Last Bench என சுட்டிக்காட்டுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள் – அன்பில் மகேஷ் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சமயத்தில் மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். இதுகுறித்த காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்தது முதலே, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முன்னதாக, தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் அரசின் கொள்கைகள் குறித்து அவர் சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’ (Reels) ஒன்றை வெளியிட்டார். அமைச்சரின் இந்த நடவடிக்கைக்குப் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, “தமிழ்நாட்டிற்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் அண்டை மாநிலமான ஆந்திராவிற்குச் செல்வதற்கு அமைச்சர் கீர்த்தனாவின் இத்தகைய செயல்பாடுகளே காரணம்” என பல தரப்பினரும் குற்றம் சாட்டினர். இதற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் கீர்த்தனா, “தவெக ஆட்சியில் இல்லை; திமுக ஆட்சியில்தான் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்தை விட்டு வெளியேறின என தெரிவித்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம் அளித்திருந்தார். மேலும் தமிழகத்தில் இருந்து வெளியேறும் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தான் தான் வீடியோ வெளியிட்டதாகவும் தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த அலட்சியமான பதிலுக்கும் அரசியல் வட்டாரத்தில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன.

அரசுப் பள்ளியில் ஆய்வு:

இந்நிலையில், அண்மையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாகம், சமையலறை மற்றும் கழிவறைகளைப் பார்வையிட்ட அவர், அவற்றின் தரத்தை மேம்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, அங்குள்ள கணினி அறிவியல் மையத்தில் கணினிகள் பயன்படுத்தப்படாமல், தூசிகள் படிந்து மூடி வைக்கப்பட்டிருந்தது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

மாணவிகளிடம் கேள்வி – வெடித்த சர்ச்சை:

இதனைத் தொடர்ந்து, வகுப்பறைக்குச் சென்ற அமைச்சர் கீர்த்தனா அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அப்போது அமைச்சரின் ஆங்கிலக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறியுள்ளனர்.

ADVERTISEMENT

இதையடுத்து அமைச்சர் கீர்த்தனா, `முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப்பாருங்கள்’ எனக் குறிப்பிட்டு பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதள விமர்சனங்கள்

Karunyan MBA

முதலில் இந்தப் பள்ளி ஆய்வு என்ற பெயரில் குழந்தைகளின் அறிவுத் திறனைச் சோதிப்பதை நிறுத்தி தொலையுங்கள்! எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான புரிதல் திறன் இருக்காது! நீங்கள் நினைப்பதெல்லாம் அவர்கள் சொல்ல வேண்டும் என்பதும் இல்லை!

அமைச்சர்கள் குழந்தைகளை கல்வி பயில ஊக்குவிக்க வேண்டுமே தவிர அவர்களைக் குற்ற உணர்ச்சியில் தள்ளக் கூடாது! இது வெறும் பெருமை பேசும் வீடியோவாகவே இருக்கிறது! வன்மையான கண்டனத்திற்கு உரியது!

S.M.Mathivadhani

நமது ஆங்கில புலமையை, மேட்டிமைத்தன்மையை குழந்தைகளிடம் காட்டித்தான், நம் பொறுப்பை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நீங்கள் எவ்வளவு அறிவில் சிறந்தவர் என்பதை குழந்தைகளிடம் பழகும் பாங்கில்தான் வெளிப்படுத்த முடியும்.

பள்ளிக்கு சென்றதும் கைகட்டி நிற்கும் குழந்தைகளை பார்த்தால், முதலில் சொல்ல வேண்டியது, யார் முன்னாலும் கை கட்டி நிற்காதீர்கள் என்பதை தான்.

கேட்பதற்கு கேள்விகள் இல்லையென்றால், எடுத்த எடுப்பில் குழந்தைகளின் பெற்றோர் குறித்து கேட்காதீர்கள். அப்பா என்ன செய்கிறார் என்ற கேள்விக்கு , அப்பா இல்லை என்பது பதிலாக இருந்தால், அதனை சொல்ல அந்த குழந்தை எவ்வளவு தயங்கும் என்பதை புரிந்துக் கொண்டு பள்ளிகளுக்கு செல்லுங்கள்.

உங்களின் நிர்வாகத் திறனை வெளிகாட்ட குழந்தைகளை பலி கொடுக்காதீர்கள்.

அமைச்சரின் செயலை கண்டிப்பவர்கள் தயவுகூர்ந்து அக்குழந்தையின் படத்தை பகிராதீர்கள்!

இதுகுறித்து முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பதிவில், “தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!

மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.

தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share