ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் சுமார் 1.30 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்த அரசு மருத்துவரை எழுப்பி, நோயாளிகளைக் கவனிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது நடவடிக்கைக்கு அரசு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எம்எல்ஏ சரவணனின் இந்த நடவடிக்கைக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தூத்துக்குடி மாவட்டம், ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நள்ளிரவில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் என்பவர், ஆய்விற்காகச் சென்று, அங்கு மருத்துவப் பணிகள் முடிந்து நோயாளிகளைப் பார்த்த பிறகு ஓய்வில் இருந்த மருத்துவரை எழுப்பி அவரிடம் தகாத வார்த்தைகளில் பேசியிருக்கின்றார். இது கடுமையான கண்டனத்திற்குரியது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மருத்துவமனையில் ஆய்வு செய்வது தவறில்லை. ஆனால், அரசு மருத்துவர்களுக்கு 12 மணி நேரம், 24 மணி நேரம் எனத் தொடர்ச்சியாகப் பணி வழங்கப்படுகிறது. தனது வேலையை முடித்து நோயாளிகளைப் பார்த்த பிறகு, இரவில் அவர்களின் அறையில் உறங்குவதும் ஓய்வு எடுப்பதும் தவறில்லை.
ஆனால், ஓய்வு எடுப்பவரை நோக்கி, அவர் நோயாளிகளைப் பார்க்காதது போலவும் குற்றம் செய்தவரைப் போலவும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி வந்ததிலிருந்து இது போன்று தொடர்ச்சியாக நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமன்றி, சாதாரண த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள் கூட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே, இத்தகைய முயற்சிகளும் போக்குகளும் கைவிடப்பட வேண்டும். உடனடியாகத் தமிழக முதலமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனச் சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம் சார்பாக நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
நீண்ட காலமாக எங்கள் சங்கத்தின் சார்பாக, அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப்போராடி வருகிறோம். ஆனால், அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து 36 மணி நேரம் வரை கூட பயிற்சி மருத்துவர்களுக்கும் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கும் பணி வழங்கப்படுகிறது. அதேபோல, சில இடங்களில் மகப்பேறு மருத்துவர்களுக்குத் தொடர்ச்சியாக 36 மணி நேரம் வரை பணி வழங்கப்படுகிறது.
இது நோயாளிகளைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், கவனக்குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பையும் உருவாக்குகிறது. அதனால் பல்வேறு சிக்கல்கள் உருவாகக்கூடும். அதேபோல, அந்த மருத்துவர்களுக்கு உடல்ரீதியான மற்றும் உளரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், அவர்களின் குடும்பங்களும் பாதிக்கும். இதையெல்லாம் புரிந்துகொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக 8 மணி நேரப் பணியை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
ஏற்கனவே எங்கள் சங்கத்தின் சார்பாக 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பயிற்சி மருத்துவர்களுக்கும் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பைப் பெற்றிருக்கிறோம். ஆனால், அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இத்தகைய சூழலில், தமிழ்நாடு அரசு ‘சீரமைத்தல்’ (Rationalisation) என்ற பெயரில் இன்றைக்கு மருத்துவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பப் புதிதாகப் பணியிடங்களை உருவாக்கி, அரசு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 8 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு போராடி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது; அது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பப் புதிய வேலைவாய்ப்புகளையும் மருத்துவப் பணியிடங்களையும் உருவாக்கி, புதிய மருத்துவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அப்பொழுதுதான் நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை வழங்க முடியும். எனவே, உடனடியாகத் தமிழ்நாடு அரசு அதைச் செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.
மேலும் எம்எல்ஏ சரவணன் உள்ளிட்டோரின் இது போன்ற நடவடிக்கைகளால் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனையாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என ரீல்ஸ் எடுத்து போடுகிறார்கள். கோயில்களுக்குள் ரீல்ஸ் எடுத்து போட கூடாது அரசு தடைவிதித்துள்ளது. ஆனால் அரசு மருத்துவமனைக்குள் செல்போன்களை கொண்டு சென்று வீடியோ எடுக்கலாமா? இதை எப்படி அனுமதிப்பது. அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுப்பதை தடைசெய்ய வேண்டும். இது மருத்துவ பணியாளர்களுக்கு மன நீதியான பாதிப்பு ஏற்படுவதோடு அவர்களின் உற்சாகமும் குன்றி விடும். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார்.
