இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட 75 வயது முதியவரான கோபாலகிருஷ்ண சுப்பையா பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பது காக்ரோச் ஜனதா கட்சியின் கோரிக்கை.


இதனை வலியுறுத்தி மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று (அக்டோபர் 2) மாலை காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக 75 வயதான கோபாலகிருஷ்ண சுப்பையா பிள்ளை சிவாஜி பூங்காவுக்கு வந்திருந்தார்.
அப்போது சுப்பையா பிள்ளை தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியதை தொடர்ந்து, அவருடன் வந்த நண்பரும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் உதவிக்கு வந்தனர். மேலும் போராட்ட களத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் கோபாலகிருஷ்ண சுப்பையா பிள்ளைக்கு முதலுதவி அளித்தார். தொடர்ந்து சிவாஜி பூங்கா பகுதியில் உள்ள சுஷ்ருஷா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சுப்பையா பிள்ளைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக சுப்பையா பிள்ளை உயிரிழந்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ண சுப்பையா பிள்ளை என்றும் மகாராஷ்டிராவின் தானேவில் வசித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
