முதல்வர் குறித்து பேச்சு : திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

Anitha

முதல்வர் ஜோசப் விஜய் குறித்து குறித்து பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு இன்று (ஜூலை 3) தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் கடந்த ஜூன் 20ஆம் தேதி, முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து ஒருமையிலும் அவதூறாகவும் பேசியதாகத் தவெக நகரச் செயலாளர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல், அவதூறு பரப்புதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், “இந்தப் பேச்சுக்கு அவதூறு வழக்குதான் தாக்கல் செய்திருக்க வேண்டுமே தவிர, போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியாது; எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது. காவல்துறை தரப்பில், “அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கனவே 7 முறை எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். இவர் கட்டுப்பாட்டுடன் பேசியிருக்க வேண்டும். வழக்கைப்பதிவு செய்திருக்காவிட்டால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டிருக்கக்கூடும்; அதனால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், புகார்தரப்பிலும் முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “கடந்த 1967-க்குப் பின் தமிழகத்தில் திரைத்துறை சார்ந்த ஒருவர் ஆட்சி அமைத்திருக்கிறார். நாம் வாக்களித்துள்ளோம். மனுதாரர் சாதாரண குடிமகன் அல்ல, எம்.எல்.ஏ-வாக உள்ளவர் இதுபோல பேசலாமா?” என்று கேள்வி எழுப்பி, அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்குச் சென்றிருந்தபோது எம்எல்ஏ அனிதா ராதா கிருஷ்ணனை ஆத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த திமுகவினர், அவரைக் கைது செய்து அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்துக் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை அப்புறப்படுத்திய காவல்துறையினர், அனிதா ராதா கிருஷ்ணனை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரை தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share