அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எம்.எல்.ஏ. (S.S. Sivasankar) இன்று ஜூலை 1-ந் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜரானார்.
சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்ஐ. சீனிவாசன், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், “ பொறியியல் பட்டதாரியான என் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவரிடம் ரூ.23 லட்சம் கொடுத்தேன்.
இளஞ்செழியன் தன்னை அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கருக்கு நெருக்கமானவர் என கூறி அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை காட்டினார்; அதை நம்பி ரூ.23 லட்சம் பணம் கொடுத்தேன்.
ஆனால், இளஞ்செழியன் பணத்தைப் பெற்றுக் கொண்டு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தரவும் இல்லை; கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவும் இல்லை. இது குறித்து இளஞ்செழியனிடம் கேட்ட போது, நான் கொடுத்த பணம் ரூ.23 லட்சத்தில் ஒரு பகுதியை அமைச்சராக இருந்த சிவசங்கரிடம் கொடுத்தேன் என்றார்.
இதனால் அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கரிடம் புகார் தெரிவித்தேன். அவரும் என் மகனுக்கு வேலை கிடைக்கும் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால் என் மகனுக்கு வேலையும் கிடைக்கவில்லை; நான் கொடுத்த ரூ.23 லட்சம் பணமும் திரும்ப கிடைக்கவில்லை; ஆகையால் என்னிடம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இதனடிப்படையில் ஜூன் 24-ந் தேதி இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார். அப்போது, எஸ்.எஸ்.சிவசங்கர், இளஞ்செழியன் தனது உதவியாளர் அல்ல என்றும், அவருக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை விசாரணைக்கு ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பாக எஸ்.எஸ். சிவசங்கர் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
