தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றவுடன், இது ஒரு நல்லாட்சியாக இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த 50 நாட்களில் இந்த அரசு மக்களுக்குப் பல்வேறு அதிர்ச்சிகளையும், ஆச்சரியங்களையும் (Surprise) மட்டுமே தந்து கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
உளவுத்துறை அறிக்கையில் 3 அதிகார மையங்கள்:
சட்டப்படியும், மரபின்படியும் உளவுத்துறை அறிக்கை என்பது தினந்தோறும் முதலமைச்சரின் பார்வைக்கு மட்டுமே முதலில் செல்ல வேண்டும். ஆனால், தற்போதைய அரசில் முதலமைச்சர் விஜய்யின் பார்வைக்குச் செல்வதற்கு முன்பாகவே, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட மூன்று முக்கிய அதிகார மையங்களுக்கு உளவுத்துறை அறிக்கை செல்வதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் பார்ப்பதற்கு முன்பே இந்த அதிகார மையங்கள் உளவுத்துறை அதிகாரிகளிடம் அறிக்கை குறித்து விவரம் கேட்பதால், அரசின் ரகசியங்கள் வெளியே கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், இது அரசின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால், முதலமைச்சர் விஜய் பல முக்கிய விவகாரங்களில் பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் மௌனம் காப்பது மக்களுக்குப் பெரும் சர்ப்ரைஸாகத் தொடர்கிறது.
அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் சர்ச்சைகள்:
அமைச்சர்கள் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும், விரைவில் தங்களது தகுதிகளை வளர்த்துக் கொள்வார்கள் என்று முதல்வர் விஜய்யும், பொதுமக்களும் நம்பினர். ஆனால், அமைச்சர்கள் சிலர் தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் அடாவடியில் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடத்திலேயே வெளிப்படையாகப் போதைப் பவுடரைப் பயன்படுத்தியதாக அமைச்சர் ‘கில்லி’ சரத் மீது புகார் எழுந்துள்ளது. அவர் மீதான நடவடிக்கை சர்ப்ரைஸாகத் தொடர்கிறது.
விருதுநகரைச் சேர்ந்த பெண் அமைச்சர்களான கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோருக்கு இடையே ‘யார் பெரியவர்?’ என்ற ஈகோ யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அவர்களின் நடவடிக்கையிலும் சர்ப்ரைஸ் தொடர்கிறது.
மணல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக அமைச்சர் பிரவீன் மீதும், குடும்ப உறவுகளின் தலையீடுகளை அனுமதிப்பதாக அமைச்சர்கள் கமலி ரஞ்சித்குமார், ராஜு, விஜய் பாலாஜி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பந்தா காட்டும் நபராக அமைச்சர் ஸ்ரீநாத் வலம் வருவது முதற்கொண்டு, மக்கள் சேவையில் ஆர்வம் இல்லாத அமைச்சர் குமார் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அதோடு மட்டுமில்லாமல், அவ்வப்போது கருத்துகளைச் சொல்லி சர்ச்சைகளில் சிக்கி வரும் அமைச்சர்களின் நடவடிக்கையிலும் சர்ப்ரைஸ் தொடர்கிறது.
அதிமுகவை அழிக்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல், போதைப்பொருள் நடமாட்டம், தொடர் மின்வெட்டு போன்ற மக்கள் சார்ந்த பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இவற்றைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதல்வர் விஜய், அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாதது போலத் தனது உடல்மொழி மூலம் காட்டி வருகிறார்.
மாறாக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தொடங்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு, தற்போது எடப்பாடி பழனிசாமியால் கட்டிக்காக்கப்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சமயம் பார்த்து அழிப்பதற்காக, அக்கட்சியினருக்கு அதிரடி ஆஃபர்களை அள்ளித் தருவதில் மட்டுமே விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறாரோ என்ற சர்ப்ரைஸ் தொடர்கிறது.
இடைத்தேர்தலில் “சர்ப்ரைஸ் ஜட்ஜ்மென்ட்”
மொத்தத்தில், “குட் கவர்னன்ஸ்” (Good Governance) எனப்படும் நல்லாட்சி தருவேன் என்று கூறிவிட்டு, இப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு “சர்ப்ரைஸ் கவர்னன்ஸ்” (Surprise Governance) எனப்படும் ஆச்சரியமூட்டும் ஆட்சியைத் தான் விஜய் தந்து கொண்டிருக்கிறார். எனவே, விரைவில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் இந்த அரசுக்கு மக்கள் “சர்ப்ரைஸ் ஜட்ஜ்மென்ட்” (Surprise Judgement) எனப்படும் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
