ஆளுநருக்கு உரிமையில்லை.. நிர்மல் குமார் திட்டவட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Nirmal kumar

தமிழகப் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக சார்பில் அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆளுநருக்கு ஆய்வு மேற்கொள்ள எந்தவித அதிகாரமும் இல்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று (ஜூலை 7) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “கவர்னர் இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் தங்களது அதிகாரத்திற்கு உட்பட்டு ஆய்வு செய்யலாம். ஆனால், எந்தவித அதிகாரமும் இல்லாமல் கவர்னர் எங்கும் வந்து, எந்தத் திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமையில்லை. அதனை இந்த அரசு என்றைக்கும் அனுமதிக்காது.

ADVERTISEMENT

எனவே, எங்கேயாவது தேவையில்லாமல் கவர்னர் வந்து இந்த அரசின் நிர்வாகத்திலோ அல்லது ஆய்வு செய்வேன் என்ற போக்கிலோ தலையிட்டால், அதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்படும். கண்டிப்பாக எந்த அதிகாரிகளும் அரசின் அனுமதி பெறாமல், அதற்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கக் கூடாது என்பதை இந்த அரசின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் பொழுது, கவர்னர் தேவையில்லாமல் சென்று ஆய்வு செய்வதும், தலையிடுவதும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். அவருக்கு அந்த அதிகாரம் கண்டிப்பாகக் கிடையாது. இது இங்கு மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான் நீடிக்கும். அதிகாரிகளும் இதற்கு உட்பட்டு, இது போன்ற அழைப்புகள் ஏதேனும் வந்தால் அரசின் அனுமதி இல்லாமல் எந்த ஆய்விற்கும் உட்படக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share