முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் (47), முன் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 3) உத்தரவிட்டுள்ளது.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அமல்ராஜிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தவெக ஆட்சியை கவிழ்க்க, சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தின் மீது , தவெக கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தால் 35 கோடி வரை கொடுக்கிறோம் என்று தன்னிடம் சிலர் பேரம் பேசியதாக தெரிவித்திருந்தார்.
இதுத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு ஜூலை 15 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அசோக்குமாரையும் வழக்கில் சேர்த்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்தசூழலில் அசோக் குமார் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி. குமரப்பன் வரும் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை தரப்பிலிருந்து விரிவான விளக்கங்களைப் பெறுவதற்குக் கால அவகாசம் கோரி, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
