மு.க.ஸ்டாலின் பெயர் இருந்த நெம்மேலி கல்வெட்டு அகற்றப்பட்டதா? – நடந்தது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

nemmeli

சென்னையை அடுத்த நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று பார்வையிடவுள்ள நிலையில், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருந்த கல்வெட்டு அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கல்வெட்டு அகற்றப்பட்டதற்குத் திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக கடந்த 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து நிறைவேற்றினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு கடந்த 24.02.2024 அன்று நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகைத் (Unit) திறந்து வைத்தார். தற்போது இதன் அடுத்தகட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதலமைச்சர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, முந்தைய திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு.

ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்கத் துப்பில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் திறந்து வைத்த திட்டத்தின் கல்வெட்டை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கக்கேடானது இல்லையா திறமையற்ற விஜய் அரசே?” எனத் திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிகாரிகள் விளக்கம்:

இதனைத் தொடர்ந்து, நெம்மேலி கல்வெட்டு விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், “நெடுஞ்சாலை ஓரமாகக் கல்வெட்டு வைக்கப்பட்டிருந்ததால், வாகனங்களின் அதிர்வு காரணமாகக் கல்வெட்டின் அடிப்பகுதி சேதமடைந்திருந்தது. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அந்தக் கல்வெட்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டது. கடந்த 10 நாட்களாக அங்குப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்வெட்டில் உள்ள எழுத்துகளுக்கு எவ்விதப் பாதிப்புமின்றி, வருகிற 20ஆம் தேதிக்குள் கல்வெட்டு அதே இடத்தில் மீண்டும் பொருத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share