சென்னையில் கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூலை 4) சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது தவெக அரசு மீதான புகார்கள் அடங்கிய மனுவை அவர்கள் ஆளுநரிடம் அளித்தனர்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று (04.07.2026), பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் இணைந்து, தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில், தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன், ஒரு பெண் குழந்தை இடம் முறையின்றி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. அது குறித்து முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களைத் தவிர இரண்டு தனிநபர்கள் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்பட்டு, அது சட்டவிரோதமான செயல் என்றும், ரகசியக் காப்பு உறுதிமொழியினை மீறும் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வைக் கடுமையாகக் கண்டித்து, உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாதவாறு உறுதி செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
