ஜூலை 20ல் கூடும் மழைக்கால கூட்டத்தொடர் : முக்கிய மசோதாக்கள் தாக்கல்?

Published On:

| By Kavi

Parliament Monsoon Session 2026

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரன் ரிஜுஜு அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,  ”அரசின் பரிந்துரையின் பேரில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக்  கூட்டத்தொடரை கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த அர்த்தமுள்ள விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் முடிவுகளுக்காக இந்தக் கூட்டத்தொடர் 2026 ஜூலை 20 அன்று தொடங்கி, 2026 ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். 

இந்த கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (33%) இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. 

ADVERTISEMENT

கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரைப் போலவே, இந்த முறையும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவானது தொகுதி மறுவரையறை  நடவடிக்கையோடு இணைக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் 2029 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை இடங்களின் எண்ணிக்கை 543-லிருந்து 816 ஆக உயர்த்தப்படலாம். 

முந்தைய கூட்டத்தொடரில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் நிராகரிக்கச் செய்தனர். ஏனெனில், அம்மசோதா நிறைவேற்றப்படுவதற்குத் தேவைப்பட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை (அதாவது 363 வாக்குகள்) எட்ட முடியவில்லை. 

ADVERTISEMENT

ஆனால் தற்போது திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி , உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா போன்ற மாநில கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் என்.டி.ஏவுடன் இணைந்துள்ளனர்.  இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசியல் சமன்பாடுகள் மாறியுள்ளன. 

அதேசமயம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. அதேபோல், மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. 

இப்படி பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற கூடுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தவிர,  ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் ஊழல் வழக்குகள் உள்ளிட்ட சில கடுமையான குற்றங்கள் தொடர்பாக ஒரு பிரதமர் அல்லது முதலமைச்சர் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல்  சிறையில் அடைக்கப்பட்டால், அவரைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதாவையும் மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share