”அனிதா ராதாகிருஷ்ணனிடம் 6 மணி நேரம் விசாரிக்க வேண்டிய ’மர்மம்’ என்ன?” : திமுக பரந்தாமன் கேள்வி!

Published On:

| By Kavi

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டு நேற்றிரவு, திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிபதி சிதம்பரம் சொந்த ஜாமீனில் விடுவித்தார். 

இதற்கிடையே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தன்னை ராஜினாமா செய்ய சொல்லி காவல் துறை மூலமாக நிர்பந்திக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இதற்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்,  அனிதா ராதாகிருஷ்ணனை ரவுடி என்று விமர்சித்திருந்தார். 

ADVERTISEMENT

இதுதொடர்பாக  இன்று (ஜூலை 4)சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளரான வழக்கறிஞர் இ.பரந்தாமன்,  ”திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குதிரைபேர குற்றச்சாட்டை சுமத்தி மக்கள் மத்தியிலே திமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற தவெக அரசின் முயற்சி முறியடிக்கபட்டுள்ளது. நேற்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கின் மூலமாக நீதிமன்றத்தால் விஜய் அரசினுடைய மூக்கு அறுக்கப்பட்டிருக்கிறது.

இது பொய்யான வழக்கு இந்த வழக்கில் இவரை கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டிய முகாந்தரம் இல்லை என்ற அடிப்படையில் நேற்றைக்கு அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் மூலம், முதல் முறையாக இந்த குதிரைபேர சர்க்கார் மூக்கறுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆட்சிக்கு வந்து 55 நாட்களைக் கடந்தும் நிர்வாகத்தைப் பற்றி கவலைப்படாத தவெக அரசு தினம்தோறும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எந்த குற்றங்களை சுமத்தலாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையை அரங்கேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில்தான் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஒரு அவதூறு வழக்கு போட்டுள்ளனர். அவதூறு வழக்கு போடுவதில் கைது செய்ய வேண்டிய அவசியம் கிடையவே கிடையாது. முன்ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக அவசர அவசரமாக ஓடி வந்து அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்வததன் பின்னணி என்ன.? எதற்கு ஒரு அவதூறு வழக்கில் கைது செய்தவரை 6 மணி நேரம் 7 மணி நேரம் காவல்துறை விசாரணை செய்தது.? அது என்ன மர்மம்.?

ADVERTISEMENT

அந்த விசாரணையின் போது அனிதா ராதாகிருஷ்ணனை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள் தவெகவில் இணைய பணம் தருகிறோம்” என கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது மிகப்பெரிய குற்றச்சாட்டு. 6 மணி நேர விசாரணை இதற்காகதான் நடந்துள்ளதா?

பாஜக எப்படி ED யை விட்டு மிரட்டி கட்சியில் சேர்க்கிறார்களோ அதேபோலதான் காவல்துறையை வைத்து மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை தவெக அரசு செய்கிறது.

இந்த உண்மை வெளிப்பட்ட உடன் பதறிப்போய் நேற்று இரவு 9 மணிக்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஒரு பேட்டி கொடுக்கிறார்.

பேட்டியில் முறையான விளக்கம் கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் அவர் என்ன சொல்கிறார் தனி நபர் அவதூறு செய்கிறார். உடல் கேலி செய்கிறார். எங்களின் எம். எல். ஏ வை ரவுடி என கூறுகிறார். இப்படி எல்லாம் சொல்லும் நிர்மல் குமார் மீது உக்கரபாண்டியன் என்பவர் உசிலம்பட்டியில் நில மோசடி செய்தார், என 420 புகார் கொடுத்துள்ளார். இந்த நிர்மல் குமார் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்து ரவுடி என்றெல்லாம் சொல்ல எந்த அருகதையும் இல்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு மக்களை கொன்று குவித்த கட்சி திராவிட முன்னேற்ற கழகம், கொன்று குவித்தவர் என்று எங்கள் தலைவருடைய பெயரை சொல்கிறார். இது எந்த விதத்தில நியாயம்? இப்படி அவதூறா பேசக்கூடிய இந்த ஆதவ் அர்ஜுனா ஏன் கைது செய்யாமல் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது காவல்துறை.

யாரை ரவுடின்னு சொல்றாரு நிர்மல் குமார் நிதித்துறை அமைச்சராக இருக்கிறாரே மரிய வில்சன் அவர் மீது வீடு புகுந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கு உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் அவரை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல ஒரு மினிஸ்டர் மேல் பவுடர் குற்றச்சாட்டு இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மேல், பாதிக்கபட்ட பெண் அளித்த குற்றச்சாட்டு இருக்கிறது.

அமைச்சர் நிர்மல் குமார் மீது 420 புகார் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தலைமை அமைச்சராக இருக்கக்கூடிய விஜய் மீது குதிரைபேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறோம். இப்படி கிரிமினல் பின்னணி கொண்ட கேபினெட்டாக, குற்றவாளிகள் நிரம்பிய கேபினெட்டாக தவெக அமைச்சரவை இருக்கிறது. இப்படிபட்ட தவெக அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழகத்தை பார்த்து கேள்வி கேட்பதற்கு துளியும் அருகதை இல்லை.

நேற்றைக்கு அதிமுக-வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் ‘விஜயபாஸ்கர் அமைச்சர் பதிவி வாங்கிதருவதாக பேரம் பேசினார்’ என கூறி இருக்கிறார். யார் இந்த குதிரை பேரத்தை செய்து கொண்டுள்ளார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

திராவிட முன்னேற்ற கழகம் 59 இடங்களில் வென்று இருக்கிறது . ஒரு எம்எல்ஏ, இரண்டு எம்எல்ஏ-வை விலைக்கு வாங்கி எப்படி ஆட்சி அமைக்க முடியும் இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தவெக அமைச்சர்கள் எல்லாம் பேசுவது வடிகட்டிய பொய். திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்த வேண்டிய நோக்கத்திற்காக மட்டுமே கூறப்படும் குற்றச்சாட்டு.

ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்து தினம் தினம் அரசு நிர்வாகத்தை கவனிக்க துப்பில்லை. நிர்வாகம் தேங்கி கிடக்கிறது. ஆட்சிக்கு வந்து 56 நாளாகிறது,துவரைக்கும் மக்களுக்காக என்ன வேலை செய்துள்ளது இந்த அரசு.?

குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்க துப்பில்லை. திமுக மீது அவதூறுகளை பரப்பி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து , மேயர் பிரியா உள்ளிட்ட மகளிர் நிர்வாகிகளை கொச்சையாக பேசிவரும் தவெக ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்களா?

மாற்றம் கொடுப்போம் என்று சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்து அதிமுக கட்சியில இருப்பவரை தவெக கட்சியில சேர்க்கும் கட்சி மாற்றம் தான் நடந்துள்ளது. இன்னும் பலரை ராஜினாமா செய்ய வைத்து ஆளும் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தான் இந்த அரசு உள்ளது. இவற்றை எல்லாம் விட்டுவிட்டு, வரக்கூடிய திங்கட்கிழமையில் இருந்தாவது மக்கள் பணியில் ஈடுபடுங்கள்.

இந்தியாவிற்கு முன் மாதிரியாக இருந்த தமிழ்நாட்டு அரசியலின் மாண்பை சிதைத்து, ஒரு மோசமான அரசியலை முன்னெடுத்து வருகிறது இந்த தவெக அரசு. ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் தவெகதான்” என்று கூறினார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share