ஆப்சென்ட் ஆன தவெக எம்எல்ஏக்கள்? மேடை ஏறியவுடன் புறப்பட்ட அமைச்சர் நிர்மல் குமார் – பின்னணி என்ன..?

Published On:

| By Pandeeswari Gurusamy

Nirmal kumar

மதுரை மருத்துவக் கல்லூரியில் இன்று காலை தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் வெள்ளி விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களான கோபிசன், விஜய் அன்பன் கல்லாணை ஆகியோர் பங்கேற்பதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இன்று காலை 10 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்கூட்டியே, அதாவது காலை 9:45 மணி அளவிலேயே விழா நடைபெறும் அரங்கிற்கு வருகை தந்தார். அமைச்சர் வருகை தந்தபோது, அரங்கில் தவெக கட்சியின் பாடல்கள் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்தப் பாடல்களின் பின்னணியில் அமைச்சர் நிர்மல்குமார் விழா மேடைக்கு ஏறினார்.

ஆனால், மேடைக்குச் சென்ற அமைச்சருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நிகழ்ச்சிக்குத் தவெக எம்.எல்.ஏ-க்களோ அல்லது பெரும்பாலான சங்க நிர்வாகிகளோ அதுவரை வரவில்லை என்ற கூறப்படுகிறது. விழா மேடையில் தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் வராததைக் கண்டு அதிருப்தியடைந்த அமைச்சர் நிர்மல்குமார், அங்கு மேடையில் அமராமலேயே உடனடியான கீழே இறங்கினார்.

ADVERTISEMENT

விளக்கேற்றக்கூடக் காத்திருக்காமல், உடனடியாக மேடையில் இருந்து கீழே இறங்கி, அமைச்சர் காரிலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். விழா மேடைக்கு வந்த அமைச்சர், அங்கு அமராமலும் குத்துவிளக்கு கூட ஏற்றாமலும் உடனடியாகப் புறப்பட்டுச் சென்ற சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share