டெல்லியில் சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் பொதுச்செயலாளர்களான டி. ராஜா மற்றும் எம்.ஏ. பேபி ஆகியோரை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் விஜய் அரசுக்கு இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஎம் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருகின்றன. அதே நேரத்தில் விஜய் அரசின் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து போராட்டங்களை இடதுசாரி கட்சிகள் நடத்தி வருகின்றன. தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் இடதுசாரி கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதேபோல, தவெக தலைமையிலான ”மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி”யில் விசிக, காங்கிரஸ், மதிமுக, முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிற இடதுசாரி கட்சிகள் இரண்டும் இந்த கூட்டணியில் இணைய மறுத்துவிட்டன. முதல்வர் விஜய் நடத்திய தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் இரு கட்சிகளும் பங்கேற்கவில்லை.
இந்த பின்னணியில் டெல்லி சென்ற அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சிபிஐ-ன் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, சிபிஎம்-ன் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி ஆகியோரை சந்தித்து பேசினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலையும் ஆதவ் அர்ஜூனா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.









