பென்ஸ் காரில் வந்த சு.வெங்கடேசன்… நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடும் விமர்சனம்!

By Kavi

|

Published on 16 Nov 2026, 6:23 PM

தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பான, நீதிமன்ற விசாரணையின் போது சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். 

சு.வெங்கடேசன் பயன்படுத்தும் சொகுசு கார் மற்றும் அவர் அணியும் பிராண்டட் உடைகள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

ADVERTISEMENT

பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதலில் நடந்த முறைகேட்டை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமசுப்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் எம்.டி.சுமதி அமர்வு விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT

இன்று (நவம்பர் 16) வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

பென்ஸ் காரில் வந்த சு.வெங்கடேசன் 

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை ரயில் நிலையத்தில் சு. வெங்கடேசனை சந்தித்த சம்பவம் குறித்து நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பேசியுள்ளார். 

ADVERTISEMENT

“சு.வெங்கடேசன் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்று கூறிக்கொள்கிறார். ஆனால் உயர் ரக மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வருகிறார். புத்தகங்களுக்கு கிடைக்கும் ராயல்டி வருமானம் மட்டும் இத்தகைய வாழ்க்கை முறையை தந்து விடுமா என்று எனக்குத் தெரியவில்லை” என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ”சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற தயாராக இருந்தபோது ரயில் நிலையத்திற்கு வெளியே வந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை பார்த்தேன். அதிலிருந்து இறங்கிய நபர் கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருப்பார் என்று முதலில் நினைத்தேன். 

அந்த நபர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் காலணிகள் அனைத்தும் பிராண்டட் பொருட்களாக இருந்தன. பின்னர் தான் அவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் என்பதை அடையாளம் கண்டு கொண்டேன். 

தொடர்ந்து இருவரும் ரயிலை நோக்கி நடந்து சென்றோம். சு வெங்கடேசன் என்னிடம், ’சார்…. ஜட்ஜ் சார் எங்கே செல்கிறீர்கள்’ என்று கேட்டார். அதற்கு நான் வழக்கமாக ஸ்லீப்பர் வகுப்பில் தான் பயணம் செய்வேன். எனது இருக்கை எண் s3 – 23 என்று பதிலளித்தேன். 

இப்போது அவர் ஒரு நீதிபதியாக நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கே அறிவுரை கூறுகிறார்” என்று சு.வெங்கடேசன் விமர்சனத்தை சுட்டிக்காட்டி நீதிபதி இவ்வாறு கூறியுள்ளார். 

என்ன நடந்தது? 

சென்னை பாரதிய வித்யா பவனில் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் எழுத்தாளர் பி.சுவாமிநாதன் எழுதிய ’மகா பெரியவா’ நூலின் 16வது பாகம் (தமிழ்), 4 ஆவது பாகம் (ஆங்கிலம்) நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ’2025 ஆம் ஆண்டிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பெரியார் அறிவுலக நூலகத்தில் அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி புத்தகங்கள் இடம் பெற்றிருக்கிறது. அங்கு இந்த புத்தகங்களை அகற்றிவிட்டு ’மகா பெரியவா’ நூல்களின் அனைத்து பகுதிகளையும் இடம்பெறச் செய்தால்தான் முறைகேடுகளால் ஏற்பட்ட பாவங்கள் நீங்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்’ என்று கூறியிருந்தார். 

நீதிபதியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பதிலளித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சு.வெங்கடேசன், ’நூலக கொள்முதலில் நடைபெற்றிருப்பது ஊழல் என்றும் அதற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், ’ஊழலுக்கு தண்டனை வழங்குவது நீதிபதிகளின் பணி என்றும் பாவங்களுக்கு பரிகாரம் கூறுவது  ஜோதிடர்களின் பணி. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் “மகா பெரியவர்கள்”’ என்றும் விமர்சித்தார்.

இந்த விமர்சனத்துக்குத்தான் நீதிபதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அதோடு ’ஆன்மிகப் புத்தகங்களை வைத்து அந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ளட்டும் என்று நான் ஒரு நகைச்சுவையாகத்தான் கூறினேன். அது உண்மையில் நகைச்சுவைக்காக மட்டுமே’ என்றும் விளக்கம் அளித்துள்ளார் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன். 

அரசு தரப்பு விளக்கம்

இதற்கிடையே இன்றைய வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ’பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார். ஐந்து அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏழு இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது” என்று விளக்கமளித்தார். 

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ’இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இதை உறுதிமொழியாகவே எடுத்துக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தார். 

வழக்கு ஒத்திவைப்பு 

இதையடுத்து வழக்கு விசாரணையை ஒன்று அல்லது இரண்டு விசாரணைகளில் முடிக்க நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel