விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி? செந்தில்பாலாஜி மற்றும் சகோதரருக்கு சம்மன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Senthil balaji

விஜய் ஆட்சியை கவிழ்க்க தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரில், கோவை தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்குச் சென்னை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.

ADVERTISEMENT

இது தொடர்பாக, தவெக-வின் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இளையராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், தவெக அரசைக் கவிழ்ப்பதற்காகத் தன்னிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

8 பேர் அதிரடி கைது

இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ‘ஐ.பி.டி.எஸ்’ என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரைச் சேர்ந்த நரேஷ், கரூரைச் சேர்ந்த ரமேஷ், கார்த்தி, சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த செல்வன், மணப்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சீனிவாசன் மற்றும் அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய 8 பேரைக் கைது செய்தனர்.

ADVERTISEMENT

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜிக்கு சம்மன்

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் விசாரணைக்காக வரும் ஜூலை 6ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்று கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்குச் சென்ற சென்னை தனிப்படை போலீசார், அங்கு இந்தச் சம்மனை வழங்கினர். செந்தில் பாலாஜியின் தந்தை இந்தச் சம்மனைப் பெற்றுக் கொண்டார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share