அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வற்புறுத்தியது யார்? – செங்கோட்டையன்

Published On:

| By Pandeeswari Gurusamy

anitha radhakrishnan

அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்யுங்கள் என்று யாரும் வற்புறுத்தவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த ஜூன் 20ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டபோது, தமிழக முதல்வர் விஜயை அவதூறாகப் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆத்தூர் நகரச் செயலாளர் செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

ADVERTISEMENT

இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்திருந்தார். நேற்று சென்னை உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி ஆத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “காவல்துறையினர் என்னை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டுகிறார்கள்; த.வெ.க-வில் இணைய வற்புறுத்துகிறார்கள்” என்று தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இரவு 11 மணிக்கு மேல் திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன்னிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆஜர் செய்யப்பட்டார். இதனை விசாரித்த நீதிபதி அனிதா ராதாகிருஷ்ணன் உடல் நிலையை கருத்தில் கொண்டு 10 நாள் ஆத்தூர் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில் கையொப்பமிட உத்தரவிட்டு ஜாமீனில் விடுவிப்பதாக உத்தரவிட்டார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி:

இந்நிலையில், நேற்று இரவு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம், அனிதா ராதாகிருஷ்ணன் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டுவதாகக் குற்றம் சாட்டியது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

அதற்குப் பதிலளித்த அவர், “காவல்துறை தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. தனிப்பட்ட முறையில் முதல்வருக்குச் சிறந்த ஆட்சியை நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது; அதைத்தான் அவர் செய்து வருகிறார். அதே நேரத்தில், அனிதா ராதாகிருஷ்ணனைப் பொறுத்தவரை ராஜினாமா செய்யுமாறு யாரும் வற்புறுத்தவில்லை. ஏதோ ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதற்காக அவர் அப்படிக் கூறியிருக்கிறாரே தவிர, யார் வற்புறுத்தினார்கள் என்பதை அவர் தெளிவாக எடுத்துச் சொன்னால் அதற்குப் பதில் சொல்ல முடியும்” என்றார்.

தொடர்ந்து, “த.வெ.க-வைக் கணிக்க மறந்துவிட்டோம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமி மொத்தமாகவே எதையும் கணிக்க மறந்துவிட்டார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடத்தியது கட்சி, அம்மா (ஜெயலலிதா) நடத்தியது இயக்கம். ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமி நடத்திக் கொண்டிருப்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. மற்றவர்களிடம் கருத்து கேட்டுச் செயல்படுவதன் காரணமாகத்தான், அக்கட்சியில் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் ராஜினாமா செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share