நா.மணி
“அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அடிப்படை நோக்கம் தீர்ந்துவிட்டது: இனி என்ன செய்யலாம்?” என்ற தலைப்பில் 19/6/26 அன்று ஒரு கட்டுரை வெளிவந்தது.
இந்தக் கட்டுரை, 2011 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர்கள் பணிநியமனம் விற்பனைப் பொருளாகி விட்டது; இதன் விளைவாக ‘அரசு உதவி பெறும் கல்லூரி’ என்ற அடிப்படை நோக்கமே அடிபட்டு போனது என்பதை விரிவாக விளக்குகிறது (Assistant Professor Recruitment Scam).
பேராசிரியர் பணி விற்பனை பொருள் ஆனதன் விளைவுகளையும், ஆபத்துகளையும், வலிகளையும், வேதனைகளையும் விளக்கிக் கூறுகிறது இக்கட்டுரை.
அத்துடன், பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகள் எவ்வாறு காலில் போட்டு மிதிக்கப்படுகிறது என்பதையும் இதனால் உயர் கல்வியில் ஏற்படும் விளைவுகளையும் குடிமை சமூகத்தின் முன் விளக்கிக் கூறுகிறது கட்டுரை.
தமிழ் நாடு அரசு தக்க நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் மைய நோக்கம்.
அதிகபட்ச கல்வியில் முதலீடு
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து 18 வயது நிரம்பி இருந்தால் ஒருவர் தமிழ்நாடு தேர்வாணைய தேர்வுகளில் பங்கு பெறலாம். தேர்ச்சி பெற்றால் அரசு ஊழியராக பணிக்கு வந்துவிடலாம். ஆனால் ஒருவர் உதவி பேராசிரியராக வரவேண்டும் எனில் முனைவர் பட்டம் பெற குறைந்தபட்சம் 25 முதல் 30 வயது வரை ஆகிவிடும். அடுத்து ,வேலைக்கு முயற்சி செய்து நிரந்தர பணியில் சேரும்போது சராசரியாக 35 வயதுக்கு மேலாகி விடுகிறது.
அதிகம் படித்தும் தீராத அவலம்

2011 ஆம் ஆண்டு முதல் ( பேராசிரியர் பணி பணமயமான ஆண்டு) முனைவர் பட்டம் பெற்ற பலர், பணம் இல்லை என்ற காரணத்திற்காக இன்று வரை வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள்.
ஒரு விவசாயத் தொழிலாளியின் மகன் அவர். தனது தந்தை பாம்பு கடித்து சாகும் போது இவருக்கு வயது மூன்று. இன்று நிர்வாக மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. மற்றொருவரின் தந்தை சுகாதாரப் பணியாளர்.
“நாம் இந்த வேலை செய்து பிழைக்க வேண்டிய சூழ்நிலை. மகனைக் கல்விமான் ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் முனைவர் பட்டம் பெற்று உள்ளார்.
ஒரு பெண், தந்தை ஜோதிடர். தனது பிழைப்பை ஓட்டிக் கொண்டு மகளை முனைவர் பட்டம் வரை படிக்க வைத்தார். இவர்களிடம் பணம் இல்லை. இப்படி பலரைக் காட்ட முடியும். வேலை வாங்க முடியவில்லை. நல்ல கல்வித் தகுதி பணம் இல்லை. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதி அந்த வேலைக்கு சென்று விட்டார்கள். பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர்கள் கூட இருக்கிறார்கள்.
பலர் சுயநிதிக் கல்லூரியில் கிடைக்கும் சம்பளத்தில் காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். அதுவும் கிடைக்காமல் கிடைத்த வேலைக்கு சென்று காலம் தள்ளுவோரும் உண்டு. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், சர்வதேச தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையங்கள் பல்கலைக்கழகத்தில் நன்கு படித்து, ஆராய்ச்சிக்கான நிதி நல்கை பெற்று, முனைவர் பட்டம் பெற்று வாழ்நாள் முழுவதும் நல்ல வேலையில் அமரமுடியவில்லை என்றால் அது எவ்வளவு பெரிய வேதனையான விஷயம்!
பணத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு வேலைக்கு நியமிப்பதன் விளைவுகள்:

பேராசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி மட்டுமே உடையவர்கள், எல்லாத் தகுதியும் திறமையும் உடையவர்கள் ஆகிய இரு பிரிவினரும் போட்டியிடுகிறார்கள். பணமும் தகுதியும் இருப்பவர்கள் பணியில் சேர்ந்தால் மாணவர்கள் தப்பித்தனர்.
பணம் மட்டுமே இருப்பவர்கள் பணிக்கு வந்து விட்டால் அவர்கள் ஓய்வு பெறும் வரை மாணவர்களின் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. உதாரணமாக, முப்பதாவது வயதில் ஒருவர் பணம் கொடுத்துவிட்டு வேலைக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். 60 வயது வரை, அடுத்து முப்பது ஆண்டுகள் சரியாக சொல்லித் தராமல், தொடர்ந்து மாணவர்களுக்கு துரோகம் செய்து கொண்டு இருப்பார். இவரால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஏற்படும் சமூக பொருளாதார விளைவுகளை எப்படி அளவிட முடியும்?
பணம் கொடுத்து வேலைக்கு வருவோருக்கு, கல்லூரி நிர்வாகி மீது பெயரளவு மரியாதையே இருக்கும். அவரை நேரில் பார்க்கும் பொழுது பயந்தது போல, மரியாதை தருவது போல, நடிக்கலாம். உண்மையான மரியாதை, அன்பை எதிர்பார்க்கக் முடியாது. அன்றைய சந்தை நிலவரத்தில் அதிக பட்சமான விலையை கொடுத்து பணிக்கு வந்தவர்கள், இது பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? அடுத்து இது என்னுடைய கல்வி நிறுவனம் இது என் மாணவர்கள் என்ற உணர்வு அதிகமாக பணம் கொடுத்து வந்தவர்களுக்கு எப்படி ஏற்படும்? கல்லூரிக்கு அவரால் சிறந்த பங்களிப்பை ஆத்மார்த்தமாக எப்படி நல்க முடியும்? இதையெல்லாம் மறந்து, கல்லூரி மாணவர்கள் நலன் என்ற சிந்தனையோடு வேலை செய்து கொண்டு இருப்பவர்கள் இருக்கலாம். ஆனால் எல்லோரையும் அப்படி எதிர்பார்க்க முடியாதே.
பணம் கொடுத்து வேலைக்கு வருவோர் அவலம்
தகுதி உடையவர்களோ இல்லாதவர்களோ, பணம் கொடுத்தால் வேலை. இந்த நிலையில் பலருக்கு போதுமான பணம் இருப்பதில்லை. கல்லூரிக்கு கொடுக்க வேண்டிய பணத்தில், ஒரு பகுதி இருப்பதாக வைத்துக் கொள்வோம். மற்றொரு பகுதிக்கு கடன் வாங்குகிறார். மீதமுள்ள தொகையை வட்டிக்கு வாங்குகிறார். 70 லட்சம் பணத்தை கொடுத்து பணியில் சேருபவர்கள் 35 லட்சம் கையிலிருந்தும் மீதமுள்ள தொகையை கடன் வாங்கியும் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
இதனை திருப்பி செலுத்துவதற்குள் எவ்வளவு வட்டி செலுத்தி இருப்பார்? கடனை கட்டி முடிக்கவும் பல ஆண்டுகள் ஆகும். கடனைக் கட்டி முடித்த பிறகுதானே அவர்கள் முன்னேற்றம் பற்றி யோசிக்க முடியும். வட்டிக்கு வாங்கி வேலையில் சேர்ந்தவர்கள் அவலமும் துயரமும் சொல்லி மாளாது.
பல்கலைக்கழக மானியக் குழு நெறிமுறைகள் என்ன சொல்கிறது?:

பல்கலைக்கழக மானியம் குழு, உதவிப் பேராசிரியர்கள் முதல் துணைவேந்தர்கள் வரை பணியில் எவ்வாறு நியமிக்க வேண்டும் என நெறிமுறைகளை வழங்கி உள்ளது. இந்த விதிமுறைகளின் படி ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி எந்த பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டதோ அந்த பல்கலைக்கழகம், இரண்டு பேராசிரியர்களை நிபுணர்களாக நியமிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரியில் இரண்டு நிபுணர்களை நியமிக்க வேண்டும். இத்துடன் துறை தலைவர், கல்லூரி முதல்வர், கல்லூரி செயலாளர் ஆகியோரை உள்ளடக்கிய தேர்வுக் குழு அமைக்கப்படும். இத்துடன் நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடம் இட ஒதுக்கீட்டு பிரிவைச் சேர்ந்தது என்றால், அதற்கான பார்வையாளராக ஒருவரை பல்கலைக்கழகமே நியமிக்கும்.
பணி நியமன நெறிமுறைகளின் மோசடி எப்படி நடக்கிறது?
பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்வது கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அதன் செயலாளர். அவர் சொல்வதை அப்படியே கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்கள் கல்லூரி முதல்வர் மற்றும் துறைத் தலைவர்கள். இவர்கள் நிர்வாகத்தை பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். நிர்வாகம் கை காட்டும் நபரை எவ்வாறு தேர்வு செய்வது, அதற்கான வழிமுறைகளை கண்டறிவது என்பதே, கல்லூரி முதல்வர் மற்றும் துறை தலைவரின் பணியாக இருக்கும். அதற்கான செயல் திட்டத்தில் அவர்கள் இறங்குவார்கள். அவர்கள் சொல்வதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு தாங்கள் கூறும் இடத்தில் கையொப்பம் இடுபவர்களே நிர்வாகக் குழு சார்பில் நிபுணர்கள் என்ற பெயரில் வரும் பேராசிரியர்கள். ஆக தேர்வுக் குழுவில், கல்லூரி செயலாளர், முதல்வர், துறைத் தலைவர், தலைவர் நிர்வாக தரப்பின் இரண்டு நிபுணர்கள் மொத்தம் ஐந்து பேர், பணம் பெறப்பட்ட நபரே, நேர்காணலுக்கு வந்திருக்கும் அனைவரிலும் மிகச் சிறந்தவர் என்று சான்றளிப்பார்கள். மதிப்பெண் வழங்குவார்கள்.
அற்பக் காசுக்கு ஆசைப்பட்டு உயர் கல்விக்கு துரோகம் செய்பவர்கள்

பல்கலைக்கழகம் இட ஒதுக்கீட்டு பார்வையாளராக நியமிக்கும் நபர்கள் தேர்வு குழு முடிவுகளையும் தேர்வையும் கேள்வி கேட்க முடியாது. இட ஒதுக்கீட்டு விதிமுறை மீறல்கள் இருந்தால் அது பற்றி மட்டுமே துணைவேந்தருக்கு முறையிடலாம். ஆக பல்கலைக்கழகம் நியமிக்கும் இரண்டு நிபுணர்கள் மட்டுமே சரியான நபரை கண்டறிய சுதந்திரமாக செயல்பட வேண்டியவர்கள். தரமான கேள்விகள் மூலம், தரமான நபர்களை அடையாளம் காண வேண்டியவர்கள். கறாராக மதிப்பீடு செய்து தனது மதிப்பெண்களை வழங்க வேண்டியவர்கள். துயரம் என்னவென்றால், இவர்கள் நிர்வாகம் சொல்லும் நபரை தேர்வு செய்யும் போக்கில் மதிப்பெண்களை வழங்கிவிட்டு அங்கு கொடுக்கும் சிறிய தொகைக்கும் அதீத கவனிப்புக்கும் மயங்கி இந்த அநீதிக்கு துணை போகிறார்கள். பல்கலைக்கழக மானியக் குழு நெறிமுறைகளை மழுங்கடிக்கும் பணியை தயங்காமல் செய்கிறார்கள்.
பல்கலைக்கழக மானியக் குழு நெறிமுறைகள் படி நேர்காணலுக்கு முந்தைய மதிப்பெண் வழங்கல் இருக்கிறது. கல்வித் தகுதி, பணி அனுபவம், ஆராய்ச்சி அனுபவம், ஆய்வுக் கட்டுரைகள், தேசிய தகுதித் தேர்வில் வெற்றி, ஆராய்ச்சி இதழ்களில் கட்டுரைகள், சிலர் சர்வதேச புகழ்வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் முனைவர் பட்டம் பெற்று இருப்பார்கள். இவற்றுக்கு பல்கலைக்கழக மானியக் குழு நெறிமுறைகள் படி மதிப்பெண் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண்ணை வெளிப்படைத் தன்மையோடு நேர்காணலுக்கு வருபவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் குறைவு இருந்தால் அவர்கள் அதை முறையிடலாம். தேர்வுக் குழு அதனை பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ‘வெளிப்படைத் தன்மையோடு’ என்பதே இதில் உயிர்நாடி. ஆனால் இதனைக் கண்டு கொள்வதே இல்லை. அடுத்து தாங்கள் பணம் பெற்றுக் கொண்ட நபரைத் தேர்வு செய்ய நேர்காணலில் பணம் பெற்றுக் கொண்ட நபருக்கு மிக அதிக மதிப்பெண்கள். கேட்ட கேள்விகளுக்கு மிகச் சிறந்த முறையில் பதில் அளித்த நபருக்கு குறைந்த மதிப்பெண் அளித்து, பணம் படைத்தவனை தேர்வு குழு வெற்றியாளர் என்று கைதூக்கி விடும்.
தகுதி படைத்தவர்கள் நிராகரிப்பை எப்படி கண்டறிவது?
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணி நியமனத்தில் மோசடி நடந்துள்ளது என்பதற்கு ஒரே ஆதாரம் இது தான். நேர்காணலுக்கு முந்தைய மதிப்பெண். நேர்காணல் மதிப்பெண். இரண்டையும் கூட்டியே ஒரு நபரை தேர்வு செய்ய வேண்டும். கல்வித் தகுதி ஆராய்ச்சி அனுபவம் வெளியீடுகள் நிறைய உள்ளவருக்கு நேர்காணலுக்கு முந்தைய மதிப்பெண் அதிகமாக இருக்கும். அதை ஓர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறைக்க முடியும். எனவே அதிகமாக இருக்கும். அந்த நபர்களுக்கு நேர்காணலில் மிகவும் குறைத்து போட்டிருப்பார்கள். பணம் கொடுத்தவருக்கு கல்வித் தரம் உள்ளிட்ட நேர்காணலுக்கு முந்தைய மதிப்பெண் குறைவாக இருக்கும். நேர்காணல் மதிப்பெண் அதிகமாக இருக்கும். இரண்டு அதிகமாக இருந்தால் தகுதி இருந்தும் பணம் கொடுத்து வேலைக்கு வந்துள்ளார் என்று தெரிந்து கொள்ளலாம். நேர்காணலுக்கு முந்தைய மதிப்பெண். நேர்காணல் மதிப்பெண் எப்படி வழங்குகிறார்கள் என்பதையும் சற்று தெரிந்து கொள்வோம்.
பணம் கொடுத்தவருக்கு எப்படி வேலையை கொடுக்கிறார்கள்?
விண்ணப்பம் செய்த நபர்களில் ஒருவர், நேர்காணலுக்கு முந்தைய மதிப்பீட்டில் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக வைத்துக் கொள்வோம். நேர்காணலிலும் அவரே சிறப்பாக செய்துள்ளார் எனக் கருதுவோம். பணம் கொடுக்காத நிலையில் அவர் தேர்வாக மாட்டார். அவருக்கு மிகக் குறைந்த மதிப்பெண் வழங்குவார்கள். ஆனால் பணத்தை மட்டும் ஏற்கனவே கொடுத்துவிட்ட நபருக்கு நேர்காணலில் அதிகபட்ச மதிப்பெண் வழங்கி தகுதியற்றவர்களையும் தகுதி உள்ளவர்களாக மாற்றி கொடுக்கும் பணியில் ஈடுபடுகிறது பணம். பணம் கொடுத்தவருக்கு பல நேரங்களில் கேட்கப்படும் கேள்விகள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு இருக்கும். முன்கூட்டியே கேள்விகளைக் கொடுத்தும் சரியாக பதில் கூறாமல் வெறுமனே நின்று கொண்டு இருப்பவர்கள் தேர்வு செய்யப்பட்ட இடங்களும் உள்ளன.
நேர்மையான பேராசிரியர் நியமனமே நியாயமான உயர்கல்வி

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இந்த அதர்மம் அரங்கேறி வருடம் 15 ஆகிவிட்டது. அரசோடு இணைந்து உயர் கல்வி சேவை செய்கிறோம் என்று புறப்பட்டவர்கள், தங்கள் அறக்கட்டளை வழியாக அரசின் ஆதரவோடு இந்த அதர்மத்தை புரிந்து வருகிறார்கள். இந்த அநீதி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் தெரிகிறது. உயர் கல்வி தொடர்பான அனைவருக்கும் தெரிகிறது. சங்கங்களுக்கு தெரிகிறது.எல்லோரும் வாய்மூடி மௌனியாக இருக்கிறார்கள்.
பேராசிரியர் பணியிடம் பணமயமாகிவிட்டது என்று தெரிந்தவுடன் இது தொடர்பான அலுவலகங்கள் பல்கலைக்கழகம் தங்கள் பங்கிற்கு ஒரு தொகையை வேண்டும் என்று அடம் பிடித்து பிடுங்கிக் கொள்கிறார்கள். இந்த வலியை வேதனையை தீர்க்க வேண்டியது நிரந்தர தீர்வு காண வேண்டியது புதிய அரசின் கடமை.

