கரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறும் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இந்தநிலையில் நேற்று பனையூரில் உள்ள கட்சி அலவலகத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் சந்தித்து பேசினார்.
இந்தசூழலில் இன்று (ஜூலை 5) கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் அலுவலகத்துக்குச் சென்றார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், ”அதிமுகவில் மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். 2016 தேர்தலில் கரூரில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார். அதில் வெற்றி பெற்ற என்னை அமைச்சராக்கினார்.
2021 சட்டப்பேரவை தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன். 2026 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும்.
ஆட்சி அமைப்பதில் யாருக்கும் தனி மெஜாரிட்டி இல்லாத நேரத்தில் திமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கருத்தை கூறியதால் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு தனிக் குழுவாக இருந்தோம். கட்சியிலிருந்து எங்கேயும் போகவில்லை.
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று சொன்னோம். அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் மாவட்ட செயலாளர் பதவியை பறித்தார்கள்.
அதற்குப் பிறகு மீண்டும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இன்றைய தமிழக முதலமைச்சர் விஜயின் தலைமையை ஏற்று, தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து கொண்டோம்.
நேற்று முதலமைச்சர் விஜய் பனையூர் அலுவலகத்தில் எங்களை அழைத்து மரியாதை கொடுத்து பேசினார்.
வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் கரூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய மகத்தான வெற்றியைப் பெறும். அதற்காக நாங்கள் பாடுபடுவோம்.
இந்த நல்லாட்சி தொடர வேண்டும். முதல்வர் விஜய் ஊழல் இல்லாத ஆட்சியை, வெளிப்படை தன்மையான ஒரு ஆட்சியை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
அப்போது முதல்வர் விஜய் கரூர் வருவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு எம் ஆர் விஜயபாஸ்கர், 10ஆம் தேதி கரூர் வருகிறார் என்று நேற்று தெரிவித்தார்கள். அதற்கான ஏற்பாடுகளை மும்மரமாக செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.
”அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தருகிறார் என்று சொல்கிறார்கள் வேறு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்” என்று முதல்வர் வருகை குறித்து கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன் கூறினார்.
