள்ள இடதுசாரித் தலைவர் மருதையன் தமது எக்ஸ் பக்கத்தில், “இந்த வழக்கிற்கு தொடர்பில்லாத ஒரு பிரச்சனையை புதிதாக உருவாக்கி, திருப்பரங்குன்றம் வழக்கிற்கு இன்று SC-யில் குழி பறித்திருக்கிறது விஜய் அரசு” என விமர்சித்துள்ளார்.
இதனிடையே இந்த வழக்கு இன்று (நவம்பர் 18) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.









