’என்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தினார்கள்’ என்று போலீசார் விசாரணைக்கு பின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தவெகவைச் சேர்ந்த செல்வம் அளித்த புகாரின் பேரில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அனிதா ராதகிருஷ்ணன் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து தூத்துக்குடி எஸ்.பி அலுவலக்த்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
5 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணையைத் தொடர்ந்து திருச்செந்தூர் நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ”எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி நிர்பந்திக்கிறார்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்று கூறி தவெகவில் சேரச்சொல்லி என்னை வற்புறுத்துகிறார்கள். அது நடக்காது. எங்கள் தலைவர் என்ன சொல்கிறாரோ அதுதான் எனக்கு கட்டளை. என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுதியாக இருப்பேன். காவல்துறை அராஜகம் செய்கிறது. விஜய்யை மட்டுமல்ல யாரையும் நாங்கள் எதிர்ப்போம்” என்று கூறியுள்ளார்.
