நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி திருவள்ளூரில் காங்கிரஸ் நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில், முதல்வர் விஜய்யின் பாடலுக்கு மேடையிலேயே குத்தாட்டம் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தலைமையில், நீட் (NEET) மற்றும் க்யூட் (CUET) உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தாமரைப்பாக்கம் பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேடையில் விஜய்யின் பாடல்
கூட்டத்தின் போது நடிகர் விஜய் நடித்த ‘அப்படி போடு.. போடு..’ பாடல் ஒலிக்கவிடப்பட்டது. அப்போது அங்கிருந்த மேடையில் இருவர் குத்தாட்டம் ஆடினர். பல்வேறு மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த நீட் போன்ற தேர்வுகளை ரத்து செய்ய கோரி நடந்த கண்டன கூட்டத்தின் மேடையில், இப்படி சினிமா பாட்டுக்கு நடனம் ஆடியது அங்கிருந்த பொதுமக்களையும், கட்சி நிர்வாகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தொடரும் சர்ச்சைகள்
சமீபத்தில் தான் மதுரை மேலூரில், அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் முதல்வர் விஜய்யின் ‘வாடி வாடி கைப்படாத சிடி’ மற்றும் ‘தளபதி கச்சேரி’ஆகிய பாடல்களுக்கு நடனம் ஆடிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பெண் குழந்தைகளை நடத்திய விதம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தரப்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அந்தச் சர்ச்சை அடங்குவதற்குள், இப்போது திருவள்ளூரில் மாணவர்களின் கல்விப் பிரச்சனைக்காகக் கூடிய காங்கிரஸ் கண்டன பொதுக் கூட்ட மேடையிலும் சினிமா பாட்டுக்குக் குத்தாட்டம் போடப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
