தங்கம் இறக்குமதிக்கு வெளிநாட்டை நம்ப வேணாம் : நிதி ஆயோக்கின் புதிய கொள்கை வரைவு!

By Minnambalam Desk

|

Published on 16 Nov 2026, 7:43 PM

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை குறையவே குறையாது. அதற்காக வெளிநாடுகளிலிருந்து நிறையத் தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.

இந்த இறக்குமதியைக் குறைக்க, நம் நாட்டின் தங்கச் சுரங்கங்களை மேம்படுத்தி, புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நிதி ஆயோக் (NITI Aayog) ஒரு புதிய கொள்கை வரைவைத் தயாரித்து வருகிறது.

ADVERTISEMENT

தங்கச் சுரங்கத் துறையில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, உள்நாட்டிலேயே தங்க உற்பத்தியைக் கூட்டுவதுதான் நோக்கம்.

வரைவில் என்னென்ன இருக்கும்?

ADVERTISEMENT
  • தங்கச் சுரங்கத் திட்டங்களுக்கு வரிச் சலுகைகள்.
  • நீண்டகாலச் சுரங்க உரிமங்கள்.
  • சுரங்க ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களின் தொழில்நுட்பத் திறனை மதிப்பிட புதிய நடைமுறைகள். இதன்மூலம் உண்மையில் வேலை செய்யக்கூடிய முதலீட்டாளர்களைக் கண்டறிய முடியும்.

நம்மிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது?

இந்தியாவில் சுமார் 501 முதல் 518 மில்லியன் டன் தங்கத் தாது வளம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து 600 முதல் 607 டன் தங்கத்தை எடுக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாநில வாரியாகப் பார்த்தால் பீகாரில் அதிகபட்சமாக 44 முதல் 45 சதவீத வளம் உள்ளது. அடுத்து ராஜஸ்தான் 25 சதவீதம், கர்நாடகா 21 சதவீதம். மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தங்க வளம் காணப்படுகிறது.

இறக்குமதிச் செலவு எவ்வளவு?

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி சுமார் 71.98 பில்லியன் டாலர். 2026 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை இறக்குமதி 39.9 சதவீதம் குறைந்து 24.78 பில்லியன் டாலராக இருந்தாலும், உலகில் அதிகத் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இடம்பெறுகிறது.

முதலீட்டுக்கு என்ன தடை?

  • நிலத்தடியில் எங்கே தங்கம் இருக்கிறது என்று கண்டறியத் தேவையான தரவுகள் குறைவு.
  • அனுமதிகள் பெறுவதில் தாமதம்.
  • திட்டங்கள் லாபகரமாக இருக்குமா என்ற பொருளாதாரச் சாத்தியக்கூறு பற்றிய கேள்விகள்.

இவற்றைச் சரிசெய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், சர்வதேசத் தரத்திலான புவியியல் தரவுகளை உருவாக்கவும் நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தால், உள்நாட்டுத் தங்க உற்பத்தி கூடும். இறக்குமதிக்குச் செலவாகும் அந்நியச் செலாவணியும் ஓரளவு கட்டுக்குள் வரும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel