விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மத்தியில் பேசிய கமல் ஹாசன், “மாணவர்களாகிய உங்களுக்கு அரசியல் புரியவில்லை என்றால், எதிர்காலத் தலைமுறைக்கு அரசியல் புரியாமல் போய்விடும் என்றுதான் பொருள். நீங்கள்தான் இந்த நாட்டின் வருங்காலம். நீங்கள் எல்லாரும் தலைவராகலாம். எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர்கள் எனது தந்தை, அறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் போன்றவர்கள். அவர்கள் காட்டிய அரசியலைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன், அரசியல் எனக்கு ஒரு தொழில் அல்ல.
இங்கு முழுநேர அரசியல்வாதி என்று எவருமே இல்லை. அப்படி ‘முழுநேர அரசியல்வாதி’ என்று நாடகம் ஆடுகிறவன்தான் உண்மையான தொழில் அரசியல்வாதி. மக்களுக்காக மேடைகளில் நாடகம் நடத்த நான் விரும்பவில்லை. உங்கள் கல்லூரியில் ஒரு தவறு நடந்தால் அதைத் தட்டிக்கேட்க வேண்டியது உங்கள் கடமை என்று நீங்கள் எப்போது நினைக்கிறீர்களோ, அதேபோல இந்த நாட்டையும் நினைத்தால் நாடு இப்படி இருக்காது. தவறைத் தட்டிக்கேட்பதற்குப் பெரியவர்கள் மட்டும்தான் வர வேண்டும் என்பதில்லை; இப்போது நீங்கள்தான் பெரியவர்கள்.
லஞ்சம் கொடுக்கும் கையும் குற்றவாளிதான்.
நாட்டில் ஊழல் இருக்கிறது என்று வெறும் வாயால் சொன்னால் மட்டும் போதாது. லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால், அதில் லஞ்சம் கொடுக்கும் உங்கள் கையும் உள்ளது. கொடுக்கும் கை கொடுத்தால்தான், வாங்கும் கை நீளும். தினமும் பசித்தால் சாப்பிட வேண்டும் என்பது போல, தினமும் உங்களுக்குள் அரசியல் சிந்தனை இருக்க வேண்டும்.நான் சினிமாவுக்கு வரும்போது நட்சத்திரமாகவோ, இயக்குநராகவோ வரவில்லை; என் தகுதி காரணமாகத்தான் அப்படி ஆனேன். இப்போது நான் முதலமைச்சராகவும் வரவில்லை. அதற்கான தகுதி வரும்போது, அதை நீங்கள் கொடுப்பீர்கள்; அப்போது பார்த்துக்கொள்ளலாம்.
ஒரு கட்சியைத் தொடங்கும்போது குறைந்தபட்சம் 70 வருடமாவது அது நீடிக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். நான் மக்கள் நீதி மய்யத்தை 100 வருடங்களுக்கான திட்டத்தோடு வைத்துள்ளேன், நீங்கள் அதை 200 வருடங்களாக மாற்ற வேண்டும்.நான் காரில் வரும்போது சாலையில் சிதறிக்கிடக்கும் ஏழ்மையான குடும்பங்களைப் பார்த்தேன். ஆனால், அரசியல்வாதிகள் அவர்களைச் சிதறிக்கிடக்கும் ‘வாக்குகளாக’ மட்டும்தான் பார்க்கின்றனர். இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுமே இதற்கு ஒருவகையில் காரணமாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதில் நாமும் ஒருவராக இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தற்போதைய அரசியல் சாக்கடையில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி நின்று நல்ல அரசியல் செய்ய முடியுமோ, அவ்வளவு தூரம் நின்று கொண்டிருக்கிறேன்.
எது நல்ல அரசியல்?
நீங்கள் முதலில் அரசியலைக் கற்றுக் கொள்ள வேண்டும், அதற்குப் பிறகுதான் உங்கள் கைகளைக் கறைபடுத்திக் (வாக்களிக்க) கொள்ள வேண்டும்; அப்போதுதான் இந்த நாடு கறைபடியாமல் இருக்கும். எது நல்ல அரசியல் என்பதைத் தேடிப் போங்கள், உங்களுக்கே அதற்கான அறிவு இருக்கிறது. ஒருவன் கண்ணைப் பார்த்துப் பேசினாலே அவன் பொய் சொல்கிறானா இல்லையா என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும். இன்று நிறைய புளுகுமூட்டைகள் வந்து ‘உனக்காகத்தான் எல்லாம் செய்கிறேன்’ என்று சொல்வார்கள். ‘சரிப்பா, எனக்காகத்தான் செய்கிறாய்… ஆனால் உன் கையில் இருக்கும் தங்க மோதிரமும், டாலரும் எனக்காகவா மின்னுகிறது?’ என்று நீங்கள் மனதுக்குள்ளாவது கேட்க வேண்டாமா?
நீங்கள் எல்லாரும் ஒரு கூட்டத்தின் பின்னால் மந்தையாகச் சென்றால், உங்களுக்கு முன்னால் செல்லும் இன்னொரு ஆட்டின் வால்தான் தெரியுமே தவிர, உங்களுக்கான எதிர்காலம் தெரியாது. உங்கள் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும் என்றால், உங்களுக்கான தனிப் பாதையில் நீங்கள் செல்ல வேண்டும். மந்தையாக மாறாதீர்கள்; நீங்களே மேய்ப்பர்கள்.
ரீல்ஸ் வாழ்க்கை அல்ல.
இன்று ரீல்ஸ் பார்ப்பதால் என்ன கெடுதல் என்று சிலர் கேட்கிறார்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் படிப்படியாக (Step by step) அனுபவிக்க வேண்டும். நான் முதன்முதலில் 10 வயதில் கன்னியாகுமரியில் சூரிய உதயத்தைப் பார்த்தபோது, என் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருந்தது. கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளை முதன்முதலில் கேட்டபோது புல்லரித்தது. ஒரு பெண்ணிடம் முதன்முதலில் காதலைச் சொன்ன உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது. இந்த உணர்வுகளையெல்லாம் நீங்கள் தினமும் கைபேசியில் சில நொடிகள் ரீல்ஸாகப் பார்த்துக்கொண்டே இருந்தால், அதன் உண்மையான மதிப்பே குறைந்துவிடும்.
ஒரு திரைப்படத்தில் முதலில் டைட்டில் போடுவார்கள், அப்புறம் கதை நகரும், நல்லவன் – கெட்டவன் மோதிக்கொள்வார்கள், இறுதியில் நல்லவன் ஜெயிப்பான். இதுதான் ஒரு முழுமையான படம். ஆனால், எடுத்தவுடனேயே கிளைமாக்ஸ் மட்டும் பார்த்தால் கதை புரியுமா? ஏன் ஜெயித்தான் என்றே தெரியாது. வாழ்க்கையும் அப்படித்தான். ஒரு பெண்ணைப் பார்த்த உடனே, அவள் கையில் குழந்தை இருந்தால் எப்படி இருக்கும்? அந்த வாழ்க்கை சுவாரசியமாகவே இருக்காது. வாழ்க்கையில் ஒரு வழிமுறை (Process) இருக்கிறது; அதை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். ரீல்ஸ் என்பது வாழ்க்கைக்கு ஒரு ஊக்கியாக இருக்கலாமே தவிர, அதுவே வாழ்க்கையாக மாறிவிட்டால் வாழ்க்கை சலித்துப் போய்விடும். பிறகு நிஜமாக ஒரு அழகான விஷயத்தைப் பார்க்கும்போது, ‘இதைத்தான் ஏற்கனவே போனில் பார்த்துவிட்டோமே’ என்று கடந்து போய்விடுவீர்கள்.
கைபேசி பயன்பாட்டிற்கு எல்லை தேவை
ஒரு மரத்தைப் பார்ப்பதை விட, அதை நேரில் தொட்டு உணர வேண்டிய தருணம் இது. போனில் காதலைப் பார்ப்பதை விட, நிஜ வாழ்க்கையில் உங்கள் காதலைச் சொல்ல வேண்டும். சண்டை என்றால் நீங்களே களத்தில் இறங்கிச் சண்டை போட வேண்டும், அப்போதுதான் வெற்றி தோல்வி புரியும். இன்னொருவன் சண்டை போடுவதைப் பார்த்தால் ‘ஜாலியாக இருக்கிறதே’ என்றுதான் தோன்றும். இதுதான் ரீல்ஸ் செய்யும் கெடுதல்.
மறுபுறம், இதில் பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன. என்னுடைய கல்வி இப்போதும் இந்தத் தொலைபேசி மூலமாகத்தான் தொடர்கிறது, அதற்கு நான் நன்றி சொல்வேன். ஆனால், பசி மிகுந்த நானே, (எதையும் கற்றுக்கொள்ளும்) ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் கைபேசியைப் பயன்படுத்துவது கிடையாது. ” இவ்வாறு அவர் பேசினார்.
