கோவை தொண்டாமுத்தூர் அருகே ஷோ ரூமில் நுழைந்து, தவெக நிர்வாகி இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கணவருக்கு தவெகவில் பொறுப்பு வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் ஷோ ரூமில் நுழைந்து அத்துமீறியதாக வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும் பெண் உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எனது கணவர் தவெகவில் பயணித்து வந்தார். சனிக்கிழமை இரவு 8:30 மணியளவில் தவெக நிர்வாகி பிரகாஷ் என்ற தம்பி வந்து எனது கணவரைக் குறித்து விசாரித்தார். அப்போது அவர் இல்லை என்று தெரிவித்தோம். ‘வண்டி எங்கே?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘நீங்கள் அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்; உங்களுக்கும் எனக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. வரவு செலவு இருக்கிறது என்று கட்சி அலுவலகத்தில் வைத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அவரிடம் பேசிக் கொள்ளுங்கள். நீங்கள் கிளம்புங்கள்’ என்றேன். அதற்கு, ‘உன்னை ஒரு பெண் என்று பார்க்கிறேன்; இல்லையென்றால் நாளை காலை யார் என்று காட்டுகிறேன்’ என்று 8:35 மணியளவில் சொன்னார்.
நாங்கள் எங்கள் பணியாளர்களை வைத்து ஷோரூமை அடைக்க முயற்சித்தபோது வண்டியை எடுத்தார். அப்போது நானும் எனது பணியாளரும் இணைந்து வண்டியை இழுத்தோம். அப்போது பிரகாஷ் தம்பியுடன் வந்த இரண்டு பேரும் வண்டியை இழுத்தார்கள். வண்டியை இழுக்க முடியவில்லை என்றவுடன் வண்டியைக் கீழே போட்டுவிட்டு, சோபாவில் உட்கார்ந்து ஒருமையில் திட்ட ஆரம்பித்தார். அதன் பிறகுதான் நான் வீடியோ எடுத்தேன். வீடியோ என்பது திட்டமிட்டு எடுக்கப்பட்டது அல்ல. பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரும் குடித்துவிட்டு வந்தனர். அவர்களுக்கு வண்டி வேண்டும் அல்லது பணம் வேண்டும்; நாங்கள் இங்குத் தொழில் செய்யக் கூடாது என்று நினைக்கிறார்கள்.
‘நாங்கள் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டோம்’ என்று அவர்களிடம் சொன்னதும், ‘இவர் எம்பி தேர்தலில் நிற்க வேண்டும் என்று சொன்னதால் எங்களை டார்கெட் செய்து மிரட்டுகிறார்கள்’. நாங்கள் பிரகாஷ் தம்பியை எதுவும் சொல்லவில்லை; கொடுத்த பணத்தை மட்டும் எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள் என்றுதான் சொன்னோம். நாங்கள் வண்டியைப் பிடுங்கவில்லை. மூன்று மாதமாக வண்டிக்கு ஆர்.சி (RC) போடுவதற்கு வரவில்லை. அவர்தான் வண்டியைக் கொண்டு வந்து கொடுத்தார்.
நான் போன் எடுக்கச் செல்லும்போது காலை இடையில் விட்டார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள்; எங்களுக்கு அசிங்கமாகப் போய்விட்டது. நாங்கள்தான் பணம் கொடுத்து ஏமாந்துள்ளோம். எங்கள் கையில் இருந்தும் பணம் வாங்கியுள்ளனர். அதற்கெல்லாம் ஆதாரம் இல்லை, ஆனால் உண்மையில் காசு வாங்கியுள்ளனர். காசு வாங்கியது மட்டுமல்லாமல், எங்களையே கை எடுத்துக் கும்பிட வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். அவர் சாதாரண பையனாக இருந்தால் உள்ளே வருவாரா? அவர் தவெக என்ற அடையாளத்தை வைத்துதான் மிரட்டுகிறார். என்னைத் தகாத வார்த்தையில் திட்டுகிறார். ‘மகளிரணியைக் கூட்டி வருவேன்’ என்று மிரட்டுகிறார். அவருடைய மனைவியும் மகளிரணியில்தான் இருக்கிறார்.
நாங்கள் திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை. இங்கு எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எங்களை வியாபாரம் செய்ய விடமாட்டார்கள் என்பதுதான் உண்மை. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் தவறாகக் கமெண்ட் போடுகிறார்கள். நாங்கள் எதற்கு ஃபேமஸ் ஆக வேண்டும்? நாங்கள் சம்பாதித்தால்தான் எங்களுக்குச் சாப்பாடு. நான் திட்டமிட்டு தவெகவைக் குறிவைத்து வேறு கட்சியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வீடியோ எடுத்துப் போட்டதாக அசிங்கமாக விமர்சிக்கிறார்கள். நான் எந்தக் கட்சியிலும் இல்லை. சம்பவத்தின்போது நான் அவசர உதவி எண் 100-க்கு போன் செய்தேன், ஆனால் யாரும் வரவில்லை” அவர் தவெக என்ற பெயரை சொல்லி மிரட்டியதால் தான் நான் வீடியோ எடுத்த போது தவெக என்றால் பயமா என்றேன். ஆனால் அந்த வீடியோவிற்கு கீழ் தவெகவினர் அசிங்கமாக கமெணட் செய்கிறார்கள்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.









