எல் நினோ தாக்கம் : நீர்நிலைகள் கண்காணிப்பு, மின்சார விநியோகம் – அமைச்சகங்களுக்கு அமித்ஷா உத்தரவு!

Published On:

| By Kavi

El Nino Impact

எல் நினோ தாக்கம் காரணமாக நீர்நிலைகளை கண்காணிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

எல் நினோ’ காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இயல்புக்கும் குறைவான மழைப்பொழிவு மற்றும் அதன் தாக்கம் குறித்த நிலவரத்தை, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்  அமித் ஷா, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்  சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நேற்று, (ஜூலை 3) ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

மத்திய உள்துறை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைகளின் செயலாளர்கள் உட்பட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது, எல் நினோவால் நாட்டின் சில பகுதிகளில் இயல்புக்கும் குறைவான மழைப்பொழிவு மற்றும் வறட்சி ஏற்படக்கூடிய சூழல் நிலவுவதை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். விழிப்புடன் இருக்குமாறும், எந்த வகையான பயிர்களைப் பயிரிடுவது என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் வேளாண் அமைச்சகம் மற்றும் அது சார்ந்த அனைத்து அமைச்சகங்களுக்கும் அவர் உத்தரவிட்டார். 

ADVERTISEMENT

நாடு முழுவதும் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் கண்காணிக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். 

மேலும், கால்நடைத் தீவனப் பயிர்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் போன்ற குறைந்த நீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்கள் மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும்  வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

தடையற்ற மற்றும் போதுமான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மின்துறை அமைச்சக செயலாளருக்கு உத்தரவிட்டார்.

அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்கள் நாட்டில் போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சீராக இருப்பதாகவும் கூட்டத்தின்போது உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share