பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது.
பெரியார் அறிவுலகம் மற்றும் பிற நூலகங்களில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து பள்ளி கல்வித்துறை செயலாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் கோவை பெரியார் அறிவுலகம் , திருச்சி காமராஜர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூர் அஞ்சலையம்மாள் அறிவுலகம், திருநெல்வேலியில் உருவாக்கப்படும் நூலகம் ஆகிய ஆறு நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என புகார் தெரிவித்து இருந்த அடிப்படையில் நவம்பர் 7ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை துவக்கியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தாகவும், இதனையடுத்து கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் மின் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் நாலடியார் ஒரு புலவர் என்றும் மதுரைக் காஞ்சி நூலின் ஆசிரியர் ஒரு மன்னர் என்றும் தவறான தகவல்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் ChatGPT போன்ற செயலியைப் பயன்படுத்தி இல்லாத எழுத்தாளர்கள் பெயரில் தரமற்ற புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் வெளிநாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள் வேறு நபர்களின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. விசாரணையில் முறைகேடுகள், நடைமுறை மீறல்கள் , சட்ட விரோத நடவடிக்கைகள் இருப்பது தெரிய வந்தது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கு பொது நூலகங்களின் இயக்குனர் ஒரு ஒருங்கிணைப்பு குழுவை அமைந்துள்ளார் எனவும், அந்த ஒருங்கிணைப்பு குழுவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் துணை தலைமை நூலகர் காமாட்சி, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக துணை தலைமை நூலகர் தினேஷ் குமார், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் மற்றும் தகவல் அலுவலர் சந்தான கார்த்திகேயன், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக நூலகர் மற்றும் தகவல் அலுவலர் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் இதில் இடம்பெற்று இருந்தனர் எனவும் இந்தக் குழு கோவை பெரியார் அறிவுலகம் உட்பட ஆறு மாவட்டங்களில் உருவாக்கப்பட்டு வரும் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதை ஒருங்கிணைக்கும் நோக்கில் அமைக்கபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அகல்விளக்கு பதிப்பகம் மற்றும் பினிக்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் அனுப்பிய மெயிலில், அகல் விளக்கு பதிப்பகத்தின் பெயரில் 2,339 தலைப்புகள், பினிக்ஸ் பப்ளிகேஷன் சார்பில் 99 தலைப்புகள் கொண்ட பட்டியல் அனுப்ப இருப்பதும், இதில் அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் பினிக்ஸ் பதிப்பகம் ஆகியவற்றின் 1857 புத்தகங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள் பெரியார் அறிவுலகத்திற்கு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி மற்றும் மார்ச் 19ம் தேதி பெறப்பட்டு இருப்பதும் புத்தகங்களை சரிபார்த்த பின்னர், பதிப்பகத்தினரிடம் இருந்து பெறப்பட்ட 1,779 புத்தகங்களுக்கு பணம் செலுத்துவதற்கு மாவட்ட நூலகத்திற்கு அனுப்பப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு பதிப்பகங்களின் புத்தகங்கள், உயர்மட்ட குழு முன்பு வைக்கப்பட்ட அதே நாளில் 48 புத்தகங்கள் ஐ எஸ் பி என் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ எஸ் பி என் இணைய தளம் இந்த வெளியீட்டாளருக்கு 418 புத்தக ஆசிரியர்களை பட்டியலிடுகிறது எனவும், இவர்களில் ஆறு புத்தக ஆசிரியர்கள் தலா நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கயளை எழுதி இருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதில் லட்சுமி மோகன் 124 புத்தகங்களையும், தாமரை பன்னீர் 123 புத்தகங்களையும், தாமரை முரளி 115 புத்தகங்களையும், ஜோதி ஹரிஹரன் 114 புத்தகங்களையும் எழுதியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோகன் நடத்திவரும் அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் பினிக்ஸ் பதிப்பகம் தொடர்பான விசாரணையில் அதில் உள்ள புத்தகங்கள் இணையதளங்கள், ஆன்லைன் செயலிகள், chat gpt உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல்களை எடுத்து பயன்படுத்தி இருப்பதும், கற்பனை ஆசிரியர் பெயர்களில் புத்தகம் உருவாக்கியதும் தெரிவிக்கபட்டுள்ளது.புத்தகத்தின் உள்ளடக்கங்கள் தெளிவற்ற, பொருத்தமற்ற, தவறான வழி நடத்தும் மற்றும் தரம் குறைந்த மொழியில் இருப்பதாகவும், இது பொது நூலகத்திற்கு தகுதியானது அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
புத்தக பரிந்துரை குழு 26,000 புத்தகங்களை பரிந்துரைத்துள்ள நிலையில் புத்தக பரிந்துரை குழு பரிந்துரைக்காத வெளியீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புத்தகங்களை ஒருங்கிணைப்புக் குழு சேர்த்து அவற்றை ,
புத்தகத் தேர்வு குழு முன்பாக பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக வைத்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழு புதியதாக சேர்த்தல்கள் தொடர்புடைய கோப்புகள் குறிப்பிடபடவில்லை எனவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி இது போன்ற புத்தகங்கள் மற்ற பொது நூலகங்களிலும் வாங்கப்பட்டுள்ளது எனவும் , 1,74,01,162 ரூபாய் அகல்விளக்கு , பினிக்ஸ் பதிப்பகங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது
இந்த வெளியீட்டாளரின் புத்தகங்கள் பரிந்துரை, தேர்வு,விலை பேரம், ஒப்புதல், கொள்முதல் ஆணை பெறுதல், சரிபார்ப்பு மற்றும் பணம் செலுத்துதல் ஆகிய நிலைகள் மூலம் மட்டுமே நூலகத்தை அடைய முடியும் எனவும், ஒவ்வொரு நிலையிலும் அதிகாரிகள் வெளிப்படையான கொள்கையினை பயன்படுத்த வேண்டும். ஆனால் கொள்கைகள் இதில் பின்பற்றப்படவில்லை எனவும் ஒருங்கிணைப்பு குழு செய்த செயல்கள் குறிப்பு கோப்பில் பதிவு செய்யப்படவில்லை எனவும்,
2 பதிப்பகங்களின் பட்டியல்கள் எந்த ஆய்வும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டன என தெரவிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைகள் பொது நூலகங்கள் இயக்ககம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் பெரியார் அறிவுலகம் ஆகியவற்றின் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மற்றும் பதிப்பாளர் மோகன் மற்றும் அடையாளம் தெரியாத வெளியீட்டாளர்களுடன் சேர்ந்து சதி செய்துள்ளதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன், பொது நூலகங்கள் இயக்ககம் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னை மற்றும் பெரியார் அறிவுலகம் கோயமுத்தூர் ஆகியவற்றின் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது குற்றவியல் சதி , ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, ஆவணங்களை போலியாக உருவாக்குதல் மற்றும் அரசு ஊழியர்களால் குற்றவியல் நடத்தை மற்றும் பதிப்புரிமை சட்டத்தின் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.









