அனிதா ராதாகிருஷ்ணன் கைது… இரவில் நீதிபதி அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று இரவு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஜூன் 20ஆம் தேதி திருச்செந்தூரில் நடந்த கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய்யை பற்றி அவதூறாக பேசியதாக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் நகர தமிழக வெற்றிக் கழக செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

ஆனால் ஒரு முன்னாள் அமைச்சர் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் இப்படி பேசலாமா என்று கூறி அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த சமயத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT

நேற்று பிற்பகல் முதல் சுமார் 5 மணி நேரம் அனிதா ராதாகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், காவல்துறை மூலம் என்னை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டுகிறார்கள். தமிழக வெற்றி கழகத்தில் இணைய சொல்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக மதுரையில் விளக்கம் அளித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், அனிதா ராதாகிருஷ்ணன் தவமிருந்து கேட்டாலும் எங்கள் முதல்வர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று பதிலளித்தார்.

தொடர்ந்து நேற்று இரவு திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அரசு சார்பில், இந்த வழக்கு தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. மருத்துவ காரணங்களை கூறி ஜூலை 10ஆம் தேதி ஆஜராவதாக கூறியிருந்தார். ஆனால் மருத்துவ காரணங்களுக்கான உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. அவரால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருந்தது என்பதால் கைது செய்யப்பட்டார் என்று வாதிடப்பட்டது.

அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில், இந்த வழக்கில் சிறையில் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு உண்மையிலேயே மருத்துவ பிரச்சினைகள் உள்ளன. அரசியல் காரணங்களால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் தொடர்ந்து நீதிபதி சிதம்பரம், அனிதா ராதாகிருஷ்ணனை சொந்த ஜாமினில் விடுவித்தார்.

பிணைத்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஆத்தூர் காவல் நிலையத்தில் பத்து நாட்களுக்கு தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை கேட்டதும் நீதிமன்றத்தில் கூடியிருந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள், கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதன்பின் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “தர்மம் வென்றுள்ளது. எப்போதும் எந்த திமுக தொண்டனும் எதற்கும் அஞ்ச மாட்டான். ஆறு மாத காலத்திற்குள் இந்த ஆட்சி வீழ்ந்துவிடும்” என்று கூறினார்.

ஒருவேளை நேற்று இரவு அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமின் கிடைக்கவில்லை என்றால், இன்றும் நாளையும் சனி ஞாயிறு நீதிமன்றம் விடுமுறை காரணமாக, உள்ளே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share