மதுரை ஆட்சியர், ஆணையருடன் ஆளுநர் ஆலோசனை: உதயநிதி, வைகோ கடும் கண்டனம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

மதுரையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையருடன் ஆளுநர் அர்லேகர் ஆலோசனை நடத்தி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் சவுராஷ்டிரா கல்லூரி விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று (ஜூலை 2) பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் அரசு விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வெடுத்தார். அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோருடன் அவர் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். அரசின் நலத்திட்ட உதவிகளைச் செயல்படுத்துதல், சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

பிற்பகல் 12.30 மணியளவில் தொடங்கிய இந்த ஆய்வுக்கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. அப்போது நிர்வாக நடைமுறைகள், மின்னணு பயன்பாடு, நீர்நிலைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் கல்வித்துறை உள்ளிட்டவற்றில் மத்திய அரசின் திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவது குறித்து ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தமிழகத்தின் ஆளுநர்களாக இருந்த பன்வாரிலால் புரோகித், ஆர்.என்.ரவி வரிசையில் தற்போது பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தேவையற்ற முறையில் தலையிடுகிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்:

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர் ஆட்சிக்கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் — அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தியிருக்கிறார்.

அரசியலமைப்புக்கும், மாநில உரிமைக்கும் எதிரான இந்தச் செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதனை அனுமதித்த Sofa Model அரசுக்கும் கடும் கண்டனங்கள். ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களமிறங்கும் என்று அடாவடியாகப் பேசியிருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம்.

ADVERTISEMENT

ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன சமரசம் (Compromise) செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளைச் சமரசம் செய்திருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களிலெல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை. எனவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரைவார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோ கண்டனம்:

இதேபோல், ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்:

“மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில் சவுராஷ்டிரா கல்லூரி மற்றும் சென்னை தென்னிந்திய ஆய்வு மையம் இணைந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய ஐஎன்ஏ எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தின், ‘ஐஎன்ஏ வேர்களைத்தேடி’ என்ற தலைப்பிலான கட்டுரை மற்றும் குறும்படப் போட்டி பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அர்லேகர், ‘மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, நீர் எங்கே? இதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப் பற்றுதான். மதுரை இளைஞர்கள் இதை ஒரு இலக்காக மாற்றி வைகையை மீட்டெடுக்க முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எனத் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆளுநர், மதியம் அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் விதம், சட்டம், ஒழுங்கு தொடர்பான விவகாரங்கள், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பகல் 12.30 மணிக்கு துவங்கிய ஆய்வுக்கூட்டம், 1.30 மணி வரை நடந்தது.

அப்போது, நிர்வாக நடைமுறைகள், மக்கள் குறைதீர்ப்பு பணிகள், மின்னணு பயன்பாடு, நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு பணிகள், கல்வித்துறை உள்ளிட்டவற்றில் ஒன்றிய அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்துதல் குறித்த ஆளுநரின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பில் தீவிர நடவடிக்கை, சட்டம், ஒழுங்கை முறையாக பாதுகாத்தல் போன்றவற்றில் காவல் துறையினரின் தொடர் நடவடிக்கைகள் குறித்து காவல் ஆணையரிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுப் பெற்றார் என்று செய்திகள் வந்துள்ளன.

ஆளுநர் அர்லேகர் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரை அழைத்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியது அத்துமீறிய செயலாகும். மேலும் வைகை ஆற்றை சீரமைக்க ஆளுநர் மாளிகை களமிறங்கும் என்றும் பேசியிருக்கிறார். ஆளுநர் அர்லேகர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பது கடும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அரசியலமைப்பு சட்டத்தின் வரையறைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆளுநர் தொடர்ந்தால், அவருக்கு எதிராகப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என வைகோ எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் ஆளுநரை மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.



Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share