அரசு வேலை மோசடி வழக்கு: இடைத்தரகர் இளஞ்செழியன் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை சீல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியளார் என்று கூறி அரசு வேலைக்கு 23 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இளஞ்செழியன் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்புச் சார்பு ஆய்வாளர் சீனிவாசன், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், பொறியியல் பட்டதாரியான தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவரிடம் ரூ.23 லட்சம் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் எனக் கூறி, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இளஞ்செழியன் காட்டியதாகச் சீனிவாசன் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட இளஞ்செழியன், போக்குவரத்துத் துறையில் வேலையும் வாங்கித் தரவில்லை; வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை.

ADVERTISEMENT

இது குறித்து இளஞ்செழியனிடம் கேட்டபோது, “நான் கொடுத்த ரூ.23 லட்சத்தில் ஒரு பகுதியை அமைச்சராக இருந்த சிவசங்கரிடம் கொடுத்ததாக அவர் கூறினார்” என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர், இளஞ்செழியன் தனது உதவியாளர் இல்லை என தெரிவித்துள்ளார். “அவர் என் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பெயரை தவறாக பயன்படுத்தியவர்” என்று விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஜூன் 24-ஆம் தேதி இளஞ்செழியனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுப்பிய சம்மனை ஏற்று, முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடந்த ஜூலை 1-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானார்.

இதனிடையே, இந்த வழக்குத் தொடர்பாக இளஞ்செழியனின் ஜெயங்கொண்டம் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். தீவிர சோதனைக்குப் பிறகு, இளஞ்செழியனின் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அங்கு நடைபெற்ற சோதனையில் வழக்குத் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share