முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணையும் சி. விஜயபாஸ்கர்

Published On:

| By Pandeeswari Gurusamy

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சமீபத்தில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நாளை த.வெ.க.-வில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் மற்றொரு அணியாகவும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து செயல்பட்டு வந்தனர்.

ADVERTISEMENT

இதனிடையே, தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பில் இருந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
இதனிடையே மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க. வில் இணைந்தனர்.

ADVERTISEMENT

அதேபோல் சமீபத்தில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான சி.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு, அதிமுகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் நாளை அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக சி.விஜயபாஸ்கர் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய ‘கோவிட்’ பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள்.

நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்கான மாபெரும் இணைப்பு விழா நாளை (ஜூலை 02) காலை 9.00 மணி முதல், மகாபலிபுரம் Four Points by Sheraton ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஊடக நண்பர்கள் நேரில் கலந்து கொண்டு, நிகழ்வை பதிவு செய்து, தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கிட அன்புடன் அழைக்கின்றேன்”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share