குதிரை பேர புகாரில் அதிரும் தமிழக அரசியல்: திமுக மீது தவெக எம்.எல்.ஏ சரவணன் குற்றச்சாட்டு!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

தவெக அரசு குதிரை பேரம் நடத்துவதாக திமுக, அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.

ADVERTISEMENT

இந்தசூழலில் ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜா, இந்த ஆட்சியை கவிழ்க்க திமுக தரப்பில் இருந்து தன்னிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காவல் துறை மூலமாக தன்னிடம் பேரம் பேசுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT

அனிதா ராதாகிருஷ்ணனை போலவே எனக்கும் மிரட்டல் விடுக்கின்றனர் என்று தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மீது திமுக எம்எல்ஏ கருணாநிதி குற்றம் சாட்டினார்.

இன்று (ஜூலை 6) திமுகவினர் மீது ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

”நான் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருவதால், என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திலேயே அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. 

நான் ஒரு சாதாரண ஏழை எளிய பின்னணியில் இருந்து, அடிமட்டத்திலிருந்து வந்து எம்.எல்.ஏ ஆகியுள்ளதால், என்னைத் தனிப்பட்ட முறையில் பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள். 

பல நபர்கள் என்னை நேரடியாகத் தொடர்பு கொண்டு, “ரூ. 30 கோடி தருகிறோம், ரூ. 50 கோடி தருகிறோம், ரூ. 100 கோடி தருகிறோம், அதையும் தாண்டித் தருகிறோம், திமுகவுக்கு வந்துவிடு; இல்லையென்றால் உன்னை இப்படித்தான்செய்வோம்” என்று மிரட்டுகிறார்கள். 

இங்குள்ள திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு, “ஒன்று எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு எங்கள் கட்சிக்குள் வா, இல்லையென்றால் உன்னை டார்கெட் செய்து தேவையில்லாமல் மொத்தமாகச் சேர்ந்து அழிப்போம்” என்று மிரட்டுகின்றனர். 

நான் கடந்த 12 வருடங்களாக ஒரு சமூக ஆர்வலராகத் தொடர்ந்து மக்களுக்காகப் பணி செய்து வருகிறேன். இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் வேறு யாரும் செய்யாத வகையில், 250 பேருக்கு இல்லம் தேடிச் சென்று உணவு வழங்கி வருகிறேன். 

நான் அரசியலில் வளர்ந்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில்தான் என்னை திட்டமிட்டுத் தவறாகச் சித்தரிக்கிறார்கள். நான் எதற்கும் அஞ்சப் போவதில்லை. 

எனக்கு ரூ. 30 கோடி பேரம் பேசியதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. நெல்லையைச் சேர்ந்த ஒரு தியேட்டர் உரிமையாளரும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் இருக்கும் நான்கு பேரும் என்னிடம் பேசியுள்ளனர்.  கால் ரெக்கார்டிங் உட்பட அனைத்து ஆதாரங்களும் உள்ளன. 

அனிதா ராதாகிருஷ்ணன் “குதிரை பேரம்” என்று பேசியுள்ளார். ஆனால் என்னிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. என்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்திலேயே வந்து உட்கார்ந்து என்னை மிரட்டினார்கள். 

25 நாட்களுக்கு முன் என்னை லாரியால் மோதி கொலை செய்யவும் முயற்சி நடந்தது. நான் தப்பித்ததே பெரிய விஷயம்” என்று கூறினார். 

ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. விஜி.சரவணன் மீது, பெண் ஒருவருக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாகவும், வழக்கை சமரசம் செய்யப் பேசியதாகவும் புகார்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share